திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் கோவில்
திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் கோவில்

ஏற்றினை இமயத்துளெம் மீசனை
இம்மையை மறுமைக்கு மருந்தினை

ஆற்றலை அண்டத்தப்புறத் துய்த்திடும்
ஐயனைக்கையி லாழியொன் றேந்திய

கூற்றினை குருமாமணிக் குன்றினை
நின்றவூர் நின்றநித்திலத் தொத்தினை

காற்றினைப் புனலைச் சென்றுநாடிக்
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே.

- திருமங்கையாழ்வார் பாசுரம்


தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தில் திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோவில் உள்ளது. ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 திவ்யதேசங்களில் இது 16வது திவ்ய தேசம்.

இத்தலம் கிருஷ்ண மங்கள க்ஷேத்திரங்களில் ஒன்றாகும். மூலவர் நாமம் பக்தவத்சலப் பெருமாள், பத்தராவிப் பெருமாள். உற்சவர் பெரும்புறக்கடல். தாயார் கண்ணமங்கை நாயகி, அபிஷேகவல்லி. தல விருட்சம் மகிழமரம். தீர்த்தம் தர்ஷண புஷ்கரணி. தலத்தின் புராணப் பெயர் லக்ஷ்மி வனம். எட்டாம் நூற்றாண்டில் சோழர்களாலும் பின்னர் தஞ்சை நாயக்கர்களாலும் பராமரிக்கப்பட்டது. திருமங்கை ஆழ்வார், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் ஆகியோர் பெருமாளைப் போற்றிப் பாடியுள்ளனர்.

ஒரு தலத்திற்கு இருக்கவேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்ரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களும் அமையப் பெற்றதால் 'ஸப்தாம்ருத க்ஷேத்ரம்' என்ற பெயர் இத்தலத்திற்கு உண்டு. பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து கற்பக விருட்சம், காமதேனு ஆகியவை தோன்றிய பின்னர் மகாலக்ஷ்மி வெளிப்பட்டாள். முதலில் அவள் பெருமாளின் .அழகிய தோற்றத்தைக் கண்டு, மனதில் இருத்தி, பெருமாளை அடையத் தவம் இருந்தாள். இதையறிந்த பெருமாள், தனது மெய்க்காவலரான விஷ்வக்சேனரை முகூர்த்த நாள் குறிக்கச் சொன்னார். பின் லக்ஷ்மிக்குக் காட்சி தந்து, 33 கோடி தேவர்கள் புடைசூழ இத்தலம் வந்து லக்ஷ்மியைத் திருமணம் செய்துகொண்டார். அதனால் பெருமாளுக்கு 'பெரும்புறக்கடல்' என்ற பெயர் ஏற்பட்டது. மஹாலக்ஷ்மி தவம் செய்ததால் 'லக்ஷ்மி வனம்'. பெருமாள், தாயார் திருமணம் நிகழ்ந்த தலம் என்பதால் கிருஷ்ண மங்கள க்ஷேத்ரம் என்ற பெயர் உண்டானது. திருமணத்தைக் காண 33 கோடி தேவர்களும் இங்கு வந்ததோடு, எப்போதும் இந்தத் திருக்கோலத்தைப் பார்த்தவண்ணம் இருக்க நினைத்து, தேனீக்கள் வடிவெடுத்து, தினமும் பெருமாளைத் தரிசித்து மகிழ்கின்றனர் என்பது ஐதீகம். இன்றும் தாயார் சன்னிதி வடபுறத்திலுள்ள தேன்கூட்டில் இருக்கும் தேனீக்கள் பக்தர்களை ஒன்றும் செய்வதில்லை. மோட்சம் வேண்டுபவர்கள் ஓர் இரவு இங்கு தங்கினால், பெருமாள் ஆவி ரூபத்தில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதால் பத்தராவி என்ற பெயரும் பெருமாளுக்கு உண்டு.



மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்ததால் வானத்தை அளந்த காலை பிரம்மா தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்தார். அதிலிருந்து தெறித்த துளி இங்கு விழுந்தது. சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க அலைந்து திரிந்த பின், இந்த புஷ்கரணியைக் கண்டதும் உடனே சாபம் நீங்கியது. அதனால் 'தர்ஷன புஷ்கரணி' என்ற பெயர் ஏற்பட்டது. இங்கு தாயாரைப் பெருமாள், தர்ஷண தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து பட்டமகிஷி ஆக்கினார். ஆதலால் தாயாருக்கு அபிஷேகவல்லி என்றும் திருநாமம்.

கோவில் 10 ஏக்கர் பரப்பில் மூன்று பிரகாரம், ஐந்து ராஜகோபுரம் கொண்டிருக்கிறது. கோதண்ட ராமர், ஹயக்கிரீவர், சங்கநிதி, பதுமநிதி சன்னிதிகள் உள்ளன. கருடாழ்வார் பிரமாண்டமாக நின்றகோலத்தில் அருள்புரிகிறார். குழந்தை பாக்கியம், வேலை வேண்டுவோர், நினைத்தது நடக்க இவரை வலம்வந்து பிரார்த்திக்கின்றனர்.

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தொகுத்த நாதமுனிகளுக்கு திருக்கண்ணமங்கையாண்டான் என்றொரு சீடர் இருந்தார். அவர் பெருமாளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ஒரு சமயம் கோவிலைச் சுத்தம் செய்து, வேதபாராயணம் செய்துகொண்டே நாய் வடிவம் எடுத்து, மூலஸ்தானத்திற்குள் ஓடி, ஜோதி உருவெடுத்து பெருமாளுடன் கலந்தார். அதனால், இவ்வூருக்கு இவரது பெயர் நிலைத்துவிட்டது. ஆனிமாதம் திருவோண நட்சத்திரம் இவரது மகா நட்சத்திரமாகக் கொண்டாடப்படுகிறது.

சித்ரா பௌர்ணமியின் போது 10 நாள் உற்சவம் நடைபெறுகிறது. நவராத்ரி, வைகுண்ட ஏகாதசி, விஜயதசமி போன்றவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. காலை 6.00 மணிமுதல் 12.00 மணிவரை, மாலை 5.00 மணிமுதல் 8.30 வரை ஆலயம் திறந்திருக்கும்.

சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com