தென்றல் பேசுகிறது...
பைடன்-ஹாரிஸ் நிர்வாகத்தில் இருபதுக்கு மேற்பட்ட இந்தியர்கள் பல்வேறு உயர்நிலைப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டிருப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. கார்ப்பொரேட் உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைமைப் பதவியில் இருக்கும் இந்தியரின் பட்டியலும் கூகிள், IBM, மைக்ரோசாஃப்ட், பெப்சி, சிட்டிபாங்க், FedEx என்று நீளமானதுதான். பொதுவாழ்விலும், நிர்வாகம், கலை மற்றும் பிற அறிவுசார் துறைகளிலும் முத்திரை பதிக்கும் அமெரிக்கத் தமிழர்கள்மீது உடனடியாக வெளிச்சம் பாய்ச்சுவதைத் தென்றல் தொடக்கம் முதலே வழக்கமாகக் கொண்டுள்ளது. நவம்பர் 2020 முதல் அமெரிக்கப் படையின் தலைமைத் தகவல் அதிகாரியாக டாக்டர் ராஜ் ஐயர் நியமிக்கப்பட்டிருப்பதும் இவ்வகையில் குறிப்பிடத் தக்கதே.

★★★★★


அமெரிக்காவில் ஃபிப்ரவரி 3ம் தேதி ஒரு நாளில் மட்டும் கோவிட்-19 தொற்று தாக்கப்பட்டோர் எண்ணிக்கை 139,832 (இறந்தவர் எண்ணிக்கை 1950). ஒருநாளைக்கு 3 லட்சம் என்றெல்லாம் இருந்த நிலையோடு ஒப்பிட்டால், இது நல்ல முன்னேற்றம் என்றாலும், மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட இந்தியா போன்ற நாடுகளோடு ஒப்பிடும்போது, கவலைக்குரியதுதான். அதே ஃபிப்ரவரி 3ம் நாளன்று இந்தியாவில் நோய்த்தொற்று கண்டோர் எண்ணிக்கை 8,635 தான் (இறந்தவர், 94). இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள், அதற்கு மக்கள் கட்டுப்பட்டது, பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை, நிவாரண மருத்துவம் எனப் பல்வேறு முனைகளிலும் பாரதத்தின் சிறப்பான செயல்பாடு உலகளாவிய பாராட்டைப் பெற்றுள்ளது. சடுதி மாற்றம் (mutation) அடைந்த வைரஸ் பரவல், இரண்டாவது மூன்றாவது அலைப் பரவல் என்றெல்லாம் உலகநாடுகள் திண்டாடிக்கொண்டிருக்கும் போது இந்தியா மிக விரைவாகத் தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்து, சோதித்து, கற்பனைக்கெட்டாத அளவில் உற்பத்தி செய்து விலையின்றி ஏழை நாடுகளுக்குக் கொடுப்பதோடு பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருவது பெருமைக்குரியது. இந்திய வழிமுறைகளை அவதானித்துப் பின்பற்றினால் அமெரிக்காவிலும் பெரிய வெற்றி காண்பது சாத்தியமே.

★★★★★


தமிழ்த்தாத்தா உ.வே.சா., கி.வா.ஜ. போன்ற தமிழ்ப் பேரறிஞர்களை ஆசிரியர்களாகக் கொண்டிருந்த 'கலைமகள்' மாத இதழ் 90வது ஆண்டினைத் தொடங்குகிறது. இந்த மைல்கல் ஆண்டில் இதன் ஆசிரியரான கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்களும் அந்தப் பொறுப்பின் வெள்ளிவிழாவைக் காண்கிறார். நூலாசிரியர், திருக்குறள் ஆர்வலர் எனப் பிறவகைச் சிறப்புகளையும் கொண்ட இவரது நேர்காணல் இந்த இதழின் அற்புதத் தகவல் சுரங்கம். 65 ஆண்டுகளாகத் தமிழ்ப் படைப்புலகை வளப்படுத்தி வரும் விமலா ரமணி பற்றிய கட்டுரை மற்றொரு மாணிக்கம். மிகுந்த பரபரப்போடு நகரும் நீலகண்ட பிரம்மச்சாரி பற்றிய கட்டுரை, சிறப்பான சிறுகதைகள் எல்லாமே இவ்விதழை ஜொலிக்க வைக்கின்றன. வாசித்த கையோடு உங்கள் கருத்தை எங்களுக்கு எழுத மறக்காதீர்கள்.
வாசகர்களுக்கு வேலன்டைன் நாள் வாழ்த்துகள்.

தென்றல்
பிப்ரவரி 2021

© TamilOnline.com