செல்போனில் படம் பிடிக்கப்பட்ட முக்கியத் தமிழ்ப் படம் இது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்திருப்பதுடன், தயாரித்து கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் சந்தோஷ் நம்பிராஜன். இவர், ஏற்கனவே 'டூலெட்' என்ற படத்தில் நாயகனாக நடித்துப் பாராட்டு பெற்றவர். ஹரிணி கதாநாயகியாக அறிமுகமாகிறார். உடன் 30 புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். சந்தோஷ் நம்பிராஜன், "இது கமர்ஷியல் குடும்பப் படம். சென்னையில் இரவுநேர கையேந்தி பவன் நடத்துகிறவன் நாயகன். வாடகைக்கு இடம் எடுத்து நிலையான இடத்தில் தொழில் செய்ய வேண்டும், கல்லாவில் மனைவியை உட்கார வைக்கவேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால், ஒரு கொலைப்பழியில் சிக்கிக் கொள்கிறான். அதிலிருந்து விடுபட அவன் சிங்கப்பூர் செல்கிறான். அங்கிருந்து மலேசியாவுக்குச் செல்கிறான். இந்தப் பயணமும், கொலைப்பழியிலிருந்து எப்படி விடுபட்டான் என்பதும்தான் படத்தின் கதை" என்கிறார். மேலும் அவர், "ஐபோன் 11 ப்ரோ செல்போனில் படத்தை எடுத்திருக்கிறோம். திரையரங்கில் வெளியிடும் வகையில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியிருக்கிறோம். தரத்தை மேம்படுத்த 'ஃபிலிமிக் ப்ரோ' என்ற செயலியைப் பயன்படுத்தியிருக்கிறோம்" என்கிறார். அகண்ட திரையுலகில் 'அகண்டன்' ஒரு புரட்சிதான்.
தொகுப்பு: அரவிந்த் |