பர்க்கெலியில் 'தமிழ்நாட்டுக் கோவில்கள்' கருத்தரங்கு
தமிழ் நாட்டுக் கோவில்களைப் பற்றிய கருத்தரங்குகளில் பங்கேற்பது மிக அரிய வாய்ப்பு.

சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதிவாழ் மக்களுக்கு அந்த அரிய வாய்ப்பைத் தந்தது பர்க்கெலியின் கலி·போர்னியா பல்கலைக்கழகம். பர்க்கெலி தமிழ்ப் பீடம், தெற்காசிய ஆய்வு மையம், தெற்கு மற்றும் தென்கிழக்காசியத் துறை, மற்றும் டௌன்செண்ட் மையம் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ள வட அமெரிக்கா எங்குமிருந்து ஆராய்ச்சியாளர்கள் வந்திருந்தனர். குறிப்பாக இந்திரா விஸ்வநாதன் பீட்டர்சன், வசுதா நாராயணன், லெஸ்லி ஓர், ஸ்டீவன் ஹாப்கின்ஸ், தவேஷ் சொனேஜி, பத்மா கைமால் ஆகியோரின் அண்மைக்கால ஆராய்ச்சிகளைப் பற்றி அறிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பளித்தது.

பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள், கங்கர்கள், நாயக்கர்கள், மராத்தியர்கள் என்று இடைக்கால மற்றும் பிற்கால அரசர்களின் கோவில்களைப் பற்றிப் பல கட்டுரைகள் கருத்தரங்கில் வழங்கப்பட்டன. பர்க்கெலியின் ஆராய்ச்சி மாணவர்களும், இளநிலைத் தமிழ் மாணவர்களும் மட்டு மல்லாது, வளைகுடாப் பகுதி அமெரிக்கத் தமிழர்களும் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். இது போன்ற கருத்தரங்குகளோடு, பெரிய கண்காட்சியும் வைத்து, இந்தியா விலிருக்கும் அறிஞர்களும் வலை வழியாகப் பங்கேற்கும் வாய்ப்பளித்துத் தமிழகக் கோவில்கள், மற்றும் இடைக்காலப் பண்பாட்டுக் கூறுகள் பற்றிய செய்திகளை அமெரிக்கர்களுக்கும், அமெரிக்கத் தமிழர்களுக்கும் கொண்டுவர ஏது செய்ய வேண்டும்.

வட அமெரிக்கத் தமிழ் அமைப்புகள், வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் ஆகியன பர்க்கெலியுடன் இணைந்து செயல்பட்டால் அத்தகைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய இயலும்.

மணி மு. மணிவண்ணன், பேரா. சுவாமிநாதன்

© TamilOnline.com