ஷிரடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்று
ஷிரடிக்கு ஜட்ஜ் ஒருவர் வருவதுண்டு. ஒருமுறை தன் மனைவியையும் மகனையும் பாபாவுடன் இருக்கச் சொல்லிவிட்டு அவர் சில நாட்கள் ஊருக்குச் சென்றார். ஊருக்குப் புறப்படும்போது தன் மகனிடம் "இவர் கடவுளேதான்" என்று கூறிவிட்டுச் சென்றார். சில நாட்களுக்குப் பின்னர் அவரது மனைவி, மகனை அழைத்துக்கொண்டு மன்மாட் என்ற ஊருக்குச் சென்றார். அங்கே ஒருவர் சங்கீத உபன்யாசமாகப் புராணக்கதை சொல்லிக்கொண்டிருந்தார். சில நிமிடங்களிலேயே அவர் சாயிபாபாவைப் பைத்தியம், ஏமாற்றுக்காரர் என்று கூறத் தொடங்கினார். மகனால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அம்மாவின் புடவைத் தலைப்பைப் பிடித்து இழுத்து மீண்டும் பாபாவிடம் திரும்பிட வைத்தான்.

மறுநாள் காலையில் பாபாவிடம் ஆசீர்வாதம் பெறப் போனபோது அவர் ஏன் திரும்பி வந்துவிட்டீர்கள் என்று கேட்டார். உபன்யாசகர் பேசியது பற்றி அவர்கள் கூறினார்கள். எல்லோரும் பாபாவைப் 'பிரபு' என்று அழைப்பதை அந்தப் பையன் கேட்டிருக்கிறான். பௌராணிகரின் கடுஞ்சொற்களைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவன் அழுதான். பாபா தமாஷாக, "நான் மனிதன்தான். கதைக்காரன் சொன்னது சரிதான். நான் ஒரு பைத்தியக்காரன். மக்கள் எதை முக்கியமானதென்று நினைக்கிறார்களோ நான் அதைப் பயனற்றதென்று சொல்லி அவர்களை ஏமாற்றுகிறேன்" என்று சொன்னார்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே பட்டேல் என்பவர் வந்தார். தன் மகனை பாபா எப்படி ஓர் ஆபத்திலிருந்து நான்கு கைகளால் காப்பாற்றினார் என்பதை அவர் விவரித்தார். "ஆமாம், நான் அவன் விழுந்தபோது நான்கு கைகளாலும் பிடித்துக்கொண்டேன்" என்றார் பாபா. பட்டேல் நன்றிக் கண்ணீர் சிந்தினார். ஆனால் இந்தப் பையன் "பாருங்கள், நான் சொன்னபடி நீங்கள் கடவுளே. உங்களுக்கு விஷ்ணுவைப் போல நான்கு கைகள்" என்று கூவினான். பாபா சிரித்தார். அவர் அந்தப் பையனை உள்ளே அழைத்துக்கொண்டு போய் நான்கு கைகளோடு விஷ்ணுவாக தரிசனம் கொடுத்தார்.

அவன் அதற்குப் பின் ஷிரடியில் 26 வருடம் இருந்தான். பாபா 'போன பின்னரே' அவன் போனான். சன்னியாசம் வாங்கிக்கொண்டு பெரிய ரிஷி ஆகிவிட்டான்.

நன்றி: 'சனாதன சாரதி', மார்ச் 2019

பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா

© TamilOnline.com