ஹரிவராசனம் விருது
கேரள அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து, இசைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து, ஆண்டுதோறும் 'ஹரிவராசனம் விருது' வழங்கிச் சிறப்பிக்கிறது. இவ்விருதை இதுவரை கே.ஜே. யேசுதாஸ், கங்கை அமரன், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், சித்ரா, பி. சுசீலா, இளையராஜா ஆகியோர் பெற்றுள்ளனர். 2020ஆம் ஆண்டு விருதுக்குத் தமிழகத்தின் பிரபல பக்திப் பாடகர் வீரமணி ராஜு தேந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக இவர் பாடிய ஐயப்பன் பாடல்கள் மிகவும் புகழ் பெற்றவை.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் மதநல்லிணக்கத்திற்காக இசைமூலம் பாடுபட்டு வரும் வீரமணி ராஜுவைச் சிறப்பிக்கும் வகையில், அவர் இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 'Worshipful Music Genius' என்ற பட்டத்துடன், ஒரு லட்சம் பரிசுத்தொகையும், பாராட்டுப் பத்திரமும் இவ்விருதில் அடங்கும்.

பக்தியிசைப் பாடகருக்குத் தென்றலின் வாழ்த்துகள்!

© TamilOnline.com