விஷ்ணுபுரம் விருது
அரசுசார் அமைப்புகளாலும் கல்வித்துறையாலும் கௌரவிக்கப்படாத மூத்த படைப்பாளிகளைக் கௌரவிக்கும் வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் நண்பர்களால் 2010ல் ஆரம்பிக்கப்பட்டது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம். இது ஆண்டுதோறும் தகுதிவாய்ந்த படைப்பாளிகளைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது. இதுவரை ஆ. மாதவன், பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப், ஞானக்கூத்தன், தேவதச்சன், வண்ணதாசன், சீ. முத்துசாமி, ராஜ் கௌதமன், கவிஞர் அபி போன்றோர் விஷ்ணுபுரம் இலக்கிய விருது பெற்றுள்ளனர். 2020ஆம் ஆண்டுக்கான விருது எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பரிசு பெறுபவர் குறித்த ஆவணப்படத்துடன் அவரது வாழ்க்கை, படைப்பு பற்றிய புத்தகங்களும் விருது விழாவின் போது வெளியிடப்படுவது ஒரு சிறப்பு. 'நடன மங்கை', 'அவரவர் வழி', 'நானும் ஒருவன்', 'மாபெரும் சூதாட்டம்', 'இடப்பக்க மூக்குத்தி', 'நள்ளிரவில் சூரியன்', 'பின் நவீனத்துவவாதியின் மனைவி', 'பின்னணிப் பாடகர்' போன்றவை சுரேஷ்குமாரின் சிறுகதைத் தொகுப்புகளாகும். 'கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்', 'அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்' - இவரது நாவல்கள். சுரேஷ்குமார இந்திரஜித் பெறும் முதல் இலக்கிய விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. விருது ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும், கேடயமும், கொண்டது.

விருதாளருக்குத் தென்றலின் வாழ்த்துகள்!

© TamilOnline.com