ஏப்ரல் 24, 2005 அன்று சங்கீதாவின் வயலின் இசை அரங்கேற்றம் மாலிபு கோவில் (லாஸ் ஏஞ்சலஸ்) கலையரங்கில் நடைபெற்றது. இவர் லக்ஷ்மிநாராயணா இசைப்பள்ளியின் மாணவி. அன்று இவரது பிறந்த நாளும் ஆகும். தனது தாத்தா லக்ஷ்மிநாராயண ஐயரிடம் பயிலத் தொடங்கி, தன் தாயார் கானசரஸ்வதியிடம் தொடர்ந்து வயலின் கற்றவர். குருவும் தாத்தாவுமாகிய லக்ஷ்மிநாராயண ஐயருக்குத் தன் வயலின் இசையைச் சமர்ப்பித்து மூன்று காலத்தில் மோகனவர்ணத்தை வாசித்து பலத்த கரகோஷத்தைப் பெற்றார் சங்கீதா.
அந்தரூப சிவதேவா (தம்புரா), நிர்மல் நாராயணன் (மிருதங்கம்), ஜான் பெர்கமோ (கஞ்சிரா), லியோனஸ் சின்மன் (கடம்) ஆகியோர் பக்கம் வாசித்து நிகழ்ச்சியைச் சோபிக்கச் செய்தனர்.
வயலின் வாசிப்பிலும், கர்நாடக இசையிலும், பரதநாட்டியத்திலும் தேர்ச்சி பெற்ற சங்கீதாவின் மாமாக்கள் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் எல். வைத்தியநாதன். டாக்டர் எல். சுப்ரமணியம், டாக்டர் எல். சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. |