தென்னிந்தியத் திரையுலகில் குறிப்பிடத் தகுந்த கலை இயக்குநராகவும், நவீன ஓவியம், திரைப்படம், நாடகம் போன்ற துறைகளில் சாதனை படைத்தவருமான பி. கிருஷ்ணமூர்த்தி காலமானார். 1943ல், பூம்புகாரில் பிறந்த இவர், ஓவிய ஆர்வத்தால் சென்னை கவின்கலைக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். பிரபல இயக்குநர் ஜி.வி. ஐயர் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். முதல் படம் 'ஹம்சகீதை' என்னும் கன்னடப் படம். தொடர்ந்து ஜி.வி. ஐயர் இயக்கிய 'ஆதிசங்கரர்', 'மத்வாச்சார்யா', 'ராமானுஜாச்சார்யா' போன்ற படங்களுக்குக் கலை இயக்குநராகப் பணியாற்றினார். புராணம் மற்றும் வரலாறு சார்ந்த படங்களுக்குப் பின்னணி அமைப்பதில் தேர்ந்தவரெனப் புகழைப் பெற்றார். 'கண் சிவந்தால் மண் சிவக்கும்' இவரது முதல் தமிழ்ப்படம். தொடர்ந்து பல தமிழ் மற்றும் மலையாளப் படங்களுக்குக் கலை இயக்குநராகப் பணியாற்றினார். 'ஸ்வாதித் திருநாள்', 'வைசாலி', 'ஒரு வடக்கன் வீர கதா', 'பெருந்தச்சன்' போன்ற படங்கள் இவருக்குப் பெயர்சொல்லும் படங்களாக அமைந்தன.
தமிழில் 'நாடோடி தென்றல்', 'வண்ண வண்ணப் பூக்கள்', 'இந்திரா', 'சங்கமம்', 'பாரதி', 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி', 'நான் கடவுள்' போன்ற படங்களுக்கு கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். ஐந்து முறை கேரள அரசின் விருதை வென்றவர். சிறந்த கலை இயக்குநருக்கான தேசிய விருதையும் பெற்றவர். உடல்நலக் குறைவால் இவர் காலமானார்.
தமிழ்த் திரையுலகின் முன்னோடிக் கலை இயக்குநருக்கு தென்றலின் அஞ்சலி! |