வயலின் மேதை டி.என். கிருஷ்ணன் காலமானார். அக்டோபர் 6, 1928ல் கேரளாவில் பிறந்த இவருக்குத் தந்தையே குரு. எட்டாவது வயதில் அரங்கேற்றம் நிகழ்ந்தது. பின்னர் அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் சீடரானார். அவரிடம் பயின்று மேதைமையை வளர்த்துக்கொண்டார். ஆலத்தூர் சகோதரர்கள், செம்பை வைத்தியநாத பாகவதர், முசிரி சுப்பிரமணிய ஐயர், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் போன்றோருக்கு பக்கம் வாசித்த பெருமை இவருக்கு உண்டு.
எம்.எஸ். கோபாலகிருஷ்ணன், லால்குடி ஜயராமன், டி.என். கிருஷ்ணன் மூவரும் வயலின் மூவராகக் கருதப்படும் சிறப்பைப் பெற்றிருந்தனர். சென்னை இசைக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். டெல்லி பல்கலையைச் சார்ந்த இசை மற்றும் நுண்கலைப்பள்ளியில் 'டீன்' ஆகப் பணிபுரிந்தார். சங்கீத நாடக அகாதமியின் துணைத்தலைவராகப் பொறுப்பு வகித்திருக்கிறார். இந்திய அரசின் 'பத்மஸ்ரீ', 'பத்மபூஷண்' விருதுகளைப் பெற்றவர். சங்கீத நாடக அகாதமி விருது, சங்கீத கலாநிதி விருது, சங்கீத கலாசிகாமணி, தமிழிசைச் சங்கத்தின் இசைப்பேரறிஞர் போன்ற விருதுகளும் பெற்றவர். திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாகத் திகழ்ந்த இவர், 92ம் வயதில் நவம்பர் 2, 2020 அன்று காலமானார்.
வயலினிசைப் பிதாமகருக்குத் தென்றலின் அஞ்சலி! |