இலைகள் லேசாக உதிர்ந்து கொண்டிருந்தன...
"எலே! கோபுன்றவன் யாருடா?"

காதில் விழுந்தும் முருகன் பதில் சொல்லாமல் பக்கத்தில் இருந்த வேப்ப மரத்தில் அணில்கள் ஓடிப்பிடித்து விளையாடுவதைப் பார்த்துக்கொண்டு இருந்தான். உரமூட்டைகள் ஏற்றப்பட்ட வண்டியை வயலுக்கு இழுத்துக் கொண்டு டிராக்டர் சத்தமிட்டுக்கொண்டு சென்றது. அதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தவனைப் பார்த்த வீரண்ணன் மறுபடியும் கேட்டார்.

"என்னாடா எலே! கேட்டது காதுல உழலியா? கோபுன்றது யாருடா?"

தலை குனிந்துகொண்டே முருகன் மெதுவாகச் சொன்னான். "என்னாங்கய்யா தெரியாத மாதிரி கேக்கறீங்க?"

"தெரியும்லே! ஒன் வாயால சொல்லு."

"என் அண்ணாருதாங்க"

"எலே! இதைச்சொல்ல இவ்ளோ நேரமாச்சா ஒனக்கு, சரி, ஒன்னைப் படிக்கவச்சது யாரு?"

"என் அண்ணாத்ததான்; இப்ப என்னாங்கய்யா அதுக்கெல்லாம்" "இல்ல, அதெல்லாம் ஒனக்கு ஞாபகம் இருக்குதான்னு பாத்தேன்"

அப்பொழுது தன் வயலுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கோபால்சாமி ரெட்டியார் இவர்கள் அருகில் வந்து வண்டியை நிறுத்தி, "என்னா வாத்யாரே? இன்னிக்கு ஸ்கூலுக்குப் போலியா? என்றார் முருகனைப் பார்த்து. முருகன் பதிலுக்கு, "ஐயா, இன்னிக்கு ஞாயித்துக் கெழமைங்க" என்றான்.

வீரண்ணன் ரெட்டியாரைப் பார்த்து, "என்னா இன்னிக்கு நாத்து உடறீங்களா" என்று கேட்டார். "ஆமாம் வீரண்ணா, ஒன்ன மாதிரி குத்தகைக்கு உட மனசு வரமாட்டேங்குது; போயி லோலோன்னு அலைய வேண்டியிருக்கு" என்றார்.

பதிலுக்கு வீரண்ணனும், "ஆமாங்க நான் என்ன ஒங்களமாதிரி பெரிய குடும்பஸ்தனா? எனக்கும் என் பொண்ணுக்கும் கொஞ்சம் வந்தா போதுமில்ல" என்றான்.

"அதுவும் சரிதான், பொண்ணுக்கு வந்த மோழியனூரு வரனு என்னாச்சு?"

"அடுத்த வாரம் பாக்க வரேன்னு சொல்லியிருக்காங்க."

"அப்படியா? சீக்கிரம் பாத்து முடிச்சுடு, நான் வரேன்" என்று சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பிச் சென்றார்.

"ஐயா எனக்கு எல்லாம் ஞாபகத்தில இருக்கு. அதுக்காக இதை இப்படியே விட்டுக் கொடுத்திடணுமா?"

"எதை?"

"என்னாங்கயா தெரியாதமாதிரி கேக்கறீங்க. அதெல்லாம் எனக்குத் தெரியாது. மோட்டர் இருக்கற நெலந்தான் எனக்கு வேணும்."

"அதைத்தான் ஒன் அண்ணன் கோபுவும் கேக்கறான்."

"ஏனுங்க ஐயா, தம்பிக்கு அண்ணன் கொஞ்சம் விட்டுக்கொடுக்கக் கூடாதா?"

"இதையேதான் அவனும் கேக்கறான். வளத்துப் படிக்கவச்ச அண்ணனுக்காகத் தம்பி விட்டுக்கொடுக்கக் கூடாதான்னு"

முருகனிடமிருந்து பதில் வரவில்லை. ஆடுகளை ஓட்டிக்கொண்டு ஒரு சிறுமி சென்றாள். பால்காரர்கள் வியாபாரத்தை முடித்துவிட்டுச் சென்றுகொண்டிருந்தனர். தன் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்த முருகனைப் பார்த்து வீரண்ணன். "இங்க வாலே! பக்கத்துல ஒக்காரு" என்று தான் உட்கார்ந்திருந்த வேப்பமர மேடையைக் காட்டினார். "இருக்கட்டும்யா" என்றான் முருகன். அந்த வேப்பமர மேடைக்கு வந்து வீரண்ணன் உட்காருகிறார் என்றால் காலை மணி ஏழு என்று அர்த்தம். அங்குதான் எல்லாப் பஞ்சாயத்தும் அவரிடம் வரும். அவர் பேச்சுக்கு மறுபேச்சு என்பது அங்கில்லை..

"முருகா, வா! வந்து ஒக்காரு. கொஞ்ச நேரம் வேற எதாவது பேசுவோம். இப்படியே போயிக்கிட்டிருந்தா நல்லா இருக்கதுல்ல" இதற்குப் பிறகும் சும்மா இருக்கக்கூடாது என்று முருகன் அவர் அருகில் சற்றுத் தள்ளி உட்கார்ந்தான். வீரண்ணன் அவன் பக்கத்தில் கொஞ்சம் நெருங்கி உட்கார்ந்தார்.

இருவரும் சற்று நேரம் எதுவும் பேசவிலை. வீரண்ணன் முருகனைப் பார்த்தார். அவன் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தான். முகத்தில் வாட்டம் தெரிந்தது. "எலே! இப்ப என்னா நடந்து போச்சுன்னு மூஞ்சைத் தூக்கி வச்சுக்கிட்டிருக்க; சாதாரணமா இருடா"

"எப்படிங்க இருக்கமுடியும்? அவரு திட்டம் போட்டு மோட்டரு இல்லாத பக்கத்தை எனக்கு ஒதுக்கியிருக்காருல்ல?"

"சரிடா! எனக்கு எல்லாம் தெரியும். பேசுவோம்; எல்லாம் சரியாயிடும்; மனசைக் கொழப்பிக்காத; சாதாரணமா லேசா வச்சுக்க; எளிதா நெனச்சுக்கடா"

"எப்படிங்க எளிதா எடுத்துக்கறது? எதிர்காலமே இதுலதான இருக்கு" "எலே முருகா! வாழ்க்கையில இன்னும் எவ்வளவோ இருக்கு; எல்லாத்தையும் எளிதா எடுத்துக்கக் கத்துக்கணும்டா"

முருகனுக்குக் கொஞ்சம் கோபம் வந்தது. நாம எவ்ளோ பெரிய விஷயத்தைப் பத்திப் பேசறோம்? இவரு சாதரணமா எளிதா எடுத்துக்கன்னு வேதாந்தம் பேசறார என நினைத்தான். அவனையும் மீறி, "எல்லாம் தனக்கு வந்தாத் தெரியும்" ஓடிக்கொண்டிருந்த நாயைப் பார்த்துக்கொண்டே லேசாக முணுமுணுத்தான்.

வீரண்ணன் காதிலும் சற்று விழுந்தது. "என்னாலே! முணுமுணுக்கற; சத்தமா சொல்லு?" "அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க" இங்க நாம ரெண்டு பேருதான் இருக்கோம். மனசை உட்டுப் பேசு: தனக்கு வந்தாதானத் தெரியும்ங்கற, இல்லியா"

"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க."

"எலே! என் காதுலயும் உழுந்திட்டுதுடா; தனக்கு வந்தாத்தான் தெரியும்னு சொல்ற; இல்லியா?" திடுக்கிட்ட முருகன் ஏதாவது தப்பாப் பேசிட்டோமோ என்னும் அச்சத்தில் அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தான். தான் பேசியது சற்று அதிகம் என்றெண்ணினான்.

"எலே முருகா! ஒண்ணு தெரிஞ்சுக்க; எனக்கும் எல்லாம் வந்துச்சு: நானும் ஓஞ்சு போயி ஒக்காந்துக்கிட்டிருந்தா இன்னிக்கு இந்த வேப்ப மரத்து மேடையில ஒக்காந்துக்கிட்டு இருக்கமாட்டேன். என் பேச்சுக்கும் மதிப்பிருக்காது. ஒங்க அண்ணனுக்கு என்னைப்பத்தி நல்லாத் தெரியும்; நாட்டாமைக்கார ரெட்டியாருக்குத் தெரியும். நீ அப்ப வெளியூர்ல படிச்சிக்கிட்டு இருந்த; மலையனூருக்குத் தேருபாக்கப் போன என் அப்பாரும் அம்மாவும் என் பொண்டாட்டியும் பஸ் கவுந்ததுல போய்ச் சேந்துட்டாங்க; இப்ப இருக்கற பொண்ணு மல்லிகாவுக்கு அப்ப அஞ்சு வயசு. அது பாட்டி ஊட்டுக்குப் போயிருந்துச்சு. நானு வயல்ல வேலைன்னு போகல; தப்பிச்சுக்கிட்டோம்"

முருகன் இவரு மனசில வேதனையைக் கெளப்பிட்டோமா என்று நினைத்தான். அவன் முகத்தில் இப்பொழுது கவலை தெரிந்தது. என்ன பேசுவது எனத் தெரியாமல் அவன் இருந்தபோது அவர் தொடர்ந்தார். "எலே! அத்தோட நான் சரின்னு நெனச்சுட்டாங்கடா எல்லாரும். அப்பதான் எதையுமே பெரிசா நெனச்சாத்தான் பெரிசு. எளிதா நெனச்சா சுலபம்தான்ற முடிவுக்கு வந்தேன். கருமாதியைப் பத்தாம் நாளே வச்சு எல்லாத்தயும் முடிச்சுட்டு அடுத்த நாளே கரும்பு வெட்ட ஆளு அமத்திட்டேன். நல்லா சமைக்கக் கத்துக்கிட்டேன். நானும் அழுதுகிட்டு ஒக்காந்துட்டா பொண்ணு அப்பறம் என்னா செய்யும் சொல்லு?"

"அது வேற. இது வேறமாதிரி இல்லீங்களா" என்று முருகன் கேட்டான். "எல்லாம் ஒண்ணுதாண்டா; கவலைன்னா மனசை அழுத்தறதுதான். இரும்புக் குண்டைத் தண்ணிக்குள்ளேந்து தூக்கச்ச லேசா இருக்கும், எளிதாத் தூக்கிடலாம். ஆனா வெளியில வந்தா கனமாத்தான் இருக்கும். கவலை மனசோட ஆழத்திலேயே அதுமாட்டுக்கிட்டு கெடக்கட்டும் அதயே பெரிசா நெனச்சுக்கிட்டுக் கெடக்காத; எளிதா நெனச்சுக்க" முருகன் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டான். முகம் சற்று தெளிவானது போல இருந்தது.

வீரண்ணன் தொடர்ந்தார். "ஒங்க அப்பா செத்துப் போனதுக்கப்பறம் ஒன்மேல ஆசை வச்சு ஒன்னைப் படிக்க வச்சு வாத்தியாரு வேல வாங்கிக் குடுத்துக் கல்யாணம் கட்டி வச்சதை எல்லாம் நெனக்கணும்டா. அவனுக்கு மூணும் பொண்ணுங்க; நீ கவருமெண்ட் வேலை; கொஞ்சம் உட்டுக்குடுக்கணும்டா"

"அதுக்காக இப்ப என்னா செய்யணுங்கறீங்க?"

வீரண்ணன் லேசாகச் சிரித்தார். "இப்பக் கேட்டியே இதுதான் படிச்ச புள்ளக்கு அடையாளம். இனிமே கவலைப்படாத; எல்லாம் நல்லதா நடக்கும். ஊர்ல நாலு பேரு நாலும் சொல்வாங்க. அதெல்லாம் அண்ணன் தம்பிங்களப் பிரிக்கறதுக்குத்தான்."

முருகன் சற்றுத் தெளிவாகவே பேசினான். சிரித்துக் கொண்டே, "நீங்கதான் சேத்து வைக்கறவங்க; சொல்லுங்க? என்னா செய்யணும்?"

"இதமாதிரிக் கேளு; ஒன் நெலத்துல மோட்டருதான வேணும். புதுசா அதே ஊத்துல ஒன் நெலத்துலப் போட்டாப் போச்சு" என்றார் வீரண்ணன். "அதுக்குக் கொறைஞ்சது முப்பதாயிரம் ஆகுங்க."

"சரி, அதை ஒன் அண்ணன் தந்துட்டுப் போறான்."

"அவரு ஒத்துக்குவாருங்களா?" நீ சண்டக்காரன் மாதிரி மனசை வச்சுக்கிட்டுப் போனா எப்படி ஒத்துக்குவான்? எளிதா லேசா எல்லாத்தையும் நெனச்சுக்கிட்டு விரோதம் இல்லாமப் போனா ஒத்துக்கறான். அவன் அப்படித்தான் இந்த விஷயத்தை நெனச்சிக்கிட்டு இருக்கான்."

"நீங்க சொன்னா சரிதாங்க; அண்ணாருகிட்டப் பேசறென்."

"நீ ஒண்ணும் பேசவாணாம்; நான் எல்லாத்தையும் பேசி முடிச்சுட்டேன். அதோ வரான் பாரு" என்றார் வீரண்ணன். முருகன் மகிழ்ச்சியுடன், "ஏங்கய்யா; இதை மொதல்லியே எங்கிட்ட சொல்லி இருக்கலாம்ல" என்றான். "எலே! மொதல்லியேவா? எங்க நீ சொல்ல உட்ட? மனசில கனமா இரும்புக் குண்டைத்தான வச்சிருந்த? அதை லேசாக்கித்தான இப்ப சொல்ல முடிஞ்சுது"

அதற்குள் கோபு அருகில் வந்துவிட்டான். அவன் வந்ததும் முருகன் எழுந்துவிட்டான். "என்னாலே கோபு! ஒன் தம்பியைத் தெரியுதா?" என்று சிரித்துக்கொண்டே கேட்டார் வீரண்ணன்.

அதைக் காதில் வாங்காதவன் போல, கோபு முருகனைப் பார்த்து, "என்னாடா எல்லாம் முடிஞ்சுதா?" எனக் கேட்க முருகனும் பதிலுக்கு, "எல்லாம் நீங்க செஞ்சா சரியாத்தாண்ண இருக்கும்" என்றான்.

வேப்பமரத்திலிருந்து இலைகள் லேசாக விழுந்து கொண்டிருந்தன.

வளவ. துரையன்,
கடலூர்

© TamilOnline.com