எங்கிருந்தோ வந்த விதை
அத்தியாயம் - 1
அன்று நண்பி சாராவின் பிறந்தநாள். அருணுக்கு ஞாபகம் இருந்தது. கூகுள் கேலண்டரில் குறித்து வைத்திருந்தான். அம்மாவிடமும் சொல்லி வைத்திருந்தான். எதற்காக இதெல்லாம் அவன் செய்யவேண்டும் எனக் கேட்கிறீர்களா? எல்லாம் ஒரு பயம்தான்.

பிறந்தநாளன்று சாராவை அருண் வாழ்த்த மறந்தாலோ பரிசு கொடுக்க மறந்தாலோ அவ்வளவுதான்.... அருணை ஒரு உலுக்கு உலுக்கி விடுவாள். அருண் ஒருமுறை அனுபவப்பட்டிருக்கிறான். அதன் பிறகு அந்த மாதிரி அவன் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை.

பள்ளிக்கூடத்திற்கு ரெடியானான். காலைக்கடன்களைக் கடகடவென்று முடித்தான். அம்மா கீதா எதுவும் சொல்லாமலே தானே எல்லாம் செய்து முடித்தான்.

"அருண், சிற்றுண்டி சாப்பிட்டாயா?" அருண் அறையிலிருந்து கீழே இறங்கி சமையலறை பக்கம் வந்ததும் அம்மா கேட்டார்.

"ஆச்சு."

"லஞ்ச் பாக்ஸ்?"

"ஆச்சு." அருண் சற்று எரிச்சலோடு சொன்னான்.

"ஹோம் ஒர்க்?"

எப்போதும்போல அம்மாவிடமிருந்து கேள்விக்கணைகள் சரமாரியாக வந்தன. என்ன செய்வது, அம்மா அல்லவா! எல்லா அம்மாக்களுமே இப்படித்தான் என்று அருணுக்குத் தெரியாதா என்ன? அருணும் எல்லாப் பசங்களைப்போல எதையாவது மறந்துவிடுவான். ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும்.

"அருண்?"

அருண் சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண்டே மும்முரமாக அன்றைய செய்தித்தாளைப் படித்தான். வயது ஆக ஆக அருணும் பேச்சைக் குறைத்துக் கொண்டுவிட்டான்.

அருணுக்கு விளையாட்டுச் செய்திகள் என்றால் உலகமே மறந்து போய்விடும். பூகம்பமே வெடித்தாலும் பாதிப்பே இல்லாமல் படித்துக் கொண்டிருப்பான். அவன் பதில் அளிக்கவேண்டாம் என்று இருந்தான். எல்லாப் பசங்களைப்போல அம்மா கத்தட்டும் என்று இருந்தான்.

கீதா பொறுமை இழந்தார். அவருக்கு அருணின் அலட்சியத்தைத் தாங்கமுடியவில்லை.

"அரூண்…" இன்னும் சத்தமாக வந்தது அம்மாவின் குரல். அதற்கும் பதில் வராவிட்டால் வீடே இடிந்துவிடுவது போலத் திட்டுவிழும். அப்பா ரமேஷ் வெளியூர் போயிருந்ததால் அம்மாவைத் தடுக்க யாருமே இல்லை.

"என்னம்மா? என்ன வேணும்?" அருண் எரிச்சலோடு கேட்டான்.

"இன்னிக்கு என்ன நாள் தெரியுமா? ஞாபகம் இருக்கா?"

அம்மா எதைப்பற்றிக் கேட்கிறார் என்று அவனுக்குப் புரிந்தது.

"சாராவோட பிறந்தநாள் அம்மா, நல்லாவே ஞாபகம் இருக்கு."

"என்ன பரிசு கொடுக்கப் போற?"

"சர்ப்ரைஸ், அம்மா. சர்ப்ரைஸ்."

"நான் தெரிஞ்சுக்கலாமா? ப்ளீஸ்"

"இல்லை அம்மா, முழு சர்ப்ரைஸா இருக்கணும்."

அம்மா பள்ளிக்கூடப் பையை எடுத்துப் பார்க்க அவன் பக்கத்தில் வந்தாள். பைக்குள் இருக்கும் பரிசுப்பொருளைப் பார்க்க விரும்புகிறாள் என்று புரிந்துகொண்டான். ஒன்றுமே சொல்லாமல் நமட்டுச் சிரிப்போடு உட்கார்ந்து இருந்தான். கைக்கடிகாரத்தை ஒருமுறை பார்த்துக்கொண்டான். பள்ளிக்கு இன்னும் நேரமாகவில்லை.

அம்மா மெதுவாக அருணின் பையை எடுத்துத் திறந்தாள். அருண் மறுப்புக் கூறாமல் புன்சிரிப்போடு பார்த்தான். அம்மா பையைத் திறந்து பரிசுப்பொருளைத் தேடினாள். இல்லை. அருணிடமிருந்தே பதிலைப் பிடுங்க முயன்றார்.

"அருண், இந்தத் தடவையும் அதே பரிசா கொடுக்கப் போற?"

"எதே பரிசு?" அருண் சீண்டினான்.

"அதான்பா, போன வருஷம் கொடுத்தயே."

"அம்மா, எனக்குப் பள்ளிக்கூடம் போகணும். நேரமாச்சு."

கீதா தேடித்தேடிப் பார்த்தார். அகப்படவில்லை. சந்தேகத்தோடு அருணைப் பார்த்தார்.

"நான் பள்ளிக்கூட லாக்கர்ல பத்திரமா வச்சிருக்கேன். நான்தான் சர்ப்ரைஸ்னு சொன்னேனே."

கீதாவுக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான். அருண் இவ்வளவு கவனமாக இருப்பான் என்று நினைத்துப் பார்க்கவில்லை. இருந்தாலும் தன் மகன் புத்திசாலித்தனமாக நடந்துகொண்டதைப் பார்த்துப் பெருமைப் பட்டுக்கொண்டார்.

கீதா அடுத்த கேள்வி கேட்கும் முன்னர், பையை டபக்கென்று பிடுங்கிக்கொண்டு அருண் வாசல்கதவை நோக்கி நடந்தான்.

"அருண்…!" திரும்பவும் அம்மாவின் குரல். அருண் பட்டென்று பையைக் கீழே வைத்தான். உர்ர் என்று முறைத்தான். பள்ளிக்கூடம் என்னதான் பக்கத்தில் இருந்தாலும் சீக்கிரமாகப் போய் நண்பர்களோடு விளையாடுவதில் யாருக்குத்தான் உற்சாகம் இருக்காது?

"என்ன இப்ப? நான்தான் சாராவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கப் போறேன்னு சொல்லிட்டேன்ல? ஒருதடவை சொன்னா கேக்கமாட்டியா? பள்ளிக்கூடம் போற சமயத்தில ஏன் இப்படி படுத்தற?" அருண் பொரிந்து தள்ளினான்.

கீதா மௌனமாக இருந்தார். சைகையினால் டைனிங் டேபிள் பக்கம் கையைக் காட்டினார். அருண் சாப்பிட்ட தட்டு அப்படியே இருந்தது. அருண் கவனிக்காத மாதிரி ஓடப்பார்த்தான். கீதா போகவிடாமல் தடுத்தார். அவர் கண்ணில் கண்டிப்பு இருந்தது. நான் உன்னோடு விளையாடவில்லை என அவர் முகம் சொன்னது.

அருண் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு கப்சிப்பென்று எதிர்ப்புத் தெரிவிக்காமல் சாப்பிட்ட தட்டை எடுத்துக் கழுவுமிடத்தில் போட்டுவிட்டுக் கிளம்பினான்.

சாராவுக்குப் பெரிய ஆச்சரியம் கொடுத்து அவளை மகிழ்விக்கப் போவதாக நினைத்துக்கொண்டிருந்தான். அவனுக்குத் தெரியாது, எத்தனை பெரிய அதிர்ச்சி அன்றைக்குக் காத்திருக்கிறது என்று!

(தொடரும்)

ராஜேஷ்

© TamilOnline.com