ரெய்னியரில் ஒரு பூபாளம்
ஆகஸ்ட் 1, 2020
"அதிகாலை மூன்று மணிக்கு மலையடிவாரத்தில் தொடங்கி, மலையேறி, உச்சியில் நின்று சூர்யோதயத்தைப் பார்த்துவிட்டு வரலாமா?" என்றார் நண்பர். இரவு மூன்று மணி தூக்கத்தை எப்படிச் சமாளிப்பது? இருட்டில் எப்படிப் பயணிப்பது? சியாட்டிலின் பிரதான பனிமலையில் குளிர் வாட்டுமே? பயத்தில் கேள்விகள் எழுந்தன. இப்படியோர் வாய்ப்பு, சேர்ந்து போகும் மலையேற்ற அனுபவம் இன்னொரு முறை வாய்ப்பது அரிது, போகலாம் என்றது மனது. குடும்பத்துடன் வருவதாகச் சிலர், குழந்தைகளையும் அழைத்து வருவதாகச் சிலர்.

வீட்டிலிருந்து மலை அடிவாரத்தை அடைய இரண்டரை மணி நேரம் ஆகும். அதிகாலை மூன்று மணிக்கு அடிவாரத்தை அடைவோம். நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து புறப்பட வேண்டும், பயணத்திட்டம் முழு இரவு தூக்கத்தைக் காவு கேட்டது.

சொன்னபடி நள்ளிரவில் சில வாகனங்களில் சேர்ந்து கிளம்பிவிட்டோம். கொட்டாவி விட்டபடி, இருபத்துநான்கு மணி நேரமும் இயங்கும் காஃபிக்கடை கண்ணில் விழுகிறதா எனத் தேடியபடி, ஏதேதோ கதைத்தபடி இரவை உழுதுகொண்டு போனது பயணம். இரவில் வாகனம் ஓட்டுவதே ஓர் அனுபவம். பின்தொடரும் தூரத்து வண்டியின் வெளிச்சம் கண்களில் கூச, நீண்டு விரியும் சாலையின் வெறுமையில், தூக்கத்தின் கவனச்சிதறலைச் சொல்லும் லேன் வார்னிங் இண்டிகேட்டர்கள் சிணுங்க - அது ஓர் அனுபவம்.

அடர்ந்த வீடுகள் நிறைந்த நகரங்கள் போய், விலகி நிற்கும் கிராமத்து வீடுகள். மூன்று மணிநேரம் தூக்கத்தை நாங்கள் விலக்கினோம். மெத்தையில் சிறிது நேரம், வாகன இருக்கையில் சிறிது நேரம் எனக் குழந்தைகள் தவணை முறையில் தூக்கத்தைத் தொடர்ந்தனர்.

தேசியக்காடுகள் உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற வாசகத்துடன் மலை எங்களைப் பார்த்துப் புன்னகைத்தது. ரெய்னியர் மலைக்கு தேசியப் பூங்காக்களுக்கான பாஸ் வைத்திருக்க வேண்டும். $30 கொடுத்து முன்னதாகவே பாஸ் வாங்கியிருந்தோம். வளைந்து வளைந்து செல்லும் காட்டுப்பாதை, வழிநெடுக நிற்கும் வாகனங்கள், இயற்கையோடு எத்தனை மக்கள் தங்கள் நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்ற ஆச்சரியத்தைத் தந்தது. கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து, சொன்னபடி மூன்று மணிக்கு சூரியோதயப் பார்வையாளர் மைய (Sunrise Visitor Center) வாகன நிறுத்தத்தில், முதல் வாகனமாகப் போய்ச் சேர்ந்தோம். (அப்படித்தான் நாங்கள் நம்பினோம்!)



6,400 அடியில் இந்த இடம்தான் வாகனத்தில் அடையக்கூடிய அதிகபட்ச உயரம். இதற்குமேல் நடந்து செல்லவேண்டும். குளிர் காற்றில் ரெய்னியர் மலை பளிச் என வெள்ளை பிரம்மாண்டமாய் நிற்க, வானம் நட்சத்திர அலங்காரத்தில் மின்ன, நாங்கள் குளிர் உடுப்புகளோடு தயார் ஆனோம். கையுறை, தலையுறை, தடியான மேலாடை எல்லாம் இருந்தும் குளிர் உடலுக்குள் வந்து ஊசியால் குத்தியது. சூடான சுக்குமல்லிக் காப்பியை எல்லோருக்கும் கொடுத்தார் ஜெய் எனும் புண்ணியவான். ரெய்னியர் மலையில் ஆங்காங்கே சின்னச் சின்னதாய் விளக்கு வெளிச்சம். அது மலை ஏறுபவர்களின் விளக்கொளி எனத் தெரிந்து ஆச்சர்யப்பட்டோம். கிழக்கு மூலையில் பளிச்சென தெரிந்தது ஒரு வெளிச்சம். அது விளக்கு என்றனர் சிலர்; விமானம் என்றனர் சிலர்; இல்லை, அது ஒரு கிரகம். அது விடிவெள்ளி என்றார் ஒருவர். நட்சத்திரங்கள் இறைந்து கிடந்தன. மொழி தெரியாத பாடலின் இசையைப்போல், விவரம் தெரியாமலே அழகை ரசித்தோம்.

எங்களுக்கு முன்னரே வந்து சூர்யோதயத்திற்காகக் காத்திருந்த சிலரின் தூக்கம் எங்கள் பேச்சில் கலைந்தது. எட்டி நின்று பேசுங்களேன்! தூங்கவேண்டும் என்றார் ஒருவர். முன்னமே பலர் வந்து தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது அப்போதுதான் தெரிந்தது. குசுகுசுவெனப் பேசி, பிள்ளைகளுடன் நாங்கள் புறப்பட்டோம். பிரட்மாண்ட் லுக்கவுட் செல்வதெனத் தீர்மானமானது.

இருள் ஓர் அனுபவம்
பாதையெல்லாம் மண்ணும் கல்லும் முணுமுணுத்தன. கை விளக்கும், தலையில் ஒளிர்ந்த விளக்கும் பாதை காட்ட நடந்தோம். இருள் ஓர் அனுபவம்! இரண்டு அடி தூரமே தெரியும், கருமை படர்ந்து தெளிவற்ற சூழல். உயர்ந்து நிற்கும் மலை, தரையோடு தரையாய்ப் படர்ந்த செடிகள், மரங்கள் ஏதும் இல்லா நிர்வாணத்தில் மலைகள்.

தூரத்தில் மலைகளில் எறும்பின் வரிசைபோல் விளக்குகளோடு நடந்து செல்லும் மனிதர்கள். இருள். தூரத்தில் நகரும் புள்ளிகளாய் விளக்கொளிகள். புதுமையான அனுபவம் அது. பாதை கற்கள் நிறைந்ததாக இறுக்கமாக இருந்தது. அந்தச் சிறிய பாதையின் ஒரு பக்கம் சரிவாய், அதலபாதாள அடிவாரம்வரை விரிய ஆபத்தைக் காட்டியது. எங்கோ சிலர் செல்வதாக தூரத்தில் பார்த்த சின்ன விளக்கொளிகள் எல்லாம் எங்களின் பாதைகளே என செல்லச் செல்ல உணர்ந்தோம். இருளிலும் ஒளிர்ந்தது பனிமலை.

கண்கள் பார்க்கும் காட்சிகளை எங்கள் புகைப்படக் கருவி காண மறுத்தது. 4, 5 மணி ஆனது. இரண்டு மணி நேரமாக ஏறி, இறங்கிச் சென்றோம். பனித்திட்டுக்கள், பாறைகள், புழுதி நிறைந்த பாதை, மண் பாதை என வளைந்து வளைந்து சென்றது. ஃப்ரீமான்ட் லுக்கவுட் (Fremont Lookout) ஒன்றரை மைல் எனச் சொன்னது கைகாட்டி. ஆனால் உண்மையில் மூன்று மைலுக்கு மேல் இருக்கும் என உணர்ந்தோம் (5.6 miles, roundtrip, 1,200 ft. gain). நேரம் ஆக ஆக, இருள் தன் கருமையை மெல்ல விலக்கிக்கொண்டது. கைவிளக்குகள் விடைபெற்றன.

இருட்டுதான் எத்தனை வகை, வெளிச்சம்தான் எத்தனை எத்தனை வகை! கண்கள் இருளுக்குப் பழகிவிட்டன போலும். பிரம்மாண்டமான பள்ளத்தாக்கு, தன் வெண்ணழகை கூட்டிக்கொண்டே போன ரெய்னியர் மலை. ஒழுங்கு செய்யப்பட்ட பாதை, சிதறிக்கிடந்த கற்கள் செய்த சிலுங் கிலுங் சத்தங்கள். மனம் மெல்ல மெல்ல தியானத்தில் ஆழ்ந்தது. மலையின் அழகு உடல் முழுவதும் பரவியது. மனம் மகிழத் தொடங்கியது. குழந்தைகளை முதுகில் சுமந்து வந்த தந்தையர், இயற்கைப் பேரழகைக் குழந்தைகளுக்கும் வழங்கியதில் பெருமை கொண்டனர்.



கண்ணுக்கு எட்டியவரை ஆடம்ஸ் மலை மற்றும் காஸ்கட் மலைத் தொடர்கள் அடுக்கடுக்காகத் தெரிந்தன. சூரிய வெளிச்சம், தூரத்தில் தெரிந்த மலைக்குப் பின் மலைக்குப் பின் மலை என மலைகளின் பெருங்கூட்டத்தைக் காட்டியது. பள்ளத்தாக்கு, பசும்புல்வெளிகள்; திரும்பிய பக்கமெல்லாம் மலைகள்; வெள்ளை வெளேரேன நாயகமாக நின்ற ரெய்னியர். திட்டுத்திட்டாய் இருந்த பனியைப் பருகிப் பருகித் திளைத்தன கண்கள். எங்கள் புகைப்படங்களில் அந்த அழகை அள்ளிச் சேமித்தோம். கடல்நீரைக் கையில் அள்ளும் முயற்சி அது.

வைகறை தன் வழக்கத்தை எழிலோடு துவங்க அத்தனை அழகையும் அள்ளிப் பருகி நாங்கள் ஆர்ப்பரித்தோம். மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. சரியான சூரியோதய நேரத்தில் சில மேகங்கள் மறைத்துவிடவே, வெள்ளை ரெய்னியர் சிவப்பாக மாறும் அற்புதத்தை எங்களால் பார்க்க முடியாமல் போனது, ஆனாலும் மலை உச்சியில் நின்றுகொண்டு மலைத்தொடர்களின் பூபாளத்தைப் பார்த்தது பரவசமே! கொஞ்சம் தின்பண்டங்கள் தின்று, பனியில் கொஞ்சம் விளையாடிவிட்டுத் திரும்பலானோம்.

வரும்போது இருளில் பார்த்த பாதை வெளிச்சத்தில் அத்தனை அழகாக இருந்தது. எதைப் புகைப்படம் எடுத்தாலும் அது நினைவில் நிற்கும் படமாகவே இருக்கும். காட்சிகள் எல்லாம் அத்தனை அழகு. உறைந்த மூன்றடிப் பனி, பாதி ஏரியை மூடி இருக்க, நீரும், பனியுமாய் ஏரி. அதோ, அந்தப் பள்ளத்தாக்கில் சிறிதாகத் தெரியும் குளம். தரையோடு தரையாகக் கிடந்த வண்ணப் பூக்கள், கற்களின் அடுக்காய் நின்ற மலைச்சரிவுகள். தூரத்தில் தெரியும் ஒற்றையடிப் பாதை, அதில் சின்னச் சின்ன பொம்மைகளாக மனிதர்கள். விட்டு வர மனம் இல்லை. கால்கள் ஓய்ந்து போயின. மனம் மட்டும் மகிழ்வில் தளும்பியது.

இன்னும் சிலர் வெல்லம் போட்ட தேநீரை எல்லோருக்கும் கொடுத்தனர். அந்தக் களைப்பில், குளிரில் அதுவே அமுதம். குழந்தைகள் மகிழ்ந்தனர். ஆனந்த நிமிடங்களை அள்ளிச் சேமித்துக்கொண்டு வீடு திரும்பினோம். ரெய்னியரின் நுழைவாயிலில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இப்போதும் காத்திருந்தன. நல்ல வேளையாக நாங்கள் பின்னிரவில் வந்ததால் இந்த நெடிய வரிசையில் இருந்து தப்பினோம். சூடான காஃபியில் தூக்கத்தைச் சற்றே விரட்டிவிட்டு, வீடு வந்து சேர்ந்தோம், Hikers குழுவிற்கு மனமார்ந்த நன்றி.

குருபிரசாத்,
சமாமிஷ், வாஷிங்டன்

© TamilOnline.com