நீலகண்ட பிரம்மச்சாரி (பகுதி-4)
புதுவையில் பிரம்மச்சாரி
புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார் நீலகண்ட பிரம்மச்சாரி. ஏற்கனவே அவரது நண்பர் சங்கரகிருஷ்ணன் அங்கு வந்திருந்தார். அவர் பாரதியாருடன் வசித்து வந்தார். மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியாரின் உதவியால் நீலகண்டனுக்கு அங்கே தங்குவதற்கு ஓர் அறை கிடைத்தது. சிலநாட்களுக்குப் பின் சங்கர கிருஷ்ணனையும் அழைத்துக்கொண்டு திருச்சிக்குப் புறப்பட்டார். அங்கே சாதாரண யாத்ரீகர்போல் தங்கிப் பல கோயில்களுக்குச் சென்று தரிசித்தார். ஆனால், உண்மையில் அவரது நோக்கம் புரட்சி இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பதே. முன்பே சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் அறிமுகமாகி, தனது புரட்சி இயக்கத்தில் உறுப்பினராக இணைந்திருந்த அண்ணாச்சி ஐயங்கார் என்பவரைச் சந்தித்தார். ஐயங்கார் மூலம் மேலும் பல தேசபக்த இளைஞர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர்களையும் தனது சங்கத்தில் உறுப்பினராக்கினார். "ரகசியம் காக்கப்பட வேண்டும்; தொடர்புகள் அனைத்தும் கடிதம்மூலம் மட்டுமே இருக்கவேண்டும்" என்று அவர்களிடம் அறிவுறுத்திவிட்டு, புதுவைக்குத் திரும்பி வந்து பணிகளைத் தொடர்ந்தார்.

சூரியோதயம்
பாரதியாரின் 'இந்தியா' புதுப்பொலிவுடன் புதுவையில் இருந்து வெளியாகிக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் அரசை எதிர்த்துக் காரசாரமான கட்டுரைகளை பாரதி அதில் எழுதினார். இந்நிலையில் தானும் ஒரு பத்திரிகை தொடங்கி நடத்தினால் என்ன என்ற எண்ணம் நீலகண்டனுக்குத் தோன்றியது. பாரதியாரிடமும் கலந்தாலோசித்தார். புதுவையில் புகழ்பெற்ற அச்சுக்கூடம் வைத்து சில பத்திரிகைகளை நடத்திக் கொண்டிருந்தார் சைகோன் சின்னையா நாயுடு. அவரது அறிமுகம் நீலகண்டனுக்குக் கிடைத்தது. சின்னையா 'சூரியோதயம்' என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றை நடத்தி வந்தார். அது லாபத்தில் ஓடவில்லை. அந்த இதழை நிறுத்திவிடும் எண்ணத்தில் இருந்தார். அப்போதுதான் நீலகண்டன் அவரைச் சந்தித்தார். அவரது பேச்சால் கவரப்பட்ட சின்னையா, தனது 'சூரியோதயம்' இதழுக்கு நீலகண்டனை ஆசிரியராக இருக்குமாறு வேண்டிக்கொண்டார். நீலகண்டனும் ஒப்புக்கொண்டார். பத்திரிகையின் ஆசிரியர் பெயராக 'ஸ்ரீமதி கமலநாயகி' என்பது முடிவு செய்யப்பட்டது. உண்மையில் அது நீலகண்டனின் புனைபெயர்தான். பாரதியாரும் விஷயதானம் செய்யச் சம்மதித்தார். நெல்லையிலிருந்து புதுவை வந்திருந்த இளைஞர் ஒருவரைத் தனது பத்திரிகையின் உதவியாசிரியராக நியமித்தார் நீலகண்டன். அதுதான் அந்த இளைஞருக்கு முதல் பத்திரிகைப் பணி. அவர்தான் பின்பு பாரதியாரால் 'தம்பி' என்று விளிக்கப்பட்ட பரலி. சு. நெல்லையப்பர். புதுவையில் 'சூரியோதயம்' உதயமானது.

சூரியோதயத்தின் உள்ளடக்கம்
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ்வார்

என்ற குறளை முகப்புப் பகுதியில் தாங்கி இதழ் வெளிவந்தது. இதழின் விலை 1 அணா. வருஷ சந்தா புதுவைக்கு 3 ரூபாய், இந்தியாவுக்கு 4 ரூபாய், மற்றைய தேசங்களுக்கு 5 ரூபாய் என்ற அறிவிப்புடன், 'ரகசியம் காக்கப்படும். பத்திராதிபருக்கு எழுதப்படும் தகவல்களும், எழுதுபவரின் பெயரும் எந்தக் காலத்திலும் வெளிவரமாட்டாது' என்றும் முகப்பிலேயே அறிவித்திருந்தார் நீலகண்டன். இந்தப் பத்திரிகையும் கார்ட்டூன் சித்திரத்துடன் வெளியானது மற்றொரு சிறப்பாகும்.

பாரதியாரின் கட்டுரைகள், பாடல்கள், நீலகண்டனின் கட்டுரைகள், துணுக்குச் செய்திகள், உலகச்செய்திகள், உள்நாட்டு, வெளிநாட்டுச் செய்திகள் என்று பல செய்திகளைத் தாங்கி இதழ் வெளிவந்தது. 'சிதம்பரம் பிள்ளை கேஸ்' என்ற தலைப்பில் பிள்ளையின் மனைவி மீனாக்ஷி அம்மாளின் வேண்டுகோளும், பிள்ளை மீதான வழக்கு விபரங்களும் இதழ்தோறும் வெளியாகின. லண்டனிலிருந்து வ.வே.சு. ஐயர் எழுதிய செய்திகள், 'லண்டன் கடிதங்கள்' என்ற பெயரில் வெளிவந்தன. 'சூரியோதயம்', 'இந்தியா' மட்டுமல்லாமல், அக்காலத்தில் பாரதியாரின் ஆசிரியத்துவத்தில் 'பால பாரதம்', 'விஜயா', 'கர்மயோகி' போன்ற இதழ்கள் புதுவையில் அச்சாகி வந்தன. இவற்றில் பாரதியார், நீலகண்டன் போன்றோரது கட்டுரைகள் வெளியாகி தேச விடுதலை உணர்வைத் தூண்டின. அரவிந்தர் 'கர்ம யோகின்' இதழில் எழுதி வந்த கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டு 'கர்மயோகி' இதழில் வெளியாகின. 'தருமம்' இதழும் காத்திரமான பல கட்டுரைகளைத் தாங்கி வந்தது.

சிறைக் கொடுமைகள்
இக்காலகட்டத்தில் சிதம்பரம் பிள்ளை கோவைச் சிறையில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வந்தார். பிள்ளைமீது தனிப்பட்ட கோபமும், பொறாமையும் கொண்டிருந்த சப்கலெக்டர் ஆஷ் இதன் பின்னால் இருந்தார். சிதம்பரம் பிள்ளைக்குச் சிறையில் பல்வேறு அவமரியாதைகள் நடந்தன. அவருக்குக் கால்களில் விலங்கு பூட்டப்பட்டது. கழுத்திலும் அவர் தண்டனை மற்றும் விடுதலை நாள் குறித்த கட்டைப் பலகை ஒன்றைக் கட்டியிருந்தனர். தலையை மொட்டை அடித்ததுடன், குளிர் தாங்காத சட்டை ஒன்றையும் கொடுத்துச் சித்ரவதை செய்தனர். கடுங்காவல் தண்டனை என்பதால் கடும் பணிகளைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார். பிள்ளையை தினந்தோறும் கல் உடைக்கச் செய்தனர். மாடு இழுக்கும் செக்கை மனிதனான அவர் இழுக்கும்படிச் செய்து அடித்துக் கொடுமைப்படுத்தினர். சிவத்திற்கோ ஆட்டு ரோமத்தைச் சுத்தம் செய்யும் பணி தரப்பட்டது. இந்தப் பணிகளால் பிள்ளை, சிவம் இருவருமே மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகினர். சிவத்துக்குத் தொழுநோயால் கண்டது. சிதம்பரம் பிள்ளையின் உடல்நலம் சீர்குலைந்தது.

இக்காலகட்டத்தில், குடும்ப நண்பரான நெல்லையப்பர், சிதம்பரம் பிள்ளையைச் சந்திக்க கோவை சிறைக்குச் சென்றார். அவரிடம், சிறையில் நடக்கும் கொடுமைகளைப் பற்றிக் கூறி, "இந்த ஆஷின் அக்கிரமத்துக்கு முடிவே இல்லையா?" என்று கூறி வருந்தினார் பிள்ளை. தம்மைச் சந்திக்க வந்த மற்றொரு நண்பரான ராஜபாளையம் சுப்பையா முதலியாரிடமும் இதே செய்திகளைக் கூறி உள்ளம் கொதித்தார். புதுவை திரும்பிய நெல்லையப்பர் இந்தச் செய்தியை தனது புதுவை நண்பர்களிடம் தெரிவித்து மனம் குமைந்தார். சில நாட்கள் கழித்துப் புதுவைக்கு வந்த சுப்பையா முதலியாரும் இதே செய்திகளைத் தெரிவித்தார்.

ஆஷ் கொலை முயற்சி
அப்போது புதுவையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார் பிள்ளையின் நெருங்கிய நண்பரும், அடியவருமான மாடசாமிப் பிள்ளை. அவர் சிறையில் சிதம்பரம் பிள்ளைக்கு நடக்கும் கொடுமைகளைக் கேட்டு மனம் கொதித்தார். இந்த அக்கிரமத்துக்கு ஒரே தீர்வு ஆஷைக் கொல்வதுதான் என்று அவர் முடிவு செய்தார். இதற்காக, அவர் வீரதீர மிக்க நாயக்கர் குலத் தலைவர்களைத் தொடர்பு கொண்டார். அவர்களோ, ஏற்கனவே நீலகண்ட பிரம்மச்சாரி சொற்படி புரட்சிப்படை வீரர்களைத் தயார் செய்து வருவதாகவும், நீலகண்ட பிரம்மச்சாரி உத்தரவிட்டால் ஆஷ் கதையை முடித்துவிட ஆட்சேபம் ஏதுமில்லை என்றும் தெரிவித்தனர்.

தகவல் நீலகண்ட பிரம்மச்சாரிக்கு வந்து சேர்ந்தது. இச்செயலுக்கு உடனடியாகத் தனது மறுப்பைத் தெரிவித்தார் நீலகண்டன். வீரர்களைக் கொண்டு புரட்சி செய்து ஆங்கிலேயரை இந்தியாவை விட்டு விரட்டி அடிப்பதுதான் தங்கள் நோக்கமே தவிர, தனி நபர்களைக் கொலை செய்வது சங்கத்தின் நோக்கமல்ல என்று எடுத்துரைத்தார். மேலும் இத்தகைய தனிநபர் கொலைகள், புரட்சி இயக்கத்திற்கும், அதன் ரகசியச் செயல்பாடுகளுக்கும் தடைகளை ஏற்படுத்தி தேச விடுதலை முயற்சிகளுக்குப் பெரும் சிக்கலாய் அமையும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார். ஆக, ஆஷ் கொலை முயற்சி என்பது அப்போதைக்கு நின்றது. ஆனால், அது அத்தோடு முற்றுப்பெறவில்லை.

இதழ்களுக்குத் தடை
தேச விடுதலை உணர்வைத் தூண்டும் பல கட்டுரைகளை பாரதி, நீலகண்டன் உள்ளிட்டோர் இதழ்களில் எழுதி வந்தனர். வாசிப்பவர்களின் உள்ளத்தில் அவை சுதந்திர தாகத்தை ஏற்படுத்தின. இதழ்கள் புதுவையிலிருந்து வெளியாகி வந்தாலும் அதன் பெரும்பாலான சந்தாதாரர்கள், விளம்பரதாரர்கள் பிரிட்டிஷ் இந்தியாவில்தான் இருந்தனர். பிரிட்டிஷார் விதித்திருந்த பல்வேறு தடைகளையும், ரகசியக் கண்காணிப்புகளையும் மீறித்தான் இதழ்கள் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டன. இதனால் சினம் கொண்ட பிரிட்டிஷ் அரசு, பிரெஞ்சு அரசிற்கு பல்வேறு அழுத்தங்களைத் தந்ததுடன், புதிய பத்திரிகைச் சட்டம் ஒன்றையும் அமல்படுத்தியது. அதன்படி பிரிட்டிஷ் இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டு வெளிவரும் இதழ்களைப் பறிமுதல் செய்வதற்கான ஆணையைப் பிறப்பித்தது. 'இந்தியா', 'விஜயா', 'சூரியோதயம்' போன்ற இதழ்களை பிரிட்டிஷ் எல்லைக்குள் வந்ததுமே சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவை விற்பனையாளர்களுக்கோ, சந்தாதாரகளின் கைகளுக்கோ செல்வது முழுமையாகத் தடை செய்யப்பட்டது. இதனால், சந்தாதாரர்களிடமிருந்தும் விற்பனையாளர்களிடமிருந்தும் 'இதழ்கள் கிடைக்கவில்லை' எனப் புகார்கள் வர ஆரம்பித்தன. படிப்படியாக இதழ்களுக்கு வருவாயும், சந்தாவும் குறைந்தது. நாளடைவில் இதழ்களைத் தொடர்ந்து நடத்த இயலாமல் போனது. வேறு வழியில்லாமல் இதழ்கள் ஒவ்வொன்றாக நிறுத்தப்பட்டன.

மீண்டும் பயணங்கள்
1910 மார்ச்வரை பத்திரிகைப் பணிகளோடு கூடவே ரகசிய சங்கப் பணிகளையும் செய்துவந்த நீலகண்டன், இதழ் நின்றுபோன பின்பு முன்போல் தீவிரமாகப் பயணங்கள் மேற்கொள்ளத் தொடங்கினார். அதற்கேற்றவாறு, கல்கத்தா நண்பர்களிடமிருந்து, 'இந்தியப் புரட்சியாளர்களுக்குப் பல ஆயுதங்களை வழங்க ஜெர்மனி ஒப்புதல் அளித்துள்ளது' என்ற ரகசியத் தகவல் வந்து சேர்ந்தது. அதனால் உற்சாகத்துடன் நீலகண்டன் தனது புரட்சி இயக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். ஏப்ரல், 1910ல், சங்கர கிருஷ்ணனை அழைத்துக்கொண்டு கோவை சென்றார். அங்கிருந்து எர்ணாகுளம், கொச்சி முதலிய இடங்களுக்குச் சென்றார். பின் தூத்துக்குடிக்குச் சென்றார். அங்கு ஆறுமுகம் பிள்ளை என்பவர் அறிமுகமானார். அவர் தேச விடுதலை உணர்வு கொண்டவர் என்பதை அறிந்து கொண்டார். அவருக்குச் சங்கத்தின் நோக்கங்களை விரிவாக எடுத்துரைத்து சங்கத்தில் இணைத்துக் கொண்டார். பின் தென்காசிக்குத் திரும்பினார்.

பாரத மாதா சங்கம்
தென்காசியில், மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளையின் இல்லத்தில் தங்கினார் நீலகண்டன். அவரது வேண்டுகோளின்படி ஏப்ரல் 4, 1910 அன்று சங்க உறுப்பினர்கள் ஆறுமுகம் பிள்ளை, மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை, வந்தேமாதரம் சுப்பிரமணிய ஐயர், தர்மராஜய்யர், சங்கரகிருஷ்ணய்யர் உள்ளிட்டோர் அங்கு ஒன்று கூடினர். ரகசிய சங்கத்திற்கு 'பாரத மாதா சங்கம்' என்ற பெயர் சூட்டப்பட்டது. சங்கத்தின் தலைவராக நீலகண்ட பிரம்மச்சாரி நியமிக்கப்பட்டார். தர்மராஜய்யர் தென்காசிப் பகுதித் தலைவராகப் பொறுப்பேற்றார்.

அந்த இல்லத்தில் அறையின் மையத்தில் ஒரு மேசைமீது அன்னை காளியின் படம் வைக்கப்பட்டிருந்தது. அதன்முன் அனைவரும் அமர்ந்தனர். நீலகண்டன் ஒரு சிற்றுரை ஆற்றினார். பின் தான் கையோடு கொண்டு வந்த அறிக்கை ஒன்றை வாசித்தார். வெள்ளையர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும்; அதற்காகப் போர் புரியவோ, புரட்சியில் ஈடுபடவோ, தனது இன்னுயிரை மாய்த்துக் கொள்ளவோ ரகசிய சங்க உறுப்பினர்கள் தயங்கக்கூடாது. சங்க நடவடிக்கைகளைப் பொதுவில் வெளியிடக் கூடாது என்பது உள்ளிட்ட சில விதிமுறைகள் அதில் இருந்தன.

அவர் வாசித்து முடித்ததும் அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாகத் தங்கள் கட்டை விரலைக் கீறி, அதிலிருந்து வடிந்த ரத்தத்தைக் கொண்டு தங்கள் தங்கள் பெயர்களுக்கு முன்னால் கைச்சாற்றுப் பதித்தனர். காளிக்கு ஆராதனை செய்யப்பட்ட குங்குமத்தைப் புனிதநீரில் இட்டுக் கலக்கி, அதனை 'வெள்ளையர்களின் ரத்தம்" என்று கூறிச் சிறிது பருகினர்.

பின் ஒவ்வொருவரும் ரகசியம் காப்பது என்றும், சங்கப் பணிகளின்போது தங்கள் தங்கள் சொந்தப் பெயர்களில் இயங்குவதில்லை என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின் தத்தம் இருப்பிடம் திரும்பினர். தூத்துக்குடிக்குச் சென்று ஆறுமுகம் பிள்ளையின் இல்லத்தில் தங்கினார் நீலகண்டன். அப்பகுதியைச் சேர்ந்த மேலும் சிலரை சங்கத்தில் உறுப்பினராகச் சேர்வதற்குத் தேர்த்நெடுத்தார். பின் புதுச்சேரிக்குத் திரும்பினார்.



வாஞ்சிநாதன் மற்றும் சிலர்
ஜூன் 1910ல், புதுச்சேரிக்கு வந்து சேர்ந்த சங்கரகிருஷ்ணன், தனது மாமனார் ஊரான புனலூருக்கு நீலகண்டனை அழைத்துச் சென்றார். அங்கு தனது உறவினர் வாஞ்சிநாதனை நீலகண்டனுக்கு அறிமுகம் செய்துவைத்தார். வாஞ்சிநாதன் திருவாங்கூர் காட்டிலாகாவில் பணி செய்துவந்த இளைஞர். தேச விடுதலையில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தவர். அவரிடம் உரையாடி, மிகுந்த மன உறுதி கொண்டிருந்த அவர் தங்களது ரகசிய சங்கத்தில் சேரத் தகுதி உடையவர் என்பதை உணர்ந்து கொண்டார் நீலகண்டன். பின் அங்கிருந்து செங்கோட்டைக்குச் சென்றார். அங்கு ஒரு வாரம் தங்கினார். பின்னர் ஜூலை மாத வாக்கில் தூத்துக்குடிக்கு வந்தார். சங்கர கிருஷ்ணனும் வாஞ்சிநாதனும் அங்கு வந்து சேர்ந்தனர்.

ஆறுமுகம் பிள்ளை ஏற்பாடு செய்திருந்த ஒரு வீட்டில், இரவு நேரத்தில் தென்காசி, செங்கோட்டை, புனலூர், தூத்துக்குடி போன்ற பகுதிகளைச் சார்ந்த வாஞ்சிநாதன், சாவடி அருணாசலம் பிள்ளை, வெங்கட்ராம ஐயர், வேம்பு ஐயர், ஹரிஹர ஐயர், ஜகந்நாத ஐயங்கார், அழகப்ப பிள்ளை, தேசிகாச்சாரி, பிச்சுமணி ஐயர், முத்துகுமாரசாமிப் பிள்ளை, சோமசுந்தரம் பிள்ளை, சுப்பையா பிள்ளை உள்ளிட்டோர் ஒன்று கூடினர். சங்கரகிருஷ்ணன் மற்றும் நீலகண்ட பிரம்மச்சாரியின் முன்னிலையில் பாரத மாதா சங்கத்தில் அனைவரும் இணைந்து ரத்தப் பிரதிக்ஞை எடுத்துக் கொண்டனர். ஆயுதமேந்திய போராட்டத்தின் வழி வெள்ளையர்களை ஒடுக்கி தேச விடுதலைக்குப் பாடுபடுவதே சங்கத்தின் முக்கிய நோக்கமாக அறிவித்தார் நீலகண்டன். ரகசியக் காப்புப் பிரமாணத்தை அவர்கள் எடுத்துக் கொண்டனர். நீலகண்டன் சங்கத்தின் பிற முக்கிய நோக்கங்களையும், ரகசியச் செயல்பாடுகளையும் பற்றி விரிவாக விளக்கினார். பின் மனநிறைவுடன் புதுச்சேரி திரும்பினார் நீலகண்டன்.

மகாயோகி ஸ்ரீ அரவிந்தர்
ஸ்ரீ அரவிந்தர் ஏப்ரல் 1910ல் புதுச்சேரி வந்தடைந்திருந்தார். பாரதியார் மூலம் அவரது அறிமுகம் நீலகண்டனுக்குக் கிடைத்தது. அரவிந்தரின் யோக முறைகள் நீலகண்டனை வெகுவாக ஈர்த்தன. கிடைத்த ஓய்வுநேரத்தில் யோகப்பயிற்சி செய்துவர ஆரம்பித்தார். மான்தோல் அல்லது புலித்தோலில் அமர்ந்து யோகம் செய்வது நல்ல பலன் தரும் என்பதை அறியவந்த நீலகண்டன், வனத்துறையில் பணியாற்றி வந்த வாஞ்சிநாதனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் தமக்கு ஒரு மான்தோல் வேண்டுமென்று கோரிக்கை வைத்திருந்தார். அந்தக் கடிதமே பிற்காலத்தில் நீலகண்டனுக்கு மிகப்பெரிய சிக்கலாக ஆனது.

சுதேசிகளின் சொர்க்க பூமி
அக்காலகட்டத்தில் புதுச்சேரி சுதேசிகளின் சொர்க்க பூமியாகத் திகழ்ந்தது. பாரதியார், மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியார், நீலகண்ட பிரம்மச்சாரி, ஸ்ரீ அரவிந்தர், அவரது சீடர்களான சுரேஷ் சக்கரவர்த்தி, நளினிகாந்த் குப்தா, பிஜாய் நாக், நாகேந்திரநாத் போன்றோர், ஹரிஹரசர்மா, என். நாகசாமி, பரலி. சு. நெல்லையப்ப பிள்ளை என விடுதலை நாட்டம் கொண்ட பலருக்கும் புகலிடமாக புதுச்சேரி அமைந்திருந்தது. அதேசமயம் ரகசியப் போலீசார் கண்காணிப்பும், தொல்லையும் அதிகமாக இருந்தது. அதையும் மீறித்தான் தனது ரகசிய சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்தார் நீலகண்ட பிரம்மச்சாரி. ஜூன், ஜூலை மாதங்களில் மீண்டும் தூத்துக்குடி, திருநெல்வேலிக்குச் சென்று, சங்க நண்பர்களைச் சந்தித்து அவர்களுக்கு உத்வேகமளித்தார். ரகசியக் கூட்டங்களை ஆங்காங்கே நடத்தினார். புதிய இளைஞர்கள் பலர் பாரத மாதா சங்கத்தில் உறுப்பினர் ஆயினர்.

இந்தக் காலகட்டத்தில்தான், ஆகஸ்ட் 1910ல், சப்கலெக்டராக இருந்த ஆஷ், திருநெல்வேலி கலெக்டராகப் பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்றார். அதை அறிந்து மாடசாமிப் பிள்ளை உள்ளிட்டவர்கள் மிகுந்த துக்கமடைந்தனர். சுதேசிகளுக்கு ஆஷின் கொடுமைகள் தொடர்ந்ததால் பலரும் அவர்மீது மிகுந்த சீற்றம் கொண்டனர். அவர்களுள் வாஞ்சிநாதன், சங்கர கிருஷ்ணன், மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை உள்ளிட்ட பாரதமாதா சங்கத்தினரும் இருந்தனர்.

ரகசியமாய் ஒரு ரகசியம்
இந்நிலையில் செப்டம்பர் 1910ல், மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியாருக்கு எம்.பி.டி. ஆச்சார்யாவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. பிரிட்டிஷ் அரசிற்கு எதிராகச் சில காரியங்களை நிகழ்த்த வேண்டும் என்றும், புதுவையில் அதனை நடத்த இயலாவிட்டால் தொலைதூரத்தில் வேறெங்காவது நடத்தலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

1910ல் பிரிட்டிஷ் அரசர் ஏழாம் எட்வர்ட் காலமாகி, ஐந்தாம் ஜார்ஜ் பட்டத்துக்கு வர இருந்தார். பிரிட்டிஷ் இந்தியாவின் அதிபராக அவர் பதவியேற்கும் சமயத்தில் இந்தியா முழுவதும் அதற்குக் கடும் எதிர்ப்புக் காட்டவேண்டும்; கலவரங்கள் நிகழ்த்த வேண்டும் என்பதுதான் கடிதத்தில் ரகசியமாகக் கூறப்பட்ட செய்தி. அது குறித்த மேலதிகத் தகவல்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார் ஸ்ரீநிவாஸாச்சாரியார்.

அரவிந்தரைத் தொடர்ந்து அக்டோபர் 1910ல், லண்டலிருந்து மாறுவேடத்தில் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார், பிரிட்டிஷார் அஞ்சிய மாவீரர் வ.வே.சு. ஐயர். ஐயரின் வருகை, ஆஷின் கொலைக்கு வித்திட்டது.

(தொடரும்)

பா.சு.ரமணன்

© TamilOnline.com