திருவீழிமிழலை ஸ்ரீ பத்ரவல்லீஸ்வரர் ஆலயம்
தமிழ்நாட்டின் குடவாசல் தாலுகாவில் மயிலாடுதுறை அருகே உள்ள பூந்தோட்டத்திற்கு அருகில் இத்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்தும் செல்லலாம். சித்தர்கள் இக்கோயிலைப் புகழ்ந்து பாடியுள்ளனர்.

தலப்பெருமை
இறைவன் நாமம் பத்ரவல்லீஸ்வரர். இறைவி நாமம் பத்ரவல்லி. சுவாமி, அம்மன், தட்சிணாமூர்த்தி, ஐஸ்வர்ய விநாயகர் என நான்கு தெய்வ சந்நிதிகள் கொண்டது இவ்வாலயம். சிறிய தோப்பின் நடுவில் அமைந்துள்ளது. ஆலயத்தை ஒட்டிப் பக்கத்தில் தோல், நரம்பு சம்பந்தமான நோய், வலிப்பு நோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும் 'வலி தீர்த்தம்' என்னும் கிணறு உள்ளது. அந்தக் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து, தீர்த்தத்தில் மூழ்கி பத்ரவல்லி அம்மனுடன் பத்ரவல்லீஸ்வரரை வணங்குபவர்களுக்கு நோய் பூரண குணமாகிறது எனச் சித்தர் பாடல்கள் கூறுகின்றன. நந்திமுனி சித்தர், கொங்கண சித்தர், பொய்யாமொழிச் சித்தர் பாம்பாட்டிச் சித்தர் கருவூர் சித்தர் எனப் பலர் இதுகுறித்துப் பாடியுள்ளனர்.

பல நூறு வருடங்களுக்கு முன்னால் புரூரவஸ் என்ற மன்னனின் மனைவி பத்ரவல்லிக்கு வலிப்பு நோய் கண்டு, பல தலங்களுக்குச் சென்று வழிபட்டும் நோய் குணமடையவில்லை. இறுதியில் திருவீழிமிழலை தலத்திற்கு வந்து அத்தல இறைவனை நோய் குணமாகப் பிரார்த்தித்தாள். அன்றிரவு பத்ரவல்லியின் கனவில் சிவன், தட்சிணாமூர்த்தி வடிவில் தோன்றி, கிணறு வடிவமான வலி தீர்த்தத்தில் நீராடி, எம்மை வழிபட்டால் உன் நோய் குணமடையும் எனக் கூறியருளினார். அதன்படிச் செய்து பத்திரவல்லி பூரணகுணம் பெற்றாள். பின்னர் சிவபெருமானுக்குக் கோயில் கட்ட விரும்பி அங்குள்ள ஐஸ்வர்ய விநாயகரை வேண்ட, அவர் செல்வத்தைத் தந்தருளினார். அதன்படி இக்கோயிலை எழுப்பியதாக வரலாறு. விநாயகர் சதுர்த்தியன்று இங்குள்ள விநாயகரைத் தொழுதால் செல்வம் சேரும் என்பது சித்தர் வாக்கு.



அன்னை பார்வதி, காத்யாயன முனிவரின் மகளாக, காத்யாயனி என்ற பெயருடன் வளர்ந்தாள். அவளைத் திருமணம் செய்துகொள்ள வந்த சிவனின் நெற்றிக்கண்ணைக் கண்டு அவருக்கு முனிவர் தனது பெண்ணை மணமுடித்துக் கொடுத்தார்.

இந்த காத்யாயனியை மணந்த பத்ரவல்லீஸ்வரரைத் தொழுதால் ஆண், பெண் குடும்பத்தார் மகிழும் விதம் பொருத்தமான வரனை பத்ரவல்லீஸ்வரர் கொண்டு வந்து சேர்ப்பார் என்பது ஐதீகம். திருவீழிமலையிலிருந்து சில மைல் தூரத்தில் தோப்பின் நடுவில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், தட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன் இல்லை. வியாழக்கிழமை அன்று வரும் அஷ்டமி மாலை வேளையில் இத்தலத்து தட்சிணாமூர்த்தியை வணங்கினால், குடும்பத்திற்கு மகிழ்ச்சியைத் தந்தருளி உயர்த்துவார் என்று சித்தர் வாக்கில் கூறப்பட்டுள்ளது.

கோயிலில் தினசரி பூஜைகள் நன்கு நடைபெறுகின்றன.

சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com