ஸ்ருதிஸ்வரலயா: கலாசார மாலை
ஏப்ரல் 23, 2005 அன்று 'சம்ஸ்கிருதி மாலா' (கலாசார மாலை) என்ற இசை, நடன நிகழ்ச்சியை ஸ்ருதிஸ்வரலயா கொண் டாடியது. காலை 9 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை நடத்தப்பட்டது இதன் சிறப்புகளில் ஒன்று.

சுமார் நாற்பது குழந்தைகள் மூன்று மணி நேரம் தனித்தனியாகப் பாட, சம்ஸ்கிருதி மாலா ஆரம்பித்தது. தொடர்ந்து, பரத நாட்டிய மாணவிகள் ஒரு மணி நேரம் நடனம் செய்தனர்.

ஸ்ருதிஸ்வரலயாவின் அனுராதா சுரேஷ் ஒருமணி நேரம் கச்சேரி செய்தார்.

கண்ணனையும், திருமாலையும் பற்றிப் பாடி, தான் பக்திப் பரவசத்தில் ஆழ்ந்ததுடன் எல்லோரையும் நெகிழ வைத்தார்.

அவர்களுடன் மானசா சுரேஷ் இணைந்து பாடினார். மைதிலி ராஜப்பன் (வயலின்), ரவீந்திர பாரதி (மிருதங்கம்) ஆகியோர் பக்க வாத்தியம் வாசித்தார்கள். மோகனகல்யாணி ராகத்தில் 'சித்திவிநாயகம்' என்ற பாடலுடன் கச்சேரி தொடங்கி, 'முன் செய்த தவப் பயனே', 'நம்பிக்கெட்டவர்', 'உன்னை அல்லால்', 'தருணம் இதம்மா', 'ஒருத்தி மகனாய்' போன்ற பிரபல தமிழிசைப் பாடல்களால் சுகமாக நடத்திச் சென்றார். 'ஸ்ரீரகுவர', 'வாரிஜ தள நயனா' போன்ற கீர்த்தனைகளும் மனதைக் கவர்ந்தன.

அடுத்து, மிருதங்க மாணவர்கள், தனி ஆவர்த்தனம் வாசித்தனர். சுமார் 12 மிருதங்க மாணவர்கள், தங்கள் ஆசிரியர் ரவீந்தர பாரதி ஸ்ரீதரனுடன் சேர்ந்து ஆதி தாளத்தில் வாசித்தார்கள். தாள வாத்யக் கச்சேரி திஸ்ரம் மற்றும் சதுஸ்ர கதி பேதத்தில் ஆரம்பித்தது.

மாணவர்கள் கீழ்க் காலத்திலும் (மெதுவான வேகம்), மேல் காலத்திலும் மாறிமாறி வாசித்தார்கள். ஒருவரிடமிருந்து ஒருவர் கைமாறிய விதம் மிகவும் நேர்த்தியாக இருந்தது.

பிறகு, கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் பாடங் களை பல்வேறு மாணவர்கள் வாசித்தார்கள்.

லுப்னா அவர்கள் ஹிந்துஸ்தானியில் துர்கா சாலிசாவும், பது வேதம் நவராக மாலிகா வர்ணமும், கீதா சாலிக்ராமம் பேரியில் நந்த கோபாலாவும் அளித்தார்கள்.

ஸ்ருதிஸ்வரலயாவின் மேல்நிலை மாணவர்கள் சுமார் முப்பது பேர் பங்கேற்று 3 மணி நேர நிகழ்ச்சி வழங்கினர். பிரசன்னா பஞ்சரத்ன கீர்த்தனை பாடினார். சைலஜா, ரேகா, மாதுரி, பத்மப்ரியா போன்ற மாணவிகள், வாரம் தோறும், வகுப்பு நேரம் தவிர எஞ்சிய நேரத்திலும் ஒன்று கூடி, இசைப் பயிற்சி செய்வதையும் புதிய மாணவர்களுக்குக் கற்றுக்கொள்ள உதவி செய்வதையும் ஸ்ருதிஸ்வரலயாவில் காண லாம். அவர்களின் ஆர்வமும், உழைப்பும், இந்நிகழ்ச்சிகளுக்கு மெருகூட்டுகின்றது என்றால் மிகையாகாது.

குரலிசை, வயலின், புல்லாங்குழல், வீணை, மிருதங்கம், பரதநாட்டியம் என்று பாரத நாட்டின் பாரம்பரியக் கலைகளின் அனைத்து அம்சங்களும் நிறைந்த இந் நிகழ்ச்சி, இந்திய அமெரிக்கக் கலாச்சார மாலையை கலைவாணிக்குச் சாற்றியது.

பாகிரதி சேஷப்பன்

© TamilOnline.com