காஞ்சி மஹாபெரியவர், பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா, பக்த மீரா, குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை ஸ்ரீ சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர், பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி போன்ற ஆன்மீக, அவதார புருடர்களின் வாழ்க்கையை, உபதேசங்களை, தத்துவங்களை மிக விரிவாக எழுத்தில் பதிவுசெய்து, லட்சக்கணக்கானோர் உள்ளத்தில் ஆன்மீகத்தை விதைத்தவர் ரா. கணபதி. ஆன்மிக எழுத்துக்கெனவே வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டு, 'ஸ்வாமி'யையும், 'தெய்வத்தின் குரலை'யும் பாமரர்முதல் பண்டிதர்வரை அனைவரும் அறியக் காரணமான கர்மயோகி. செப்டம்பர்1, 1935 அன்று, கடலூரில், ராமச்சந்திர ஐயர் - ஜெயலட்சுமி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவர் பிறந்தநாள் அன்று விநாயக சதுர்த்தி. அதனால் தந்தை இவருக்கு 'கணபதி' என்று பெயர் சூட்டினார். தந்தை பிரிட்டிஷ் அரசாங்கத்தில் அதிகாரி. எனவே பல்வேறு நகரங்களில் கணபதியின் குழந்தைப்பருவம் கழிந்தது. சென்னை ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் கற்றார். பின் சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து பயின்று ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ. (ஆனர்ஸ்) பட்டம் பெற்றார். குடும்ப நண்பர் ஒருவர் மூலம் பத்திரிகையில் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. ஆங்கிலத்திலும் தமிழிலும் இருந்த தேர்ச்சியால் சிறந்த பத்திரிகையாளராகப் பரிணமித்தார்.
ஒரு சமயம் ஸ்ரீபெரும்புதூருக்கு வந்திருந்த காஞ்சி மஹாபெரியவரை தரிசிக்கும் வாய்ப்பு கணபதிக்குக் கிட்டியது. பெரியவரின் அருட்பார்வை சுமார் பத்து நிமிடங்கள்வரை கணபதியின்மீது பதிந்தது. அது அவரது வாழ்க்கையில் திருப்புமுனை ஆனது. அதுவரை பெரிதாக ஆன்மிக நாட்டமோ, பக்தியோ இலலாதிருந்த அவர் மனம், மெல்ல மெல்ல ஆன்மிகத்தின்பால் திரும்பியது. மஹாபெரியவரையே குருவாக அடையாளம் கண்டுகொண்டார். காஞ்சி மஹாபெரியவரின் அன்பும் ஆசியும் கணபதிக்குக் கிடைத்தது. பத்திரிகைப் பணியும் தொடர்ந்தது. ராஜாஜியின் 'ஸ்வராஜ்யா' இதழுக்கு கணபதி ஆங்கிலத்தில் பல கட்டுரைகளை எழுதினார். இசை தொடர்பான ஒரு நிகழ்விற்காக எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதினார் கணபதி. அக்கடிதத்தைப் படித்த 'கல்கி' இதழ் உரிமையாளர் சதாசிவம், கணபதியின் மேதைமையை உணர்ந்து கொண்டார். 'கல்கி' இதழில் பணியாற்ற அழைத்தார். அது கணபதியின் வாழ்க்கையில் அடுத்த திருப்புமுனை. 27 வயதில் கல்கி இதழின் ஆசிரியர் குழுவில் இணைந்தார். அந்த ஆண்டே ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றைத் தொடராக எழுதும் வாய்ப்பு வந்தது. 'ஜய ஜய சங்கர' என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்தார். ஓவிய மாமேதை மணியம் அவர்களின் சிறப்புமிக்க ஓவியங்களுடன் வெளியான அந்தத் தொடர், வாசகர்களிடம் மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றது. ரா. கணபதி நாடறிந்த ஆன்மீக எழுத்தாளரானார் தொடர்ந்து எழுத வாய்ப்பும் ஊக்கமும் அளித்தார் சதாசிவம்.
ஆன்மீகக் கட்டுரைகள், ஆலயங்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகள், புராதனத் தலங்கள் பற்றிய புராணக் கதைகள், தொடர்கள், சிறுகதைகள் என்று நிறைய எழுதினார் கணபதி. 'கன்யா' என்ற புனைபெயரில் பல கட்டுரைகளை எழுதிய அவர், இசைபற்றிய கட்டுரைகளை 'ராகபதி' என்ற பெயரில் எழுதினார். வேறு சில புனைபெயர்களிலும் எழுதினார். நாளடைவில் இதழின் உதவி ஆசிரியராக உயர்ந்தார். இவர் எழுதிய 'அறிவுக்கனலே! அருட்புனலே!' தொடர் மிகுந்த வாசக வரவேற்பைப் பெற்றது. பக்த மீராவின் வாழ்க்கையை 'காற்றினிலே வரும் கீதம்' என்ற தலைப்பில் எழுதினார். பகவான் சத்ய சாயிபாபாவின் வாழ்க்கை வரலாறு "ஸ்வாமி' ஆனது. பகவான் பாபாவின் ஆசியுடன் வெளியிடப்பட்ட அந்த நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பாபாவைப் பற்றி பாமரரும் அறிந்துகொள்ளக் காரணமானது. தமிழகத்தில் படித்தவர் முதல் பாமரர்வரை பலரையும் பகவான் பாபாவின் பக்தர்களாக ஆக்கியது அந்த நூல்தான்.
ரா. கணபதியின் நூல்கள் வாழ்க்கை வரலாறுகள்: ஜய ஜய சங்கர (ஆதி சங்கரர்), காற்றினிலே வரும் கீதம் (பக்த மீரா), அறிவுக்கனலே அருட்புனலே (ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர்), அம்மா (அன்னை ஸ்ரீ சாராதா தேவி), ரமண மணம் (பகவான் ஸ்ரீ ரமணர் வாழ்க்கை, உபதேசம்), ஸ்வாமி (பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா), காமகோடி ராமகோடி (ஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகள்), ஸ்ரீமாதா (லலிதாதேவி), நவராத்ரி நாயகி ('துர்கா ஸப்தசதீ'யின் தமிழ் விரிவாக்கம்)
கட்டுரை நூல்கள்: தெய்வத்தின் குரல் (7 பாகங்கள்), கருணைக் காஞ்சி கனகதாரை, சொல்லின் செல்வர் ஸ்ரீகாஞ்சி முனிவர், கருணைக் கடலில் சில அலைகள், காஞ்சி முனிவர் -நினைவுக் கதம்பம், ஸ்ரீகாஞ்சி முனிவர், மைத்ரீம் பஜத, சங்கரர் என்ற சங்கீதம், மஹா பெரியவாள் விருந்து, காமாக்ஷி கடாக்ஷி, ஜய ஹனுமான், தரிசனம், லீலா நாடக சாயி, தீராத விளையாட்டு சாயி, இறைவன் அவதாரம் இருபத்தி நான்கு, அன்பு வேணுமா அன்பு, அன்பு அறுபது, அறிவு அறுபது, அற்புதம் அறுபது மற்றும் பல.
ஆங்கில நூல்: Baba: Satya Sai (Part 1 & 2)
தொடர்ந்து அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் வாழ்க்கை வரலாற்றை 'அம்மா' என்ற பெயரில் எழுதினார் கணபதி. அந்த நூல் பற்றி, "ஜய ஜய சங்கரவுக்குப் பிறகு நான் எழுதிய பல சரிதங்களில் 'அம்மா'வே அதற்கு இணையான அமோக வரவேற்பைப் பெற்றாள். 'ஜய ஜய' என்று அதை இரட்டிப்பாக்கி வெற்றி கோஷத்துடன் தலைப்புக் கொண்டதாலேயே சங்கர சரிதம் பெரிய வரவேற்பு பெற்றது போலும். சாரதா சரிதமோ 'அம்மா' என்றே பெயரிடப்பட்டது. பிள்ளைக்குப் பெருமை தரவேண்டும் என்றே அம்மா இதற்கு நல்ல வரவேற்பை உண்டாக்கி இருப்பாளோ?" என்று சொல்லி வியக்கிறார்.
'கல்கி'யில் பல ஆண்டுகளாக, காஞ்சி மஹாபெரியவரின் அறிவுரைகள் 'அருள்வாக்கு' என்ற பெயரில் வெளியாகிவந்தன. அவற்றைத் தொகுத்து ஒரு நூலாக்கலாம் என வானதி திருநாவுக்கரசு, கணபதியிடம் ஆலோசனை கூறினார். அதற்கு கணபதி, மஹாபெரியவரைச் சந்தித்து அனுமதி வேண்டினார். மஹாபெரியவரும் அதற்கு ஆசி அளித்தார். அதுவே 'தெய்வத்தின் குரல்' ஆக முகிழ்த்தது. மஹாபெரியவரைச் சந்தித்து உரையாடி அவரிடமிருந்து பெற்ற தகவல்களையும், அவர் பற்பல இடங்களில் சொற்பொழிவாற்றிய விஷயங்களையும் தொகுத்து அந்த நூலை உருவாக்கியிருந்தார் கணபதி. வியாசர் சொல்லச்சொல்ல கணபதி மகாபாரதம் எழுதியதுபோல், மஹாபெரியவர் சொற்களின் தொகுப்பாக அந்த நூல் உருவானது. நூலின் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார் கணபதி: "ஸ்ரீ பெரியவாளின் உபன்யாசங்கள் பல ஏற்கெனவே நூல்களாக வந்திருக்கின்றன. அவற்றுக்கும் 'தெய்வத்தின் குரலு'க்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம், இதுவரை தனித்தனியாக ஓரொரு சந்தர்ப்பத்தில் அவர்கள் ஆற்றிய உரைகள் தனிக் கட்டுரைகளாகவே வெளிவந்துள்ளன. இங்கேயோ ஒரே பொருள் குறித்து அவர் பல்வேறு உபன்யாசங்களிலும், ஸ்ரீ முகங்களிலும், அறிக்கைகளிலும், தனிப்பட்ட உரையாடல்களிலும் வெளியிட்டுள்ள கருத்துக்கள் யாவும் ஒரு தலைப்பின் கீழ் தொகுத்துத் தரப்படுகின்றன. ஏற்கெனவே வெளியான நூல்கள், பத்திரிகைக் குறிப்புக்கள் கட்டுரைகள், 'டேப்'கள், அயல்நாட்டினர் பலருக்கு அளித்த பேட்டிகள் ஆகியவற்றிலிருந்தும், அதோடு மேடைப்பிரசங்கமாக அல்லாமல் ஒரு சில அடியாரிடை அவர் அகஸ்மாத்தாக ஆற்றிய மஹாபிரசங்கங்கள், தனிப்பட்டவர்களுக்குத் தந்த சந்தேக விளக்கங்கள், சம்பாஷணைகள் ஆகியவற்றிலிருந்தும் செய்யப்பட்ட தொகுப்பே இது" என்கிறார்.
ஸ்ரீ சத்திய சாயிபாபாவுடன் எம்.எஸ். அம்மாவும் ரா. கணபதியும்
மேலும் அவர், "நான் இந்த நூலின் தொகுப்பாசிரியனாக இருக்கிறேன். இங்கே என் பெயரைப் போட்டுக்கொள்ள வேண்டாம் என்றே முதலில் எண்ணினேன். பிறகு ஸ்ரீ பெரியவாளின் காரணமில்லாத பெருங்கருணை என்னவெல்லாம் செய்கிறது, அது எப்படி இருபதாண்டுகளுக்கு முன் உதவாக்கரையாக் கிடந்த ஒருவனை இன்று அவரது மணி வாக்குகளையே தொடுத்து அம்பாள் மயமான அவர் பாதத்தில் சூட்டுமளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது என்பதை நாடறியவேண்டும் என்பதற்காகவே, பெயர் போட்டுக் கொள்ளத்தான் வேண்டும் எனத் துணிந்தேன்" என்கிறார், தன்னடக்கத்துடன்.
இந்துமதத் தத்துவங்கள், தர்ம சாஸ்திரங்கள், புராண, இதிகாசாங்கள், வேதம், உபநிஷத்துகள், இலக்கியங்கள் எனப் பல பொக்கிஷங்களின் செய்திகளைக் கொண்ட களஞ்சியமாக 'தெய்வத்தின் குரல்' இருக்கிறது. மகேந்திரநாத் குப்த மகாசயர் எப்படி குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உரையாடல்களை, உபதேசங்களைத் தொகுத்து அளித்தாரோ அவ்வாறே மிகச்சிறப்பாக 'தெய்வத்தில் குரல்' ஒலித்தது. அதுவும் காஞ்சி மஹாபெரியவர் எப்படி, எந்தத் தொனியில், பாணியில் உரையாற்றுவாரோ அப்படியே நூல் அமைந்ததால் அது வாசகர்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. வாசகர்களால் மிகவும் வரவேற்கப்பட்ட அந்த நூல் ஏழு பாகங்களாக வெளியானது. அந்த நூல் பின்னர் 'Voice of God' என்று ஆங்கிலத்திலும், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. மேனாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் 'தெய்வத்தின் குரல்' தொகுப்பை, 'சந்திரசேகரேந்திர உபநிஷத்' என்றே போற்றினார்.
தொடர்ந்து பல ஆன்மீக நூல்களை எழுதி, தமிழகத்தின் அழியாத ஆன்மீக இலக்கிய வரலாற்றில் தனித்தடம் பதித்தார் ரா. கணபதி.
1974ல் கல்கியிலிருந்து விலகி சுயச்சார்பு எழுத்தாளரானார் கணபதி. கல்கி, கோபுர தரிசனம், அமுதசுரபி, அமரபாரதி, காமகோடி உள்ளிட்ட பல இதழ்களுக்கு ஆன்மீகக் கட்டுரைகள், தொடர்கள் எழுதினார். பகவான் சத்ய சாயிபாபா, காஞ்சி மஹாபெரியவர் ஆகியோர்மீது பாடல்களைப் புனைய, அவற்றை எம்.எஸ். உள்ளிட்டோர் பாடி கணபதிக்குப் பெருமை சேர்த்தனர்.
யோகி ராம்சுரத்குமாருடன் ரா. கணபதி
தன் எழுத்தைப் பற்றி கணபதி, "என்னைப் பொறுத்தமட்டில் அன்பிலோ, அனுஷ்டானத்திலோ, எளிமையிலோ, படிப்பிலோ, ஒழுக்கத்திலோ நான் முழுமைக்கு வெகு தொலைவிலேயே நிற்கிறேன். இருந்தாலும் சமய விஷயமாக நாலு எழுத்து எழுத முடிந்திருக்கிறதென்றால் அதற்கு நம்பிக்கைதான் காரணமாக இருந்திருக்கிறது. மஹான் ஒருவரிடமுள்ள நம்பிக்கை, எப்படி அணைத்து அணைத்துக் காப்பாற்றுகிறது என்பதை அனுபவித்துப் பார்த்தவர்களே உணரமுடியும் ஈச்வரன் அல்லது அவனது உருவமாகிய மகான்களின் அநுக்கிரக சக்தியை நம்பாதவர் சமய இலக்கியம் செய்யவே முடியாது" என்கிறார்.
வாழ்வாங்கு வாழ்ந்த கணபதி தமது இறுதிக்காலம் முழுவதையும் பக்தியிலும் தியானத்திலுமே கழித்தார். உடல் தளர்ந்து நோயுற்றபோதும் நித்யபூஜை, அனுஷ்டானங்களை அவர் கைவிடாமல் தொடர்ந்தார். விநாயகர் சதுர்த்தி அன்று பிறந்த அவர், பிப்ரவரி 20, 2012 மஹா சிவராத்திரி தினத்தன்று, பகவானின் நாமத்தை ஜபித்தவாறே பூரண நினைவுடன் இறையொளியில் கலந்தார்.
ஆன்மீக எழுத்து என்னும் அழகிய தடாகத்தில் அரியதோர் பொற்றாமரை ரா. கணபதி அவர்கள்.
அரவிந்த் |