"யோகக்ஷேமம் வஹாம்யஹம்"
கடவுள் தன் பக்தனின் நலத்தைப் பேணுவேன் என்பதைக் கூறும் "யோகக்ஷேமம் வஹாம்யஹம்" என்ற ஸ்ரீமத் பகவத்கீதை வாக்கியம் பலவகையில் தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டுள்ளது. மற்றவர்களை விடுங்கள், பண்டிதர்கள்கூட அதன் உண்மைப் பொருளைப் புரிந்துகொள்ளவில்லை. மகாராஜாவின் முன்னிலையில், மெத்தக் கற்ற பண்டிதர் ஒருவர் பகவத்கீதையை விரித்துரைத்தார். ஒருநாள்,

அனன்யாஸ் சிந்தயந்தோ மாம்
யே ஜனாஹ்பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபியுக்தானாம்
யோகக்ஷேமம் வஹம்யஹம்


என்ற சுலோகத்துக்குப் பொருள் கூறினார். அதன் பல பரிமாணம் கொண்ட பொருளைப் பண்டிதர் உற்சாகமாக விரித்துரைத்தார். ஆனால் மகாராஜா தலையசைத்து, "அந்தப் பொருள் சரியல்ல" என்று மறுத்தார். பண்டிதர் கூறிய ஒவ்வொரு பொருளையும் அவர் மறுத்துக் கூறியவண்ணம் இருந்தார். அந்தப் பண்டிதர் பல மகாராஜாக்களால் கௌரவிக்கப் பட்டவர், அவர்களெல்லாம் அவருக்குப் படாடோபமான பட்டங்களைக் கொடுத்திருந்தார்கள். அவையில் அத்தனை பேர் முன்னிலையில் மகாராஜா அவர் கூறியது "தவறு" என்றபோது அவர் கத்தியால் குத்தப்பட்டதுபோல உணர்ந்தார். அவமானம் அவரைப் புண்படுத்தியது. ஆனால் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, தனது பாண்டித்தியம் அனைத்தையும் துணைக்கு அழைத்துக்கொண்டு, "யோகம்", "க்ஷேமம்" ஆகிய சொற்களின் பொருள் இன்னதென்பதைப் பலவாறாக விரித்துரைக்கத் தொடங்கினார். இதையும் மகாராஜா ஏற்கவில்லை. "இந்த சுலோகத்தின் பொருளைக் கண்டறியுங்கள். அதை நன்கு புரிந்துகொண்டு நாளைக்கு என்னிடம் வாருங்கள்" என்று ஆணையிட்ட அரசர், சிம்மாசனத்தை விட்டெழுந்து அந்தப்புரத்துக்குப் போய்விட்டார்.

தன்னிடமிருந்த சிறிதளவு தைரியத்தையும் இழந்தார் பண்டிதர். அவரைத் துயரத்தின் பாரம் அழுத்தியது; அவமானத்தில் தட்டுத் தடுமாறி நடந்து சென்று, வீட்டை அடைந்து, கீதையை ஒருபக்கம் வைத்துவிட்டுப் படுக்கையில் விழுந்தார். இதைக் கண்டு ஆச்சரியப்பட்ட அவரது மனைவி, "சொல்லுங்கள், ஏன் அரசவையிலிருந்து இத்தனை கவலையோடு வீடு வந்திருக்கிறீர்கள்? என்னதான் நடந்தது?" என்று கேட்டாள். அவள் மிகுந்த கரிசனத்தோடு கேள்விமேல் கேள்வி கேட்கவே, தனக்கு ஏற்பட்ட அவமானத்தையும், அரசர் அவரை என்ன செய்ய ஆணையிட்டு வீட்டுக்கு அனுப்பினார் என்பதையும் பண்டிதர் கூற வேண்டியதாயிற்று.

நடந்தவற்றை மனைவி பொறுமையாகக் கேட்டாள். ஆழ்ந்து சிந்தித்த பின்னர், "அது உண்மைதான். மகாராஜா கூறியது சரியே. சுலோகத்துக்கு நீங்கள் கூறிய விளக்கம் சரியானதல்ல. அதை எப்படி அவர் ஏற்பார்? தவறு உங்களுடையதுதான்" என்று கூறினாள். இதைக் கேட்டதும் பண்டிதர் வாலில் மிதிபட்ட நாகம்போலக் கட்டிலில் இருந்து சீறி எழுந்தார். "முட்டாள் பெண்ணே, உனக்கென்ன தெரியும்? நானென்ன உன்னைவிட அறிவில் குறைந்தவனா? சமைப்பது, பரிமாறுவது என்று எப்போதும் சமையலறையில் உழன்று கொண்டிருக்கும் உனக்கு என்னைவிட அதிகம் தெரியும் என்கிறாயா? வாயை மூடிக்கொண்டு இங்கிருந்து போய்விடு" என்றார் பண்டிதர்.

அந்தப் பெண்மணி விடுவதாக இல்லை. "பிரபு! ஓர் உண்மையைச் சொன்னால் ஏன் இப்படிச் சீறியெழுகிறீர்கள்? அந்த சுலோகத்தை உங்களுக்குள்ளே ஒருமுறை சொல்லிப் பார்த்துக்கொண்டு அதன் பொருளைச் சிந்தியுங்கள். அப்போது சரியான விடையைக் கண்டுபிடித்து விடுவீர்கள்" என்றாள். மனைவியின் இந்த மென்மையான சொற்கள் கணவரின் மனதிற்கு அமைதி கொடுத்தன.

சுலோகத்தின் ஒவ்வொரு சொல்லாக ஆராய்ந்து அதன் பொருளைச் சிந்தித்தார். "அனன்யாஸ் சிந்தயந்தோ மாம்" என்று மெல்லத் தொடங்கி, சொற்களின் பொருட்களை உரக்கச் சொல்லிப் பார்த்தார். மனைவி குறுக்கிட்டு, "சொற்களின் பொருளை விளக்குவதற்காக மட்டுமே அதைக் கற்பதால் என்ன பயன்? மகாராஜாவிடம் நீங்கள் சென்றதன் நோக்கம் என்ன என்று சொல்லுங்கள்" என்று கேட்டாள். பண்டிதருக்கு வந்தது கோபம். "இந்தக் குடும்பத்தை, வீட்டை நான் நடத்த வேண்டுமா, வேண்டாமா? உனக்கும் மற்றவர்களுக்கும் சோற்றுக்கும் துணிக்கும் நான் எங்கே போவது? இதற்காகத்தான் நான் அவரிடம் போனேன். இல்லையென்றால் எனக்கு ராஜாவிடம் என்ன வேலை?" என்று கத்தினார்.

"இந்த சுலோகத்தில் கிருஷ்ண பரமாத்மா என்ன சொல்கிறார் என்பதை மட்டும் நீங்கள் புரிந்துகொண்டிருந்தால், ராஜாவிடம் போகும் எண்ணமே உங்களுக்கு வந்திருக்காது! வேறெந்தச் சிந்தனையும் இல்லாமல், தன்னை மட்டுமே சரணடைந்து, எல்லா நேரமும் தன்மீதே மனதை நிறுத்தினால், அப்போது பகவான் பக்தனுக்கு வேண்டிய அனைத்தையும் தருவதாக இந்த சுலோகத்தில் உறுதியளிக்கிறார். இந்த மூன்றையும் நீங்கள் செய்யவில்லை. மகாராஜா எல்லாமே கொடுப்பார் என்று நம்பிக்கொண்டு நீங்கள் அவரிடம் சென்றீர்கள்! அங்கேதான் நீங்கள் இந்த சுலோகத்தின் உட்பொருளுக்கு எதிராகப் போய்விட்டீர்கள். அதனால்தான் அவர் உங்கள் விளக்கத்தை ஏற்கவில்லை" என்று மனைவி கூறினாள்.

இதைக் காதில் வாங்கிக்கொண்ட பண்டிதர் சிறிது நேரம் அதை மனதில் அசை போட்டார். தனது தவறு அவருக்குப் புரிந்தது. மறுநாள் அவர் அரண்மனைக்குப் போகவில்லை. வீட்டிலேயே கிருஷ்ணனை வழிபடுவதில் மூழ்கினார். அரசர் ஏன் பண்டிதர் வரவில்லை என்று விசாரித்தபோது, அவர் வீட்டிலேயே இருக்கிறார், கிளம்பவில்லை என்று அவையினர் கூறினர். ஒரு தூதரை அரசர் அனுப்பிய போதும் பண்டிதர் போக மறுத்துவிட்டார். "எவரிடமும் நான் போகத் தேவையில்லை. என் கிருஷ்ணன் எனக்கு எல்லாவற்றையும் தருவான். எனது யோகக்ஷேமத்தை அவனே பார்த்துக்கொள்வான். சொற்களில் புதைந்து கிடைக்கும் பல்வேறு பொருட்களைப் புரிந்துகொள்ளும் ஆர்வத்தில் குருடாகி, நான் இத்தனை நாளாக இதனைப் புரிந்துகொள்ளவில்லை. அவனைச் சரணடைந்து, இடைவிடாமல் அவனையே வழிபட்டால், அவனே எனக்குத் தேவையான அனைத்தையும் கொடுப்பான்" என்றார் பண்டிதர்.

தூதர் இந்தச் செய்தியை அரசரிடம் கூறியதும், அரசர் பண்டிதரின் வீடு நோக்கிக் கால் நடையாகவே கிளம்பிவிட்டார். பண்டிதரின் காலில் விழுந்து, "நேற்று விரித்துரைத்த சுலோகத்தின் பொருளை, இன்றைக்கு உங்கள் அனுபவத்திலிருந்தே எனக்கு விளக்கியதற்கு நான் மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறேன்" என்று கூறினார். அனுபவமென்னும் உலையிலிருந்து வெளிப்படாத ஆன்மீக விஷயம் எதையும் பிரசாரம் செய்வது வெறும் வெளிப்பூச்சே என்பதை இவ்வாறாக அரசர் பண்டிதருக்குப் புரியவைத்தார்.

நன்றி: 'சனாதன சாரதி', ஃபிப்ரவரி, 2020

(உலகில் எந்தப் பகுதியில் இருந்தாலும் சனாதன சாரதி தமிழ் மின்னிதழைப் பெறலாம். வருடச் சந்தா ரூ. 90 மட்டும். ஆன்லைனில் சந்தா செலுத்த)

பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா

© TamilOnline.com