அபிமன்யு வதத்துக்கு வித்து
அர்ஜுனனைக் கொல்வேன், அவனைக் கொல்லும் வரையில் இன்னின்னது செய்யேன் என்று கர்ணன் செய்த சபதத்தை தருமபுத்திரர் ஒற்றர்கள் மூலமாக அறிந்து அஞ்சினார். தருமபுத்திரர் கர்ணனை நினைத்துக் கவலைப்படும் இடங்களை நாம் சுட்டியிருக்கிறோம். அவ்வாறு சுட்டியிருப்பது சில இடங்கள் மட்டுமே. துரியோதனனுக்கு பீமன் மீதும் அர்ஜுனன் மீதும் அச்சம் இருந்தது. 'பீமனைக் கதாயுதப் போரில் வெல்லத் தான் ஒருவனே போதும்' என்று அவன் நம்பினான். அர்ஜுனனை வெல்வதற்குக் கர்ணனையே பெரிதும் நம்பியிருந்தான். ஆனால், எவ்வளவோ அசாத்தியமான பயிற்சிகளை மேற்கொண்டும், (இந்திரனுக்கே துணை தேவைப்பட்ட நிவாத கவசர்களைத் தனியொருவனாக அழித்தது உட்பட) யாராலும் முடியாத காரியங்களைச் செய்துகாட்டியிருந்த போதிலும், தர்மபுத்திரருக்கு அர்ஜுனன் மீது இருந்த நம்பிக்கையைக் காட்டிலும் கர்ணன் மீது இருந்த அச்சம்-ஒரு காரணமும் இன்றி-அதிகமாகவே இருந்தது. இதன் காரணமாகவே பதினேழாம் நாள் யுத்தத்தில் தர்மபுத்திரர், கர்ணனிடத்தில் தோற்று, பாசறையில் தனித்திருந்த தன்னைக் காணவந்த அர்ஜுனனையும் அவனுடைய காண்டீவத்தையும் அவசரப்பட்டு பழித்ததும், 'காண்டீவத்தைப் பழித்தவனைக் கொல்வேன் என்று சபதம் செய்திருக்கிறேன்' என்று சொன்னபடி அர்ஜுனன், தர்மபுத்திரர் மீது வாளை ஓங்கியதும், இடையில் புகுந்த ஸ்ரீகிருஷ்ணன் நடக்கவிருந்த விபரீதத்தைத் தடுத்து, 'இதற்கு இது மாற்று; இதற்கு இது மாற்று' என்று பலவகைகளில் இருவரையும் சமாதானப்படுத்தி அடக்க நேர்ந்தது. கண்ணன் மட்டும் குறுக்கிடாவிட்டால், பதினெட்டு நாள் யுத்தத்தின் பதினேழாவது நாளில் பெருங்குழப்பம் விளைந்திருக்கும். தர்மபுத்திரருக்குக் கர்ணன் மீது இருந்த அச்சம் எதுவரையெல்லாம் சென்றது என்பதைக் காட்டுவதற்காக இதைச் சொன்னோம்.

அது ஒருபுறமிருக்க, துரியோதனனுடைய அரண்மணையில் தருமபுத்திரனுடைய ஒற்றர்களும் இருந்தார்கள் என்பதைக் காட்டும் இடங்களில் ஒன்று இது. பாண்டவர்கள் அக்ஞாத வாச காலமான பதின்மூன்றாம் ஆண்டு ஒன்று நீங்கலாக, அவருடைய ஒற்றர்கள் துரியோதனன் அரண்மணையில் எப்போதும் இருந்தார்கள். அந்த கட்டத்தைப் பாருங்கள்: விஜயனுடைய வதத்தைக் குறித்துக் கர்ணனால் செய்யப்பட்ட பிரதிஜ்ஞைச் செய்தி மீண்டும் சாரர்களால் (சாரர்கள்=ஒற்றர்கள்) பாண்டவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அரசரே! இதைக்கேட்டு, தர்மபுத்திரர் மிகப்பயந்தவரும் 'யாது செய்யத் தக்கது?' என்று ஆலோசிப்பவரும் கீழ்நோக்கும் முகமுள்ளவருமாக* நெடுநேரம் இருந்தார்; கர்ணனை உடைக்கத் தகாத கவசம் உள்ளவன் என்றும் அற்புதமான பராக்கிரமம் உடையவன் என்றும் எண்ணித் தமக்கு நேர்ந்திருக்கிற கிலேசங்களை நினைத்து ஆறுதலை அடையவில்லை. சிந்தையினால் கவரப்பட்டிருக்கிற மகாத்மாவான அந்த யுதிஷ்டிரருக்கு அனேக துஷ்டமிருகங்களால் வியாபிக்கப்பட்ட த்வைதவனத்தை விடுவதற்கு எண்ணம் உண்டாயிற்று." (வனபர்வம், கோஷயாத்ரா பர்வம், அத். 258, பக். 958) (இதில் கீழ்நோக்கு முகம் என்பது, 'ஆலோசனையாலும் கவலையாலும் தொங்கிப்போய், தரையைப் பார்க்கும் முகம்' என்று பொருள்படும்.)

அதாவது, தருமபுத்திரருக்கு ஏற்பட்ட அச்சத்தால், அவர்கள் வாழ்ந்துகொண்டிருந்த துவைத வனத்தைவிட்டே வேறெங்காகிலும் போய்விடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. தர்மபுத்திரருடைய இந்த மொழிகளோடு கோஷயாத்ரா பர்வம் முடிகிறது. இதன்பிறகு பாண்டவர்கள் த்வைதவனத்தில் உறங்கிக்கொண்டிருக்கின்ற சமயத்தில், தருமயுத்திரருக்கு ஒரு கனவு ஏற்பட்டது. அந்தக் கனவில் பலவிதமான மிருகங்களும், குறிப்பாக மான்களும் தருமபுத்திரரிடத்தில் பேசின. 'துவைத வனத்தில் கொல்லப்பட்டவை போக மிகுந்திருக்கும் மிருகங்கள் நாங்கள். நீங்கள் இங்கேயே வெகுகாலம் வசித்து வேட்டையாடி வந்ததால் எங்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. நாங்கள் அடியோடு நாசமடையாமல் இருக்கவேண்டுமென்றால், நீங்கள் வேறொரு காட்டில் வசிக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்' என்று முறையிட்டன. அந்த வனத்தில் வசித்தவர்கள் பாண்டவர்கள் ஐவர் மட்டுமல்லாமல், அவர்களைச் சூழ்ந்து மக்களில் பலதரப்பட்டவர்களும் இருந்தார்கள்; வேட்டையாடும்போது அவர்களுக்கும் சேர்த்தே வேட்டையாட வேண்டியிருந்தது என்பது நினைவுகொள்ளத் தக்கது. காலையில் விழித்த தர்மர், தனக்கு ஏற்பட்ட கனவைக் குறித்துத் தன் சகோதரர்களிடம் சொன்னார். மிருகங்களின் எண்ணிக்கை குறைவதைக் குறித்துக் கவலைப்பட்டார். இது, இன்றைய environmental balance பற்றியும் ecological balance பற்றியும் மஹாபாரதம் பேசும் இடங்களிலொன்று. மற்ற நான்கு பாண்டவர்களும் தர்மருடைய கருத்தை ஏற்றுக்கொண்டார்கள். "மிருகங்கள் உண்மை சொல்லின. நாம் வனத்தில் வஸிக்கின்ற மிருகங்களின்மீது தயை பாராட்ட வேண்டும். ஒருவருஷம் எட்டு மாத காலமாக இந்த மிருகங்களைக் கொன்று நாம் உபயோகித்து வந்தோம். பல மிருகங்களுள்ளதும் காடுகளுள் உத்தமமானதும் பாலைவனத்தின் தொடக்கத்திலிருப்பதும் த்ருணபிந்து என்னும் ஸரஸுக்கு (ஏரி) அருகிலிருப்பதுமான காம்யகவனம் ரமணீயமாக இருக்கிறது அதில் விளையாடிக்கொண்டு மிகுதியிருக்கிற இந்த வனவாஸத்தை ஸுகமாகப் போக்குவோம்' என்று சொன்னார்கள்."

அந்த ஆலோசனைப்படியே அவர்கள் அனைவரும் காம்யகவனத்துக்கு இடம்பெயர்ந்து வசிக்கலானார்கள். அப்போது வனவாசத்தின் பதினோரு ஆண்டுகள் முடிந்து, பன்னிரண்டாம் ஆண்டு ஆரம்பித்தது. அங்கே வந்த வியாசரோடு உரையாடி, துர்வாசர், முத்கலர் கதைகளைக் கேட்டபடி பாண்டவர்கள் அந்தப் பன்னிரண்டாம் ஆண்டைக் கழித்தார்கள். அஸ்தினாபுரத்திலோ, பாண்டவர்களுக்கு எப்படி மேலும் மேலும் தொல்லை கொடுப்பது என்ற சிந்தனையோடு துரியோதனன் வாழ்ந்துகொண்டிருந்தான். அவனை மகிழ்விப்பதைப்போல் அஸ்தினாபுர அரண்மனைக்கு துர்வாச மஹரிஷி, தன்னுடைய பதினாயிரம் சீடர்களோடு வந்தார். துரியோதனன் அவரை வரவேற்று, உபசரித்து, அவருடைய மனம்கோணாமல் நடந்துகொண்டான். அவனுடைய உள்ளத்தில் ஒரு திட்டம் தயாராகிக்கொண்டிருந்தது. அங்கே சிலகாலம் தங்கிய பின்னர் துர்வாசர் விடைபெறும்போது, 'துரியோதனா! உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்' என்றார். அசந்தால் சபித்துவிடக்கூடிய அளவற்ற கோபக்காரரான துர்வாசரே, 'என்ன வரம் வேண்டும்? கேள் தருகிறேன்' என்று கேட்கக்கூடிய அளவுக்கு துரியோதனன் நடந்துகொண்டிருந்தான். எல்லாம் காரணமாகத்தான்.

"பிராம்மணரே! தேவரீர் சிஷ்யர்களோடுகூட எனக்கு அதிதியாக வந்தது போலவே, எங்கள் குலத்தில் மஹா ராஜனும் மூத்தவனும் மிக்க சிறப்புள்ளவனும் வனத்தில் வஸிப்பவனும் தர்மாத்மாவும் தம்பிமார்களால் சூழப்பட்டவனும் உத்தம குணங்களுள்ளவனும் நன்னடத்தையுள்ளவனுமான (எத்தனை adjectives!) யுதிஷ்டிரனுக்கு அதிதியாகக் கடவீர். என்னிடத்தில் தேவரீருக்கு அனுக்கிரஹம் இருக்குமேயாகில் (விஷயத்துக்கு வந்துவிட்டான்) ராஜபுத்ரியும் மெல்லிய தன்மையுள்ளவளும் சிறந்த கீர்த்தியுள்ளவளும் சிறந்த நிறமுள்ளவளுமான (மீண்டும் கூடைகூடையாக adjectives) திரெளபதியானவள் பிராமணர்களையும் எல்லாப் பர்த்தாக்ளையும் புஜிப்பித்து (உணவூட்டிய பிறகு) தானும் போஜனம்செய்து களைப்பாற்றிக்கொண்டு ஸுகமாக உட்காந்திருக்கும்பொழுது, தேவரீர் அந்த இடத்திற்குச் செல்வீராக' என்ற வரத்தை வேண்டினான். (வனபர்வம் த்ரெளபதீஹரண பர்வம், அத். 213, பக். 976)

'அன்றாடம் திரெளபதி சமைத்தவற்றை அட்சய பாத்திரத்தில் இட்டால் அவை பெருகி வளர்ந்தபடி இருக்கும். ஆனால், பாஞ்சாலி உண்ணும் வரையில்தான் இவ்வாறு பெருகும். அவள் உண்டதும் இது நின்றுவிடும். அதன்பிறகு ஒரு கைப்பிடி அன்னம் வேண்டுமானாலும் மறுநாள்வரை காத்திருக்கத்தான் நேரும்' என்பது சூரியன் கொடுத்த வரம். ஆகவேதான் துரியோதனன், 'திரெளபதி உண்டு முடித்து சுகமாக அமர்ந்திருக்கும்போது நீங்கள் அவர்களிடத்தில் அதிதியாகப் போகவேண்டும்' என்று கேட்டான். 'துரியோதனா, உன்னிடத்தில் கொண்ட அன்பின் காரணமாக நான் அப்படியே செய்கிறேன்' என்று துர்வாசர் வாக்களித்தார். திரெளபதி உண்டபிறகு அந்தக் காட்டில் உணவுக்கு எங்கே போவாள்! எப்படி இவருக்கும் இவருடைய பத்தாயிரம் சீடர்களுக்கும் உணவு படைப்பாள்! பசிபொறுக்காத, பெருங்கோபக்காரரான துர்வாசரின் சாபத்துக்குப் பாண்டவர்கள் ஆளாவார்கள் என்று துரியோதனன் திட்டமிட்டான். தன் வேண்டுகோளை ஏற்று அவர் காம்யகவனத்துக்குச் சென்றதும், கர்ணனும் சகுனியும் துரியோதனனைப் பாராட்டி மிகவும் மகிழ்ந்தார்கள்.

துரியோதனன் கேட்டுக்கொண்டபடியே துர்வாசர் சீடர்களுடன் பாண்டவர்களிடத்தில் சென்றார். அவர் வந்ததை அறிந்ததும் எதிர்கொண்டு அழைத்த தருமபுத்திரர் எல்லா உபசாரங்களையும் செய்துவிட்டு, ‘ஐயனே! நீராடி வந்து எங்கள் உணவினை ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று வேண்டினார். திரெளபதி உண்டாளா இல்லையா என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. துர்வாசர் தன் சீடர்களோடு வந்திருப்பதை அவர் நீராடச் சென்றதும் திரெளபதி அறிந்தாள். சும்மாவா! பத்தாயிரம் பேருக்கு உணவு தயாராகவேண்டும். பதறிப் போனாள். தனது ஒரே புகலிடமான கிருஷ்ணனை மனமுருகி தியானித்தாள். அதைக் கண்ணன் அறிந்தான். "க்ருஷ்ணையினால் அப்பொழுது இவ்வண்ணம் துதிக்கப்பட்டவரும் தேவரும் பக்தர்களிடம் அன்புள்ளவரும் தேவர்களுக்கெல்லாம் தேவரும் உலகங்களுக்குப் பதியும் பிரபுவும் மனத்தினால் சிந்திக்கமுடியாத கதியுள்ளவரும் (கதி=வேகம்) ஈஸ்வரருமான கேசவர் த்ரெளபதியின் ஸங்கடத்தை அறிந்து, படுக்கையில் பக்கத்திலிருந்த ருக்மணியை விட்டுவிட்டு வேகத்துடன் அந்தத் த்ரெளபதியிருந்தவிடத்துக்கு வந்தார்" (மேற்படி பர்வம், அத். 214, பக். 979)

கண்ணன் வந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் அவனை வரவேற்ற பாஞ்சாலியைக் கண்ணன் தூக்கிவாரிப் போடச் செய்தான். 'சரி சரி. எல்லாம் இருக்கட்டும். இப்போது எனக்குப் பசிக்கிறது. சாப்பிட ஏதேனும் கொடு' என்று கேட்டான். பாஞ்சாலியின் நிலைமையைச் சொல்ல வேண்டுமா! கலங்கினாள். 'கண்ணா! துர்வாசருக்கும் அவருடைய சீடர்களுக்கும் எவ்வாறு உணவு படைப்பேன்' என்று கலங்கி உன்னை தியானித்தால், நீயும் வந்து நின்றுகொண்டு உணவு கேட்கிறாயே! நான் உண்டுவிட்டேன். இப்போது ஒருபிடி அன்னமும் இல்லை' என்று கண்ணனுக்குச் சொன்னாள். 'சரி சரி. எனக்குப் பசிக்கிறது. நீயானால் பரிஹாசம் செய்கிறாய் (பரிஹாசம் என்ற சொல்லே மூலத்தில் இருக்கிறது.) அந்த அட்சய பாத்திரத்தை எடுத்துவா, பார்க்கலாம்' என்று சொன்ன கண்ணன், தன் நிர்ப்பந்தத்தால் கொண்டுவரப்பட்ட பாத்திரத்தின் கழுத்துப் பகுதியில் ஒட்டியிருந்த ஒரு பருக்கையையும் கீரையையும் எடுத்து உண்டார். "யதுநந்தனரான அந்தக் கேசவர் இவ்வண்ணம் நிர்ப்பந்தத்ததினால் பாத்ரத்தைக் கொண்டுவரச் செய்து, அதன் கழுத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் கீரையையும் பருக்கையையும் பார்த்து, 'இந்தக் கீரையாலும் பருக்கையாலும் ஈஸ்வரரும் உலகத்தைத் தம் சரீரமாகவுடையவரும் தேவரும் யஜ்ஞத்தில் ஹவிர்ப்பாகங்களைப் புஜிப்பவருமான ஹரியானவர் பிரீதியடையட்டும். திருப்தியுள்ளவருமாகட்டும்' என்று சொன்னார்." (மேற்படி இடமும் பக்கமும்). இவ்வாறு புசித்துவிட்டு., 'நீராடச் சென்ற முனிவரையும் அவருடைய சீடர்களையும் அழைத்துவா' என்று அனுப்பினார். ('பீமனை அனுப்பினால் அவன் கதையை எடுத்துக்கொள்ளாமலா செல்வான்' என்பது வாசகர்களுடைய கற்பனைக்கு உரியது. மூலத்தில் அவ்வாறு சொல்லப்படவில்லை.)

பீமன் அவர்களை உண்ண அழைக்க நதிக்குப் போனான். துர்வாசருக்கும் சரி, பத்தாயிரம் சீடர்களுக்கும் சரி. வயிறு நிறைந்திருந்தது. ஒரே ஒரு பருக்கை அன்னம்கூட உள்ளே போவதற்கு இடமில்லாமல் போயிருந்தது. பின்னே! கிருஷ்ணன் சொன்ன வார்த்தைகள் அப்படிப்பட்டவை அல்லவா! துர்வாசர் சீடர்களைப் பரிதாபமாகப் பார்த்தார். 'சமைத்த உணவு வீணாகப் போயிற்று என்றால் பாண்டவர்களுடைய கோபத்துக்கு ஆளாக நேருமே. அவர்கள் பஞ்சுக்குவியலை நெருப்பு எரிப்பதுபோல் நம்மை எரித்துவிடுவார்கள். நீங்கள் அனைவரும் ஓடிவிடுங்கள்' என்று சொல்லிவிட்டு, தானும் மறைந்துபோனார். இவர்களைத் தேடிக்கொண்டுவந்த பீமன், அனைவரையும் காணாமல் திகைத்து, அங்கிருந்தவர்களிடம் விசாரித்து 'அவர்கள் ஓடிப்போய்விட்டார்கள்' என்பதை அறிந்துகொண்டான். வந்த தீங்கு அடையாளம் தெரியாமல் நீங்கியது. இந்தப் பகுதியின் முடிவில், வியாச பாரதம், "வனத்தில் வஸிக்கின்ற பாண்டவர்களிடம் துராத்மாக்களான திருதராஷ்ர குமாரர்களால் செய்யப்பட்ட இவ்விதத் தீங்குகள் பயனற்றவையாயின" என்கிறது. (மேற்படி அத்தியாயம், பக்.981)

மிகவும் சுவையுள்ள இந்தப் பகுதி பாரதத்தின் மூலத்தை வெளியிட்டுள்ள அத்தனைப் பதிப்புகளிலும் இருக்கிறது. Critical Edition ஆன BORI பதிப்பிலிருந்து மட்டும் 'இடைச்செருகல்' என்று நீக்கப்பட்டுள்ளது. அவர்களும் பல்வேறுபட்ட இடங்களைச் சேர்ந்த 1259 சுவடிகளை ஒப்பிட்டுப் பார்த்து, ஐம்பதாண்டுக் கால ஆராய்ச்சிக்குப் பிறகு சொல்கிறார்கள் என்றால், ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்?

இதன்பிறகு ஒருநாள் பாண்டவர்கள் ஐவரும் வேட்டைக்குச் சென்றிருந்தார்கள். திரெளபதியும், பாண்டவர்களுடைய புரோகிதரான தௌம்யரும் மட்டும் தனித்திருந்தார்கள். அந்தக் காட்டில் வேட்டைக்கு வந்து சேர்ந்தான் சிந்து தேசத்து மன்னனும், கௌரவ நூற்றுவர்களுக்கு ஒரே தங்கையான துஸ்ஸலையின் கணவனுமான ஜெயத்ரதன். பதின்மூன்றாம் நாள் யுத்தத்தில் அபிமன்யு கொல்லப்பட்ட சம்பவத்துக்கான வித்து இங்கே விழுந்தது.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com