தமிழியல் ஆய்வாளர் முனைவர் ப. சரவணன்
'அருட்பா மருட்பா கண்டனத் திரட்டு', 'சாமிநாதம்', 'தாமோதரம்' போன்ற நூல்கள்மூலம் தமிழியல் ஆய்வில் புதிய வெளிச்சம் பாய்ச்சியவர் முனைவர் ப. சரவணன். 'அருட்பா மருட்பா' சமயப் போராட்டம் குறித்து ஆராய்ந்து ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டம் பெற்றவர். 'வள்ளலாரின் சீர்திருத்தங்கள்' என்பது இவரது முனைவர் பட்டத்திற்கான ஆய்வு. ஆவணப்படுத்துதலில் கொண்ட ஈடுபாட்டால் தொடர்ந்து பல்வேறு ஆய்வுப் பணிகளைச் செய்துவருகிறார். தனது இலக்கியப் பணிகளுக்காகப் பல்வேறு விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறார். எழுத்தாளர், கட்டுரையாளர், ஆய்வாளர், சொற்பொழிவாளர் என பன்முகப் படைப்பாளியாகத் திகழும் இவர், சென்னையில், பள்ளி ஒன்றில் தலைமையாசிரியராகப் பணிபுரிகிறார். அவருடனான உரையாடலில் இருந்து...

★★★★★


கே: இலக்கிய ஆய்வில் உங்களுக்கு ஈடுபாடு வந்தது எப்படி?
ப: இலக்கிய ஆய்வில் எனக்கு ஏற்பட்ட ஈடுபாடு தனிப்பட்ட முறையில் குறிப்பிட வேண்டியதன்று. அது குடும்பச்சொத்து. தாய்வழி உறவுகளிலும், தந்தைவழி உறவுகளிலும் அது தொடர்ந்து வருவது. அங்காள பரமேஸ்வரி ஆலயத்தால் புகழ்பெற்ற மேல்மலையனூரில் நான் பிறந்தேன். தந்தை பழனிசாமி, தாயார் பிரேமாவதி. தந்தை தமிழாசிரியர். எனது தாய்வழி மற்றும் தந்தைவழி தாத்தாக்கள் இருவருமே தமிழார்வலர்கள். எனது தந்தைவழித் தாத்தா பஞ்சாட்சரம் தபால்துறையில் பணியாற்றினார். அவர் சிறந்த தெருக்கூத்துக் கலைஞரும்கூட. அந்தக் கலையில் நிபுணர் அவர். பல நாடகங்களை எழுதி அரங்கேற்றி இருக்கிறார். எனது தாய்வழித் தாத்தா 'ஆசுகவி' அண்ணாமலைச்சாமி. சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆகப் பணிபுரிந்தார். இலக்கண, இலக்கியங்களில் தேர்ந்தவர்.

நாஞ்சில் நாடன் விருது பெறுதல்



எனது தந்தையார் தமிழாசிரியராக இருந்ததால் அவர்மூலம் ஏராளமான இலக்கண, இலக்கியங்களைக் கற்றேன். ஆய்வுக் கூர்மையைத் தர்க்கபூர்வமாக வெளிப்படுத்தும் சேனாவரையர் முறைத்திறனை என் தந்தையின் வழியாகவும், எனது ஆசான் சீனி. சட்டையப்பனார் வழியாகவும் பயின்றேன். தடை வினா எழுப்பி விடை காணும் தர்க்கவியலைச் சேனாவரையர் தமது நூலில் பல இடங்களில் விவரித்துச் செல்வார். அந்த முறைமையியல் எனக்கு மிகவும் பிடித்திருந்த ஒன்று. பின்னாட்களில் இந்தத் தர்க்கபூர்வமான திறனாய்வு முறையையே நான் பெரிதும் கைக்கொண்டு வருகிறேன்.

கே: உங்களை ஆய்வுலகில் பலருக்கும் அடையாளம் காட்டிய 'அருட்பா மருட்பா' ஆய்வைத் தேர்ந்தெடுக்க ஏதேனும் சிறப்புக் காரணம் உள்ளதா?
ப: சிறப்பான காரணம் எதுவும் இல்லை. சிறுவயதிலிருந்தே எனக்கு இன்ன துறையில் ஈடுபாடு, இன்னவாறு திட்டமிட்டு உழைத்தேன் என்று வழக்கமாக எல்லாரும் சொல்வதைப் போலச் சொல்ல நான் தயாராக இல்லை. அருட்பா மருட்பா ஆய்வில் நான் ஈடுபட்டது தற்செயலான ஒன்றுதான். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வீ. அரசு அவர்களின் மேற்பார்வையில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டத்திற்காக நான் மேற்கொண்ட ஆய்வு அது. பொதுவாக ஆவணப்படுத்துதலில் நாட்டம் கொண்டவர் வீ. அரசு. எனக்கும் அதே குணந்தான். இருவரது அலைவரிசையும் ஒத்துப்போனதால் இந்தத் தலைப்பு ஆய்வுப் பொருளானது. இதற்கு முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பேச்சுக்களிலும், கட்டுரைகளிலும் குறிப்பிடப்பட்டு வந்த இந்த அருட்பா மருட்பா போர், என்னுடைய ஆய்வின் வழியாக மட்டுமே உண்மையைத் தர்க்கபூர்வமாக விளக்கியது என்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

கே: உ.வே.சா. அவர்களைப் பற்றி, அவரது ஆய்வுமுறைகள், படைப்புகள் பற்றி மிக விரிவாக ஆய்ந்திருக்கிறீர்கள். அதுபற்றிச் சொல்லுங்கள்...
ப: வள்ளலாரைப் பற்றிய ஆய்வுக்குப் பின் பேராசிரியர், எழுத்தாளர் திரு. பெருமாள் முருகன் அவர்களின் வழிகாட்டுதலின்படி எனது கவனம் உ.வே.சா. அவர்கள் பக்கம் குவிந்தது. முதன்முதலாக உ.வே.சா. அவர்கள் பதிப்பித்த/எழுதிய முன்னுரைகளையெல்லாம் தொகுத்து 'சாமிநாதம்' என்னும் பெயரில் 'காலச்சுவடு' பதிப்பகத்தின் வழியே வெளியிட்டேன். ஏறக்குறைய 1200 பக்கங்களைக் கொண்டது இந்த நூல். உ.வே.சா. எத்தனை பதிப்புகளை ஒரு நூலுக்கு வெளியிட்டாரோ அத்தனையையும் ஒருசேரப் படித்துப் பயன்பெறுமான நூல் தொகுப்பு இது. இலக்கிய ஆய்வுகளில் திருத்தம் மேற்கொள்வதற்குக்கூட இதில் இடமிருக்கிறது. உ.வே.சா., தம்முடைய 22ம் வயதில், முதன் முதலில் பதிப்பித்த 'சுப்பிரமணிய தேசிக விலாசச் சிறப்பு' என்னும் சிறு நூலின் முன்னுரையைக்கூட இந்நூலின் வழியாகவே பெரும்பாலான உ.வே.சா. ஆர்வலர்கள் அறிந்தார்கள் என்பது மிகையற்ற உண்மை.

சரவணன், ஆ.இரா. வேங்கடாசலபதி, தாமஸ் ட்ராட்மன்



இதனைத் தொடர்ந்து ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்களின் வழிகாட்டுதலில் உ.வே.சா.வின் கட்டுரைகள், அவரது தன் வரலாற்று நூலான 'என் சரித்திரம்' முதலியன வெளிவந்தன. உ.வே.சா.வின் கட்டுரைகளும் முதன்முதலில் பொருண்மை அடிப்படையில் (subject wise) வகை, தொகை செய்யப்பட்டு ஐந்து தொகுதிகளாக வெளிவந்ததும் என்னுடைய பதிப்பு மட்டுமே என்பதில் எனக்குத் தனிப்பட்ட மகிழ்ச்சி. அதுபோல நூற்றுக்கணக்கான அரிய புகைப்படங்களுடன், கி.வா.ஜ. அவர்களின் 'என் ஆசிரியப் பிரான்' நூலைப் பின்னிணைப்பாகக் கொண்டு வந்திருக்கும் உ.வே.சா.வின் 'என் சரித்திரம்' நூல், வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

உ.வே.சா. அவர்கள் தமது ஆசிரியரைப் பற்றி எழுதிய 'மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம்' என்னும் நூலும், அரிய புகைப்படங்களுடன், விரைவில் புதுப்பொலிவுடன் காலச்சுவடு வழியாக வெளிவர இருக்கிறது.

முனைவர் ப. சரவணன் புத்தகங்கள்

எழுதியவை:
அருட்பா மருட்பா (2001)
கானல்வரி ஒரு கேள்விக்குறி (2004)
வாழையடி வாழையென... (2009)
நவீன நோக்கில் வள்ளலார் (2010)

பதிப்பித்தவை:
ஔவையார் கவிதைக் களஞ்சியம் (2001)
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் கட்டுரைகள் - 6 தொகுதிகள் (2001)
நாலடியார் (2004)
மநுமுறை கண்ட வாசகம் (2005)
வேங்கடம் முதல் குமரிவரை (2009)
அருட்பா மருட்பா கண்டனத் திரட்டு (2010)
கமலாம்பாள் சரித்திரம் (2011)
சாமிநாதம்: உ.வே.சா. முன்னுரைகள் (2014)
உ.வே.சா. கட்டுரைகள் (பொருண்மை அடிப்படையில் - 5 தொகுதிகள் (2016)
தாமோதரம்: சி.வை.தா. பதிப்புரைகள் (2016)
என் சரித்திரம் (2017)

உரை நூல்கள்:
வேமன நீதி வெண்பா (1892) (2008)
சிலப்பதிகாரம் (2008)
கலிங்கத்துப் பரணி (2013)
தமிழ்விடு தூது (2016)

அகராதி:
திருஅருட்பா அகராதி (2017)


கே: உங்கள் ஆய்வு முன்னோடி என்று யாரைச் சொல்வீர்கள், ஏன்?
ப: தமிழுக்குத் தொண்டுபுரிந்த அனைத்து ஆய்வாளர்களுமே என்னுடைய ஆய்வு முன்னோடிகள்தாம். அது வையாபுரிப் பிள்ளையாக இருந்தாலும் சரி, சாதாரணமாக ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதியவராக இருந்தாலும் சரி.

ஆனால், என்னுடைய ஆய்வு முன்னோடி என்று நான் தனித்துக் குறிப்பிட விரும்புவது பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்களையே. என்னுடைய ஆய்வுகள் பலவற்றுக்கும் அவரின் கண்டிப்புடன் கூடிய வழிகாட்டுதலே முக்கியமாக அமைகிறது. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் கட்டுரைகளை நான் பதிப்பிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து இன்று பதிப்பிக்கும் நூல் வரைக்குமான பதிப்பியல் முறைக்கு அவரது வழிகாட்டுதலே எனக்கு சாஸ்வதம்.

மாணவர்களுக்கு உரையாற்றுதல்



கே: பழந்தமிழ் நூல்கள் சிலவற்றிற்கு உரையெழுதிப் பதிப்பித்துள்ளீர்கள் அல்லவா?
ப: ஆம். ஆனால் அடிப்படையில் நான் ஓர் உரையாசிரியன் அல்லன். ஒரு நூலுக்கு எழுதப் பெற்றிருக்கும் பல்வேறு உரைகளைப் படித்து உள்வாங்கி இன்றைய வாசகர்களுக்கு ஏற்ற நடையில் கைமாற்றி அளிக்கும் பணியே என்னுடைய இந்த உரைப்பணி என்று சொல்லலாம். இன்றைய காலகட்டத்தில் இதுவும் ஒரு சிரமமான பணிதான். எனக்குத் தெரிந்து இன்று 'உரையாசிரியர்கள்' என்று தனியாக எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை நானேகூட இறுதிக் கண்ணியாக இருக்கக்கூடும். இம்மாதிரியான உரைகளைத் தொகுத்து அளிப்பதற்கும் பெரிதும் உழைக்க வேண்டியிருக்கிறது. பெரும்பான்மையோர் இதற்குத் தயாராக இல்லை என்றே கருதுகிறேன். மேலும் 'உரையாசிரியர்' என்று சொல்வது இன்றைய தமிழ்ச்சூழலில் ஒரு கேலிப் பொருளாகவே பார்க்கப்படுகிறது. இது மிகுந்த வேதனைக்குரியது. இந்தச் சூழல் மாறுமென நம்புகிறேன்.

இதுவரை நான் உரையெழுதிய நூல்கள் என்று பார்த்தால், 'வேமன நீதி வெண்பா', 'சிலப்பதிகாரம்', 'கலிங்கத்துப் பரணி, 'தமிழ்விடு தூது' ஆகியவை. தற்போது திருவாசகத்திற்கு ஓர் உரை எழுதி முடித்திருக்கிறேன். பல்லாண்டுகாலப் பணி அது. சமீபத்தில்தான் நிறைவடைந்தது. விரைவில் நூலாக வெளிவர இருக்கிறது.

கே: ஆய்வுகளின்போது எதிர்கொண்ட, எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் என்னென்ன?
ப: தரவுகள் முழுமையாகக் கிடைக்கக்கூடிய அடிப்படையில் ஆய்வை மேற்கொண்டுவிட்டால் பெரும்பாலும் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்பது என் கருத்து. "ஆசைபற்றி அறையலுற்றேன்" என்றவாறு ஆய்வை மேற்கொண்டால் சற்று சிரமம்தான்.

சரவணன் குடும்பத்தினர், கவிஞர் ஈரோடு தமிழன்பன்



என்னைப் பொறுத்தவரை நடைமுறைச் சிக்கல் என்று எனக்கு எதுவும் ஏற்படவில்லை. ஓர் ஆய்வை நான் தேந்தெடுக்கும்போதே அது குறித்த நூல்களோ, செய்திகளோ இறையருளால் எப்படியாவது என்னை வந்து அடைந்துவிடும். முன்பின் தெரியாதவர்களின் உதவிகூட அவ்விஷயத்தில் எனக்குக் கிட்டிவிடும். பல வேளைகளில் கண்கட்டு வித்தை போலச் சான்றாதாரங்கள் எனக்குக் கிடைத்ததும் உண்டு. நண்பர்களின் உதவியும் உண்டு.

கே: 'பழைய இலக்கண, இலக்கிய நூல்கள் புதிய உரைகளுடன் செம்பதிப்பாகக் கொண்டுவரப் படவேண்டும்' என்பது குறித்து உங்கள் கருத்தென்ன?
ப: பழந்தமிழ் நூல்கள் இன்றைய தலைமுறைக்கு ஏற்றாற்போல், எளிதாகப் புரியும் வகையில் அதேசமயம் அதன் தனித்தன்மை சிதைவுறா வண்ணம் பதிப்பிக்கப்பட வேண்டியது அவசியம். ஆனால், ஒரு நூலைப் பதிப்பிக்கிறேன் என்று சொல்லி மனம்போன போக்கில் மூலநூலுக்குப் பங்கம் ஏற்படுமாறு செய்வதே, இன்றைக்குச் சில பதிப்பாளர்களின் வேலையாகப் போய்விட்டது. சமயத்தில் மூலநூல் ஆசிரியர் எழுதிய முன்னுரைகூட அடுத்த பதிப்பில் காணாமல் போய்விடுகிறது. அதேபோல உரை எழுதிப் பதிப்பிக்கிறேன் என்று சொல்லி பொருந்தா உரைகளோடு வெளிவரும் நூல்களும் நிறைய உள்ளன.

இத்தகைய குறைபாடுகள் ஏதுமின்றி ஒரு நூல் வெளிவந்தால், நிச்சயம் அது வரவேற்கத் தக்கதே!

ஊரன் அடிகள், சரவணன், இலக்கியவீதி இனியவன்



கே: இன்னமும் பதிப்பிக்கப்படாத பல பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள் இருக்கக்கூடும். அவை எதிர்காலத்தில் உங்கள்மூலம் வெளிவர வாய்ப்புள்ளதா?
ப: ஓலைச்சுவடிகளைத் தங்கு தடையின்றி வாசிக்கும் பயிற்சி எனக்கு அவ்வளவாக இல்லை. ஆனால், 'தாள் சுவடிகள்' எனப்படும் நூற்றாண்டு பழமைமிக்க நூல்களை ஆராய்ந்து பதிப்பிக்கும் எண்ணம் எப்போதும் எனக்கு உண்டு. குறிப்பாகக் காலனித்துவ ஆட்சியில் வெளியான காகிதக் கையெழுத்துப் பிரதிகள் நம்முடைய பண்பாட்டுக்கு வலுச்சேர்க்கும் ஆவணங்கள். அவற்றைப் பதிப்பிக்க எப்போதும் எனக்கு ஆர்வம் உண்டு.

சான்றாக ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், 1812ல் எல்லிஸ் துரை என்று அழைக்கப்படும் ஃபிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் (Francis Whyte Ellis), The College of St. George என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதன்மூலம் பல பழந்தமிழ் இலக்கண-இலக்கிய நூல்கள் அச்சாகின. அவற்றைக் கண்டறிய முயன்று கொண்டிருக்கிறேன். அவற்றில் ஒரு சில நூல்களையாவது பதிப்பிக்க வேண்டும் என்று தீராவிருப்பம் கொண்டிருக்கிறேன்.

முனைவர் ப. சரவணன் பெற்ற விருதுகள்
'ஔவை - மறுவாசிப்பு' என்னும் தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரையை 2002களில் 'தாமரை' இதழில் சரவணன் எழுதியிருந்தார். சிறு பத்திரிகையில் வெளிவந்த அந்த ஆண்டுக்கான சிறந்த கட்டுரையாக இக்கட்டுரை திரு. சின்னக்குத்தூசி அவர்களால் தேர்வு செய்யப்பட்டது. 'கலை' மணிமுடி அவர்கள் இந்தக் கட்டுரைக்கான 'அறந்தை நாராயணன் நினைவு விருதை' வழங்கினார். இதுதான் சரவணன் பெற்ற முதல் விருது. இவரது 'அருட்பா மருட்பா' நூலுக்கு 'திருப்பூர் தமிழ்ச்சங்க விருது' கிடைத்தது. தமிழியல் ஆய்வுக்கான விருதாக 'தமிழ்ப்பரிதி' விருதை அன்றைய சபாநாயகர் திரு.கா. காளிமுத்து அவர்களிடமிருந்து பெற்றார். அதனைத் தொடர்ந்து 'சுந்தர ராமசாமி விருது' (நெய்தல் அமைப்பு), 'தமிழ் நிதி விருது' (சென்னை கம்பன் கழகம்), மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை நினைவுப் பரிசு (சென்னை கம்பன் கழகம்) என பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

கோவை சிறுவாணி வாசகர் மையத்தின் சார்பில் ₹50000/- பரிசுத் தொகையுடன் கூடிய 'நாஞ்சில்நாடன்' விருதையும் பெற்றிருக்கிறார். இவை தவிர அவ்வப்போது அரிமா சங்கங்கள் நடத்தும் நல்லாசிரியருக்கான விருதுகளையும் பெற்றிருக்கிறார்.


கே: செய்யவிருக்கும் ஆய்வுகள் பற்றி…
ப: பொதுவாகவே ஆவணப்படுத்துதலில் மிகவும் நாட்டம் கொண்டவன் நான். அந்த அடிப்படையில் இரண்டு ஆய்வுகள் திட்டமிடப்பட்டு, நிலுவையில் இருக்கின்றன. ஒன்று 'இந்தி எதிர்ப்புப் போராட்டம்' குறித்து தொடக்க காலத்திலிருந்து எழுதப்பட வேண்டிய முழுமையான வரலாறு. மற்றொன்று 'தனிப்பாடல் திரட்டு' முழுத்தொகுப்பு.

இவை இரண்டுமே மிகுந்த உழைப்பைக் கோரும் பணிகள். முழுநேர ஆய்வாளனாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம். என்றாலும்கூட இவையிரண்டும் என் வாழ்நாள் பணிகள் என்பதனால் அவற்றை நோக்கிய பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, திரு. த. உதயசந்திரன் (இ.ஆ.ப.) அவர்களின் தொடர்ச்சியான தூண்டுதல், ஊக்குவித்தல், 'இந்தி எதிர்ப்புப் போராட்டம்' குறித்த எனது ஆய்வைத் தொடங்க வைத்திருக்கிறது. அவருக்கு என் நன்றியைக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

சரவணன் பதிப்பித்த நூல்கள்



கே: உங்கள் ஆய்வுப் பணிகளுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் குறித்து...
ப: என் தந்தை எனக்குப் பல விதங்களிலும் துணையாக இருந்தார். எனது ஆசான் சீனி. சட்டையப்பனார், எனது பேராசிரியர்கள், இலக்கிய வீதி இனியவன், ஆ.இரா. வேங்கடாசலபதி, பெருமாள் முருகன் என்று என்னை ஊக்குவிப்பவர்களின், துணை நிற்பவர்களின் பட்டியல் வெகு நீளமானது. நண்பர்களுடைய ஒத்துழைப்பையும் மிகுதியாகப் பெற்றவன் நான். குறிப்பாக நண்பர் துரை. இலட்சுமிபதியின் நேசக்கரம் என் ஆய்வில் தவிர்க்க முடியாத ஒன்று. அதேபோல என்னுடன் பணிபுரியும் ஆசிரியை த. கவிதா அவர்களின் ஒத்துழைப்பும் அளப்பரியது. எனது மனைவியும் எனது ஆய்வுப் பணிகளுக்கு மிகவும் துணையாக இருக்கிறார்.

கே: உங்கள் குடும்பம் பற்றி...
ப: பெற்றோருடன் சென்னை வில்லிவாக்கத்தில் வசித்து வருகிறேன். தந்தையார் கடந்த வருடம் காலமானார். அது எனக்குப் பேரிழப்பு. என்னுடைய இலக்கியப் பணிகள் எல்லாவற்றிலும் அவரது பங்களிப்பு உண்டு. மனைவி தேவி பள்ளி ஆசிரியையாக இருக்கிறார். மகன் இரவிவர்மன் 9ம் வகுப்பு படிக்கிறார். நன்றாக ஓவியம் வரைவார்.

கே: எதிர்காலத் திட்டங்கள்...
ப: சங்க இலக்கியத்திற்கும், தேவாரத்திற்கும் நல்லதொரு உரை எழுதி வெளியிடும் எண்ணமிருக்கிறது. திருவருட்பாவுக்குச் சிறந்ததோர் கலைக்களஞ்சியம் உருவாக்கும் விருப்பமும் இருக்கிறது. அதோடு, ஆசிரியப்பணி புரிவதால் என் மாணவர்களைப் போட்டித் தேர்வுகள் எழுதவைத்து அவர்களை உயர்ந்த அதிகாரப் பதவிகளில் அமர்த்திப் பார்க்கவும் விரும்புகிறேன். இதற்கெல்லாம் நிச்சயம் இறையருள் துணையிருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தெளிவான சிந்தனை, திடமான பதில்கள். கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. முனைவர் ப. சரவணனின் முயற்சிகளும் விருப்பங்களும் கைகூட வாழ்த்தி விடைபெறுகிறோம்.

சி.வை. தாமோதரம் பிள்ளை பட்ட பாடு
சி.வை.தா. அவர்களின் பதிப்புப் பணிகளை ஆராயுமிடத்து அவை அனைத்தும் 'முதன் முயற்சி' என்பதனால் அவர் பட்ட கஷ்டங்கள் நம் கண்முன்னே விரிகின்றன. கிறித்துவத்திலிருந்து சைவத்திற்கு மாறியது, வேற்றுத் தேசத்தார் என்னும் விரோதம், மடங்களில் தங்கிப் பயிலாமை என இன்னோரன்ன காரணங்கள் மூலப்பிரதிகளைப் பெறுவதில் அவருக்குப் பின்னடைவை உண்டாக்கின. இத்தனையையும் பொறுத்துக்கொண்டே அவர் தமது பதிப்புப் பணியைச் செய்துவந்திருக்கிறார்.

"ஒரு நூலைப் பரிசோதித்து அச்சிடுதற்கு முதலிற் கையெழுத்துப் பிரதிகள் சம்பாதிப்பதே மஹாபிரயாசை, அதிலும் ஒரு நூல் பழையதும் இலேசில் விளங்காததுமானால் எழுதுவாரும் ஓதுவாருமில்லாமல் இருக்கிற இடமுந் தெரியாமல் போய்விடுகிறது" என்று எழுதும் சி.வை.தா., அவ்வாறு கண்டடைந்தபோதும் ஏடு வைத்திருப்பவர்கள் அதை அவருக்குக் கொடுக்க மனமில்லாதவர்களாகவே இருந்தனர் என்பதைக் கலித்தொகைப் பிரதியை அவர் தேடியதில் பதிவு செய்துள்ளார். அது: "...... திருத்தணிகை குருசாமி ஐயர் கிருகத்திற் சென்று சென்னையில் மிகப் பெயர் பெற்றிருந்த வித்துவானாகிய அவரது பிதாமகன் ஸ்ரீ சரவணப் பெருமாளையருடைய புத்தக நாமாவளியைப் பார்வையிட்டதில் அவரது கலித்தொகைச் சுவடி கோயம்புத்தூரில் ஒருவர் கையிற் போயிருப்பதாகத் தெரியவந்தது. அதனைச் சின்னாள் இரவலாக வாங்கி அனுப்பும்படி அவ்வூரிற் பெரிய மனுஷர் சிலருக்குக் கடிதம் விடுத்தேன். அவர்கள் அரவின் கடிகை அரதனத்திற்கும் ஆழிவாய் இப்பியுண் முத்திற்கும் அவை உயிரோடிருக்குங்கால் ஆசை கொள்ளல் வேண்டாவாறு போல், இம்மஹானுடைய சீவதசையில் இவர் கைப்பட்ட புஸ்தகங்களைக் கண்ணாற் பார்க்கும் அவாவினை ஒழிகவெனப் பதிலெழுதினர். சிவனே! இதுவும் கலித்தொகையைப் பிடித்ததோர் கலித் தொகையோ?"

சி.வை.தா. தமது பதிப்புரைகளிலே ஏட்டுப்பிரதிகளின் சொந்தக்காரர்களைப் பற்றி இவ்வாறு வெளிப்படையாக எழுதியமையே அவரது பிற்காலப் புகழைத் தென்னகத்தோர் மறைத்ததற்கான காரணமாயிருக்கலாம் என்பார் மனோன்மணி சண்முகதாஸ்.

- முனைவர் ப. சரவணன் எழுதிய 'தாமோதரம்' நூலில் இருந்து, காலச்சுவடு வெளியீடு


உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்

© TamilOnline.com