நான்காண்டுக்கால திகில் கனவு முடிந்தது. 'மழை விட்டாலும் துவ்வானம் விடவில்லை' என்று சொல்வார்கள். அதுபோல, தேர்தல் முடிந்து வெற்றி யாருக்கென்பது தெளிவான போதிலும், சிறுபிள்ளைத்தனமான பிடிவாதத்துடன் வெள்ளை மாளிகையை விடமாட்டேன் என்கிறார் ட்ரம்ப். அவருடைய செல்வம், வணிக ரீதியான வெற்றி, அரசியல் வெற்றி எல்லாவற்றின் பின்னாலும்அவருடைய வழக்கறிஞர் படையின் சளைக்காத சட்டப் போராட்டம் இருக்கிறது. இன்றைக்கும் அதே படையை ஏவித்தான் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க அவர் முயல்கிறார். இதுவும் முடிவுக்கு வரும்.
ஒரு சுயநல வியாபாரியின் கையிலிருந்து அரசு எப்போது ஓர் நெடுநோக்குள்ள அரசியல்வாதியின் கைக்கு மாறும் என்று மக்கள் காத்திருக்கிறார்கள். 'இம்'மென்றால் பதவி நீக்கம், 'ஏன்' என்றால் அவமதிப்பு என்னும் நிலைமை மாறி, கண்ணியமிக்க நிர்வாகத்துக்கும் கோட்பாடுகளுக்கும் அமெரிக்கா ஏங்கிக்கொண்டிருக்கிறது. நான்காண்டுக் காலத்தில் சீரழிக்கப்பட்டதை ஓரிரவில் செப்பனிட்டுவிட முடியாது என்றாலும் புதிய அதிபர் விரைந்து பணிதொடங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. கோவிட்-19-இன் கோரப்பிடி, உற்பத்தி முடக்கம், நுகர்வோர் நம்பிக்கைச் சரிவு, பொருளாதார நலிவு என்று எல்லா மிரட்டல்களும் அவருக்காகக் காத்திருக்கின்றன. ஆனால் மக்களுக்கு ஜோ பைடன் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. அவருக்குத் துணையாகப் பொறுப்பேற்றிருக்கிறார் சரித்திர மங்கை கமலா ஹாரிஸ். 'In God We Trust' என்பது அமெரிக்க அரசின் கோட்பாடு. வெளிச்ச விடியலாக வந்திருக்கும் இந்த அரசுக்குக் கடவுள் துணை நிற்கட்டும்.
★★★★★
21ம் ஆண்டில் 'தென்றல்' அடியெடுத்து வைத்திருக்கிறது. மேலே கூறிய எல்லாச் சவால்களும் எமக்கும் உண்டு. எமக்கும் கடவுள்தான் துணை. அவர் வாசகராகவும், எழுத்தாளராகவும், விளம்பரதாரராகவும், மாதந்தோறும் உருவாக்க உழைப்பவராகவும் வேறு பல வடிவங்களிலும் 'தென்றல்' தொடங்கிய நாள் முதலாக ஆதரித்து வருகிறார். அவருக்கும் எமது நன்றி நிரம்பிய இதயபூர்வமான நமஸ்காரங்கள்.
★★★★★
தமிழின் ஆணிவேர் இலக்கியங்களை அடையாளம் கண்டு, கடும் உழைப்பில் நமக்கு வழங்கிய தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதையர், சி.வை. தாமோதரம்பிள்ளை உட்படப் பலரை நமக்கு மீண்டும் அடையாளம் காட்டி வருபவர் முனைவர் ப. சரவணன். அவரது நேர்காணல் இவ்விதழின் பெருமை. நீலகண்ட பிரம்மச்சாரியின் சாகச வரலாறும் இதில் தொடர்கிறது. கிறிஸ்துமஸ் சிறப்புச் சிறுகதையும் பிற அம்சங்களும் உண்டு. வாருங்கள், தென்றலோடு நடைபோடலாம்.
வாசகர்களுக்கு மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!
தென்றல் டிசம்பர் 2020 |