சாவித்திரி வைத்தி
சாதனை மகளிருக்கான 'CNN-IBN விருது', தமிழக அரசின் 'கலைஞர் விருது', அமெரிக்கன் பயோகிராஃபிகல் கழகத்தின் (ABI) 'இரண்டாயிரத்தின் சிறந்த பெண்மணி விருது' உட்படப் பல விருதுகளைப் பெற்றிருக்கும் சாவித்திரி வைத்தி (89) காலமானார். தான் வாழும் சமூகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் இவருக்குப் பள்ளிப் பருவத்திலேயே வந்துவிட்டது. கடும் வெயிலில், காலில் செருப்பு இல்லாமல், சக மாணவிகள் பள்ளிக்குச் செல்வதைப் பார்த்துத் துயருற்றார். 'Barefoot Walkers' என்ற சமூக சேவை அமைப்பில் இணைந்து கல்வி, மருத்துவம், சுகாதாரம் எனப் பல சமூக நற்பணிகளை மேற்கொண்டார். 'ஜெமினி' அதிபர் எஸ்.எஸ். வாசனின் மனைவியான பட்டம்மாளின் சகோதரர் வைத்தியுடன் சாவித்திரிக்குத் திருமணம் நிகழ்ந்தது.

கஷ்டப்படுவோருக்குத் தம்மால் ஆனதைச் செய்யவேண்டும் என்ற கனவு சாவித்திரிக்கு சிறுவயது முதலே இருந்தது. தன் கணவரிடம் இதனைத் தெரிவித்தார். இருவரும் 'குழந்தைகள் பெற்றுக்கொள்வதில்லை' என்ற உறுதிமொழியைக் கைக்கொண்டனர். அதுமுதல் சமூக சேவையே அவர்களுக்குக் குழந்தையானது. மனைவியின் நற்பணிகள் அனைத்திற்கும் ஆதரவு தந்து ஊக்குவித்தார் கணவர் வைத்தி. 1970ல், ஏழைப் பெண்களுக்கு உதவும் நோக்கில் 'மன்டே சாரிடி கிளப்' என்பது ஆரம்பிக்கப்பட்டது. முழுக்க முழுக்கப் பெண்களைக் கொண்டு நடத்தப்படும் இந்த அமைப்பின் மற்றொரு கிளையாக, குரோம்பேட்டையில், 1978ல் ஒரு முதியோர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டது. ஏவி.எம். ராஜேஸ்வரி அம்மையார் அளித்த நிதிகொண்டு, சென்னை பாலவாக்கத்தில் அந்த இல்லம் விரிவுபடுத்தப்பட்டது. அதுதான் தமிழ்நாட்டின் முதல் முதியோர் இல்லமான 'விச்ராந்தி.' இன்றைக்கு 150க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர் இங்கு தங்கியுள்ளனர். அவர்களுக்கு உணவு, உடை, வசிப்பிடம், மருத்துவம் யாவும் சிறந்த முறையில் இங்கு அளிக்கப்படுகின்றன.

ஏழை மாணவர்களுக்கும் 'வித்யா தான்' திட்டம் மூலம் சீருடை, புத்தகம், கல்விக் கட்டணம் போன்றவை அளிக்கப்பட்டு வருகின்றன. 'ஊன்றுகோல் திட்டம்' மூலம் மாதாமாதம் குறிப்பிட்ட சில ஏழைக் குடும்பங்களுக்கு, அவர்கள் குடும்பம் நடத்தத் தேவையான மளிகைப் பொருட்கள் இலவசமாக அளிக்கப்படுகின்றன. ஆதரவற்ற ஏழை மக்களின் உயர்வுக்காக இப்படிப் பல திட்டங்களை முன்னெடுத்த சாவித்திரி வைத்தி, சில ஆண்டுகளாகவே உடல் நலிவுற்றிருந்தார். திடீரென ஏற்பட்ட இருதய அடைப்பால் அவர் காலமானார். (சாவித்திரி வைத்தி தென்றலுக்கு வழங்கிய நேர்காணலை வாசிக்க)

சமூகசேவைப் பிதாமகிக்குத் தென்றலின் அஞ்சலிகள்!

© TamilOnline.com