எழுத்தாளர், இதழாளர், கட்டுரையாளர் எனச் சிறப்பாக இயங்கிய அருணாசலம் மாரிசாமி என்னும் அ.மா. சாமி (85) காலமானார். 'ராணி' வார இதழின் ஆசிரியராக 35 ஆண்டுகளுக்கும் மேல் திறம்படப் பணியாற்றிய இவர், விருதுநகரை அடுத்த கோப்பைநாயக்கன்பட்டியில் ஜூலை 5, 1935 அன்று பிறந்தார். உயர்நிலைக் கல்வியை முடித்ததும் திருச்சியில், தினத்தந்தி இதழின் செய்தியாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய சாமி, சி.பா. ஆதித்தனாரின் ஊக்குவிப்பால் சென்னை தினத்தந்தியின் நிர்வாக ஆசிரியர் ஆனார். பின்னர் 'ராணி' வார இதழின் ஆசிரியராக உயர்ந்தார்.
ஆதித்தனாரின் வழி நின்று எளிய தமிழில், சாதாரணக் கல்வி அறிவு உடையவரும் வாசிக்கும் வகையில் 'ராணி' இதழை வளர்த்தெடுத்தார். தனி ஒரு நபராக இருந்து இதழின் சுவையான உள்ளடக்கங்கள் அனைத்தையும் செம்மைப்படுத்தி, அதிகம் விற்பனையாகும் இதழாக்கினார். 'ராணிமுத்து' மாத நாவலிலும் இவரது பங்களிப்பு சிறப்பானது. புகழ்பெற்ற, மிக நீண்ட நாவல்களைச் சுருக்கி, சுருக்கியதே தெரியாத வகையில், செம்மையாக, மலிவுப் பதிப்பாகக் கொண்டுவந்தார். பல புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். குரும்பூர் குப்புசாமி, அமுதா கணேசன் போன்ற புனைபெயர்களில் எழுதியவர் சாமிதான். 'ரமணி சந்திரனை' அறிமுகப்படுத்தியவரும் இவர்தான். குழந்தைகளுக்குக் கதைகளை அளிக்க விரும்பிய சாமியின் கனவு, 'ராணி காமிக்ஸ்' இதழாக வளர்ந்தது.
சிறுவர்களுக்கான கதைகள், இதழியல் வரலாற்று நூல்கள் எனப் பலவும் எழுதியிருக்கிறார் சாமி. அவற்றில், 'தமிழ் இதழ்கள் தோற்றம்-வளர்ச்சி', 'பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்கள்', 'திராவிட இயக்க இதழ்கள்', 'இந்து சமய இதழ்கள்', 'தமிழ் இஸ்லாமிய இதழ்கள்', 'தமிழ் கிறிஸ்தவ இதழ்கள்' போன்றவை முக்கியமானவை. ஆதித்தனாரின் வாழ்க்கை வரலாற்றை, 'இதழாளர் ஆதித்தனார்' என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். பயணத்தில் விருப்பம் கொண்டவர். பல நாடுகளுக்குப் பயணித்த அனுபவங்களை நூலாக எழுதியிருக்கிறார். 'குட்டித்தீவை எட்டிப் பார்த்தேன்' என்ற இவரது பயண நூலுக்கு, 1984ம் ஆண்டுக்கான தமிழக அரசின் விருது கிடைத்தது.
தமிழக அரசின் 'பெரியார் விருது', 'பாரதிதாசன் விருது', சென்னை பல்கலை வழங்கிய 'சிறந்த இதழாளர் விருது', 'அருந்தமிழ் வல்லவர்', 'இதழ்த்தமிழ் வல்லவர்', 'மதுரத்தமிழ் மாமணி' உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். இதழியல் பணிகளுக்காக இருமுறை பல்கலைக்கழகங்கள் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியுள்ளன. தமிழின் மூத்த இதழியல் மேதைக்குத் தென்றலின் அஞ்சலிகள்! |