மிகவும் கற்றவரும், தானே ஒரு குருவானவருமான ஒருவரைப்பற்றிய கதை உபநிஷத்துக்களில் இருக்கிறது. அவரது பெயர் உத்தாலகர். அவருக்கு ஸ்வேதகேது என்றொரு மகன் இருந்தான். தனது தந்தையையே குருவாகக் கொண்டு கற்பதற்கு ஸ்வேதகேது பெருமுயற்சி செய்தான். ஆனால் உத்தாலகர் அதற்கு ஒப்பவில்லை. காரணம், மகன் தந்தையிடம் மிகச் சுதந்திரமாக நடந்துகொள்வான், அதனால் தந்தை, மகன் இருவருக்குமே குரு-சிஷ்யருக்கான விதிப்படி நடத்துவதும் நடந்துகொள்வதும் கடினம். மகன் எப்போதும் இவர் என் தந்தை என்றுதான் நினைப்பான், தந்தை-மகன் என்கிற எண்ணம் நீடித்திருக்கும். இது எதனாலென்றால் இருவருக்கும் இடையே பாசம் இருப்பதால்.
விரும்பிப் பெற்ற மகனை 'காம-புத்ரன்' என்று ஏன் அழைக்கிறார்கள் என்பதன் நியாயம் இங்கே புரியும். எங்கே பற்று இருக்கிறதோ அங்கே பாசம் இருக்கும், எங்கே பாசமும் சொந்தமும் இருக்கின்றனவோ அங்கே விதிகள் தளர்த்தப்படுகிற காரணத்தால் கல்வியை முழுமையாகப் போதிக்க முடியாது. உறவும் பாசமும் உள்ள காரணத்தால் முழுமையாக, சரியாகக் கல்வி நிறைவடையாது என்று புரிந்துகொண்ட உத்தாலகர், ஸ்வேதகேதுவை வேறொரு குருவிடம் அனுப்பினார்.
ஸ்வேதகேது, இளவயது மற்றும் அனுபவமின்மை காரணமாக, தனது தந்தையாரைத் தவறாகப் புரிந்துகொண்டான். ஒருவேளை அவருக்குப் போதிய கல்வியறிவும் தகுதியும் இல்லாததால்தான் தன்னை வேறொரு குருவிடம் அனுப்புகிறாரோ என்பதாக அவன் விளங்கிக்கொண்டான்.
சில ஆண்டுகள் வேறொரு குருகுலத்தில் தங்கிக் கற்ற ஸ்வேதகேது, மிகுந்த வித்யா கர்வத்துடன் (கல்வித் திமிர்) தந்தையின் வீட்டுக்குத் திரும்பினான். இதைக் கவனித்த தந்தையார், "நீ என்ன கற்றாய்? எந்தெந்த சாஸ்திரங்களை நீ கற்றாய்? நீ பிரம்மத்தைப்பற்றிக் கற்றாயா? எதனைக் கற்றால் வேறெதையும் கற்க வேண்டாமோ, எல்லாவற்றையும் கற்றதாகுமோ, அதனைக் கற்றாயா?" என்று கேட்டார். இப்படியெல்லாம் தந்தையார் கேட்கும்போதே, மகன் மிக வினோதமாக நடந்துகொண்டான். இன்னமும் அவனிடம் 'நான் மிகவும் உயர்ந்தவன்' என்கிற செருக்கு காணப்பட்டது; தந்தையைவிடத் தான் மெத்தக் கற்றவன், இந்தச் சில ஆண்டுகளில் தான் படித்ததைச் சொன்னால் அவருக்குப் புரியாது என்பதுபோல நடந்துகொண்டான். மகனின் போலிப்பெருமை மற்றும் பக்குவமின்மையைத் தந்தை புரிந்துகொண்டார். அவரது கேள்விகளுக்கு விடையாக 'கடவுள் இப்படி இருப்பார், அப்படி இருப்பார்' என்றெல்லாம் ஒரேயடியாக அலட்டிக் கொண்டான் மகன்.
பிரம்மத்தைச் சொற்களால் விளக்கினால் புரிந்துகொள்ளும் நிலையில் மகன் இல்லை என்பதை உத்தாலகர் புரிந்துகொண்டார். அதை ஓர் உதாரணத்தால் விளக்கக் கருதினார். ஒரு பானை நிரம்ப நீரைக் கொண்டுவந்தார். தன் கையில் சிறிது சர்க்கரையும் எடுத்து வந்து அதை மகனுக்குக் காட்டினார். பின்னர் அதைப் பானைநீரில் போட்டார். அது முழுவதுமாகக் கரையும்வரை கலக்கினார். ஸ்வேதகேதுவைப் பார்த்து, "நான் சர்க்கரை கொண்டு வந்தேன், அதை நீயும் பார்த்தாய். அதை நான் பானைக்குள் இட்டேன். இந்தப் பானையில் இப்போது சர்க்கரை எங்கே உள்ளதென்று சொல்லமுடியுமா?" என்று கேட்டார்.
அவன் பானைக்குள் பார்த்தான், அதில் எங்கேயும் சர்க்கரையைக் காண முடியவில்லை. பானையின் அடிப்பகுதியிலிருந்து சிறிது எடுத்துத் தன் மகனின் நாவில் இட்டு, "எப்படி இருக்கிறது? நீ பானையின் எந்தப் பகுதியிலிருந்து வேண்டுமானாலும் எடுத்துச் சுவைக்கலாம்" என்றார். பானையிலிருக்கும் கரைசலின் ஒவ்வொரு துளியிலும் சர்க்கரை இருக்கிறது, அது பானையெங்கும் பரவியுள்ளது என்பதை மகன் இப்போது ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.
உத்தாலகர், "எப்படிச் சர்க்கரை எங்குமுள்ளதென்று பார்த்தாயோ, அப்படியே பிரம்மம் ஓர் உருவத்தை எடுத்துக்கொண்டு சகுணமாக (நாம, ரூபம் கொண்டதாக) உலகுக்கு வந்து நீ காணும் எல்லா ஜீவன்களிலும், பொருட்களிலும் உள்ளுறைகிறது. உன் கண்களால் அதை நீ தனித்துப் பார்க்கமுடியாது, கைகளால் தனித்துப் பற்றிக்கொள்ள முடியாது. இவ்வுலகத்தின் நிலையிலிருந்து அனுபவித்துத்தான் அவரை அடையாளம் காணமுடியும். எங்கும் நிறைந்த, எல்லாவற்றிலும் வியாபித்துள்ள பிரம்மத்தை உனது ஸ்தூல உடலால் இதற்குமேல் வேறெப்படியும் அறிவது சாத்தியமல்ல" என்றார்.
இப்படி ஆழ்ந்து அனுபவித்த பின்னரே அத்வைதம், தெய்வத்தின் இயல்பு, அதன் எங்கும் நிறைந்த தன்மை ஆகியவை குறித்து உன்னால் பேசமுடியும். அந்த அனுபவத்தைப் பெற்றால் மட்டுமே உனக்குக் கடவுளின் இயல்பு, அவரது சர்வ வியாபகம் போன்றவற்றைப் பேசும் உரிமையும், தகுதியும் இருக்கும். அப்படியன்றி, புத்தகத்தைப் படித்துவிட்டு, கிளிப்பிள்ளை போலக் கடவுளைப் பற்றியும் அவரது சர்வவியாபகத் தன்மை பற்றியும் மிகவும் தெரிந்தாற்போலப் பேசுவது வெறும் புளுகுதான். தெய்வீக அத்வைத அனுபவத்துக்குப் பின்னர்தான் அத்வைதம் அல்லது இருமையின்மை குறித்துப் பேசமுடியும்.
நன்றி: சனாதன சாரதி, ஜனவரி 2020.
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா |