பெருங்குடல் புண்ணும் பெரிய மருத்துவரும்!
Ulcerative Colitis

26 வயது குணசேகரனுக்கு கடந்த சில வாரங்களாக வயிற்றுவலி அதிகமாக காணப்படுகிறது. அவ்வப் போது சாப்பிட பிடிக்கவில்லை. ஆனால் சாப்பிட மறுத்தால் வலி அதிகமாகிறது. வேலப்பளுவில் ஒத்தி வைக்கப்பட்ட மருத்துவ சந்திப்பு ஒரு வழியாக இன்று நிகழ்கிறது.

குணசேகரன்: கடந்த சில வாரங்களாக வயிற்றுவலி வருகிறது.

மருத்துவர்: வலி எப்போது வருகிறது?

குணா: சாப்பிடுவதற்கு முன் வலிக்கிறது. சாப்பிட தாமதமானால் வலி தாங்க முடிவதில்லை. சில வேளைகளில் சாப்பிட்டதும் வலி சரியாகி விடுகிறது. ஒரு சில நாட்களில் வயிறு உப்புசம் ஏற்படுகிறது.

மரு: வாந்தி அல்லது பேதி உண்டா?

குணா: இல்லை. குமட்டல் மட்டுமே இருக்கிறது.

மரு: ஏதேனும் வலி நிவாரண மருந்துகள் எடுத்துக் கொண்டீர்களா?

குணா: மருந்துக் கடையில் கொடுக்கப்பட்ட 'antacid' சாப்பிட்டேன். நிவாரணம் அவ்வளவாக இல்லை.

மரு: மலம் எப்போதேனும் கருப்பாகவோ அல்லது இரத்தம் கலந்து ஏற்பட்டதுண்டா?

குணா: இல்லை

மருத்துவர் உடலை பரிசோதனை செய்தபின்...

மரு: இது வயிற்றில் அமிலம் அதிகமாக சுரப்பதால் ஏற்படுகிற சீழ்ப்புண்ணின் பிரச்சனை (ulcer problem) இதற்கு சில தீர்வுகள் உள்ளன.

1. குறிப்பிட்ட நேரத்தில் (வேளா வேளைக்கு) சாப்பிட வேண்டும். சாப்பாட்டை தாமதம் செய்யக்கூடாது.

2. எண்ணெய் பண்டங்கள், புதினா, சாக்லேட், காபி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

3. சாப்பிட்ட பின் 3 அல்லது 4 மணி நேரங்கள் கழித்தே படுக்க செல்ல வேண்டும்.

4. Advil, Aspirin, Motrin போன்ற மருந்துகள் இந்த நோயை அதிகப்படுத்தலாம்.

5. இவற்றையும் மீறி இந்த வலி ஏற்படு மேயானால் 'Proton Pump Inhibitor' என்று சொல்லப்படும் மருந்து 6 முதல் 8 வாரங்கள் வரை தொடர்ந்து உட் கொள்வதின் மூலம் இந்த நோயை குணப்படுத்தலாம்.

8 வாரங்களுக்குப் பிறகு...

குணா: இன்னமும் வலி வந்து வந்து போகிறது. சில வேளைகளில் மருந்து வேலை செய்கிறது. சில சமயங்களில் மருந்து எடுத்த போதும் வலி வருகிறது. அவ்வப்போது பேதியும் ஏற்படுகிறது.

மரு: பேதியில் இரத்தம் கலந்து காணப் பட்டதா?

குணா: இரண்டு முறை இலேசாக இரத்தம் இருந்தது.

மரு: 8 வாரங்கள் PPI எடுத்த பின்னரும் வலியும், பேதியும் இருந்தால் சிறப்பு நிபுணரைக் காண வேண்டும். Endoscopy மற்றும் Colonoscopy போன்ற பரிசோதனை கள் தேவைப்படும். இவற்றை Gastro enterologist - இரைப்பையின் இயக்கம் மற்றும் நோய்கள் பற்றிய பிரிவு - நிபுணர் செய்வர். அவரிடம் உங்களை அறிமுகப் படுத்துகிறேன்.

2 வாரங்களுக்குப் பிறகு...

குணா: Endoscopy normal என்று சொன்னார்கள். ஆனால் Colonoscopy-ல் ஏதோ கோளாறு என்று சொன்னார்கள். அதை கொஞ்சம் விவரிக்க முடியுமா?

மரு: உங்கள் பரிசோதனைகளின் விவரங் களைப் பார்த்தேன். சிறப்பு நிணரிடமும் தொடர்பு கொண்டேன். அதன் படி உங்களுக்கு 'ulcerative colitis' என்ற நோய் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் பெருங்குடலைத் தாக்கக்கூடியது. வயிற்றில் புண்களைப் (ulcer) போலவே பெருங்குடலில் புண்கள் ஏற்படும். இது அமிலத்தால் ஏற்படுவதில்லை. மரபணு மற்றும் வேறு பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுகிறது. இது அவ்வப்போது தீவிரமாகக்கூடியது. பல வேளைகளில் தீவிரம் குறைந்தும் இருக்கவல்லது. இந்த நோயின் தீவிரம் கூடும் போது 'Prednisone' என்ற மருந்து தேவைப்படும். குடலில் ஏற்பட்ட எரிச்சலை (inflammation) குறைக்கவே இந்த மருந்து உதவுகிறது. Asacol என்று சொல்லப்படும் மருந்து மற்ற வேளைகளில் நோயைக் கட்டுக்குள் வைக்க பயன்படுத்த படுகிறது.

குணா: இந்த மருந்துகளை காலம் முழுவதும் எடுத்துக் கொள்ள வேண்டுமா?

மரு: ஆமாம். கூடுமானவரை 'steroid' அளவை குறைப்பது நல்லது. அதனால் எப்போதும் Asacol எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.

குணா: நோய் எப்போது தீவிரமாகும்?

மரு: அளவுக்கு அதிகமான மன உளைச்சல், அல்லது பெருங்குடலில் நுண்ணுயிர் கிருமி தாக்கியதாலோ இந்த நோய் தீவிரமாகலாம். ஆனால் பல வேளைகளில் நோய் தீவிரமாவது ஏன் என்று விளங்குவதில்லை.

குணா: இதனால் மருத்துவமனையில் சேர வேண்டி வருமா?

மரு: நோயின் தீவிரம் அதிகமானல், மருத்துவமனையில் சேர வேண்டி வரும். இரத்தக் குழாய் மூலம் திரவம், மருந்துகள், மற்றும் உணவும் செலுத்த நேரலாம். புண்கள் ஆறும் வரை மேலும் மேலும் சேதம் அடையாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கைகள் தேவைப்படலாம். நோய் முற்றினால், பெருங்குடலில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். ஆண்டு தோறும் Colonoscopy செய்து கொள்ள வேண்டும்.

இந்த நோய் உடையவர்களுக்கு புற்று நோய் உருவாகும் அபாயம் சிறிது அதிகம். மேலும் மருத்துவரை தவறாமல் காண வேண்டும். அலட்சியம் செய்யாமல் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இந்த நோய் இளைய வயதினரை அதிகமாக தாக்கும். குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

குணா: இந்த நோய் உடையவர்கள் வேலை செய்ய முடியுமா?

மரு: தாராளமாக செய்யலாம். ஒரு சிலருக்கு மூட்டு வலி, தோல் மற்றும் ஈரல் பாதிக்கப்படலாம். இவர்கள் அதற்கு தேவையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

குணா: இந்த நோய் யாருக்கு ஏற்படும்?

மரு: யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். குறிப்பாக வெள்ளையர்களை தாக்கி வரும் இந்த நோய் இப்போதெல்லாம் ஒரு சில இந்தியர்களையும் தாக்குகிறது. இது 20 முதல் 30 வரையில் உள்ளவர்களை தாக்கும். வயதானவர்களையும், சிறுவர்களையும் குறைவாக தாக்கும். எல்லா வயிற்று வலியும் Antacaid எடுத்துக் கொண்டால் சரியாகிவிடும் என்று நினைக்காமல், வலி அதிகமானாலோ, பேதி ஏற்பட்டாலோ, பேதியில் இரத்தம் கலந்திருந்தாலோ, உடல் எடை குறைந்தாலோ மருத்துவரை நாடுவது நல்லது.

குணா: 'Crohn's disease' என்று சொல்கிறார்களே! அதுவும் இதுவும் ஒன்றா?

மரு: அதுவும் இந்த நோயையைப் போலவே குடலில் புண் ஏற்படுத்த வல்லது. அது குறிப்பாக சிறு குடலை தாக்கும். சில குடும்பங்களில் இரண்டு நோயும் காணப்படும். ஆனால் இரண்டு நோயும் ஒரு சில காரணங்களால் வேறுபட்டு இருக்கின்றன.

குணா: நன்றி! சிறப்பு நிபுணரையும் உங்களையும் இனி தவறாமல் காண வருவேன்!

மரு: சீக்கிரம் குணமடைய வாழ்த்துக்கள்!

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com