ஏடெடுத்த உழவர்கள்
அந்திசாயும் நேரம்; இந்தப் பட்டணவாசத்தில் பறவைகள் ஓசையெழக் கூடு நோக்கிப் பறக்கும் பலகுரல் இசையும் மாடு கன்றுகள் புழுதிபறக்க வீடு திரும்பும் குளம்படி ஓசையுமா கேட்கும்? புழுதிக்கு மட்டும் குறைவில்லை. துணைக்குப் பேருந்து, சிற்றுந்துகள், இரு, மூன்று சக்கர வாகனங்கள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு வாரிவீசும் பெட்ரோல், டீசல் புகையும் நாற்றமும் சூழ்ந்திருக்க, நாள்பூரா அலுவலகம், அங்காடிகள் மற்றும் பல இடங்களில் உழைத்து அலுத்து, வீடுபோய் விழமாட்டோமா என்று சக்தியை எல்லாம் வடியவிட்டுச் சோர்ந்த முகங்கள். இந்த ஜனசமுத்திரத்தில் பாவாயி, சாம்பன் ஜோடியும் ஒரு துளியாகக் கலந்து வீடுநோக்கி விரைந்து கொண்டிருந்தனர்.

"மாமா, புள்ளை நோட்டோ ஏதோ வோணுமின்னு எழுதிக் குடுத்திச்சே, அத வாங்கிட்டுப் போகணுமே. நம்ம பாஸ்கர் கடையிலே கெடைக்குதா பாருங்க?" என்று சாம்பனுக்கு நினைவுறுத்தினாள் பாவாயி. அடுத்த ஐந்தாவது நிமிஷம் மகள் கொடுத்த குறிப்பைக் காட்டி அந்த ரெக்கார்டு நோட்டையும், கையோடு எதிர்க்கடையில் இரண்டு முட்டையும் வாங்கிக்கொண்டு வந்த சாம்பன் "பாவம் புள்ள, ராக்கண் முழிச்சுப் படிக்குது. போனதும் அவிச்சுக் குடு" என்றான்.

வீடுநோக்கி இருவரும் நடையை எட்டிப் போட்டனர். இதுதான் அவர்களின் அன்றாட அட்டவணை. இது அவர்களின் பதினான்காண்டு காலத் தவம். மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட சுகமான சுமை.

தமிழகத்தின் ஆயிரக்கணக்கான கிராமங்களில் ஒன்றில் ஓஹோ என்று இல்லாவிட்டாலும் பசித்த வேளைக்குப் பானையைத் துழாவாமல், குளித்து வந்து கொடியைப் பார்த்து வெறிக்காமல் வாழுமளவு படியளக்கும் உள்ளங்கையளவு நிலத்தில் காய்கறித் தோட்டம், வேலியோரம் நாலு தென்னை என்று செட்டுக்கட்டாகக் குடும்பம் நடத்தியவர்கள்தான் இவர்கள். ஒரே மகள் ரோஜாவை இயன்ற அளவு செல்லமாகவே வளர்த்தனர். அவர்கள் வாழ்வில் அரசின் கண் பட்டது. 'பட்டணத்துக்குப் போகப் பெரிய சாலை போடறோம். உங்க நிலத்தைக் குடுங்க என்று இவர்களுடன் இன்னும் பல குறுவிவசாயிகளின் நிலங்களைக் கையகப் படுத்திக்கொண்டு, சில ஆயிரங்களை வீசிவிட்டுச் சென்றனர் அரசு அதிகாரிகள். சோறிட்ட பூமியுடன் வாழ்வாதாரத்தையும் தொலைத்துவிட்டு, பஞ்சம் பிழைக்கப் பட்டணம் புறப்பட்ட இவர்கள் ஜாதகத்தில் கெட்டதிலும் நல்லது ஏதோ ஒட்டிக்கொண்டிருந்தது போலும்!

கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல நின்றிருந்த இவர்கள் யதேச்சையாக அவ்வூருக்கு வந்த ஜட்ஜையா கண்ணில் பட்டு, அவரும் இவர்களைத் தன் வீட்டு வேலைக்கு அமர்த்திக்கொண்டார். பெரும்புயல் வீசிய அவர்களது வாழ்வில் சற்று நிம்மதி. மூன்று வயதுக் குழந்தை ரோஜாவுடன் ஜட்ஜையா வீட்டில் வேலை, அரைமணி நடை தூரத்தில் வசிப்பிடம் என்று நிலைத்துவிட்டனர்.

'நம்ம காலத்தில்தான் படிப்பு எழுத்துப் பக்கமே போகாமல், தினத்தந்தியை எழுத்துக்கூட்டிப் படிக்கிற அளவோடு நின்னுட்டோம். நம்ம மகளுக்கு நல்ல படிப்பைக் குடுக்கணும். அவளுக்கு நாம வைக்கிற சொத்து அது ஒண்ணுதான்' என்று தீர்மானித்து இருவரும் அவளது கல்வியை ஒரு யாகமாகவே எண்ணி, அந்த யாகத்தில் தங்கள் உடலுழைப்பு, வருமானம் எல்லாவற்றையும் ஆகுதியாகச் சேர்த்துக் கொண்டிருக்கின்றனர். 'விரலுக்கேற்ற வீக்கம்!' வாய்க்கும் கைக்குமாக இழுத்துப்பிடிக்கும் வருமானத்திலிருந்த அவர்களுக்கு அருகிலிருந்த அரசுப்பள்ளிதான் புகலாக இருந்தது.

அப்பள்ளியின் தலைமை ஆசிரியரும், மற்ற ஆசிரியர்களும் எந்த ஒரு தனியார் பள்ளிக்கும் குறைவில்லாமல் கற்பித்து மாணவர்களுக்கு உதவியாக இருந்து நன்கு வழி நடத்துபவர்களாக அமைந்தது ரோஜாவின் மிகப்பெரிய கொடுப்பினை என்றே கூறவேண்டும். அவளும் கடின உழைப்பு, படிப்பில் மிகுந்த அர்ப்பணிப்புடன் ஆரம்பமுதலே பள்ளியின் முன்னிலை மாணவியாகத் திகழ்ந்தாள். வீட்டின் நிலைமையறிந்து மிகப் பொறுப்புடன் தனக்காகப் பெற்றவர்கள் செய்யும் தியாகத்தை உணர்ந்து அவர்களுக்கு உதவியாகவும் இருக்கிறாள்.

ஆயிற்று. பன்னிரண்டு ஆண்டுகள் உருண்டோடி, இதோ, ரோஜா ப்ளஸ் டூ தேர்வை எழுதி முடித்துவிட்டாள். தேர்வுகள் முடிந்த பிறகும் ரோஜாவின் ஆசிரியையின் கணவரான, பேராசிரியர் ஒருவர், ஆர்வமுள்ள மாணவ மாணவியருக்குச் சில போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி அளித்தும் மாதிரித் தேர்வுகள் வைத்தும் தயார் செய்தார். தேர்வுகள் அனைத்தையும் ஒன்று விடாமல் எழுதிக்கொண்டிருந்தாள் ரோஜா. "நாங்க ஆத்தைக் கண்டோமா, அழகரை சேவிச்சோமா? அவ ஆசைப்பட்ட படிப்பு படிக்கட்டும். கைகாலிலே தெம்பு இருக்குமட்டும் நாங்க ஒத்தாசையா யிருப்போம்" என்று அவளுக்கு முழு ஆதரவும் அளித்து வந்தனர் பெற்றோர்.

அன்று காலை ஜட்ஜையா வீட்டுக்குச் சென்ற பாவாயி சாம்பன் இருவரும் வீட்டில் ஒரே கூச்சலும் அழுகையுமாக இருந்ததைக் கண்டு என்னவோ, ஏதோவென்று பதற்றத்துடன் நுழைந்தனர். "ஊரிலேயே புகழ்பெற்ற பள்ளி, கார், தனியறை, விதவிதமா உண்ண உடுத்த, கேட்ட போதெல்லாம் பணம், எல்லாப் பாடத்துக்கும் ட்யூஷன் என்று கொட்டிப் படிக்கவைக்கிறோம், வருஷம் பூரா ஃப்ரெண்ட்ஸ் கூட்டம், போதாதற்கு பாழாப்போன ஃபோன், கம்ப்யூட்டர்னு பொழுதைக் கழிச்சுட்டு, இப்படி ஒரு கேவலமான மதிப்பெண் எடுத்திருக்கயே. இதை வைத்து எந்தக் கல்லூரியில் உன்னை சேர்க்கமுடியும்?" என ஜட்ஜையாவின் பேரன்மீது ஆளாளுக்குத் திட்டுகள் என வீடே அதிர்ந்து கொண்டிருந்தது. அப்பொழுதான் அவர்களுக்கு ப்ளஸ் டூ முடிவுகள் வந்திருந்த செய்தியே தெரிந்தது. "அடடா, நம்ம ரோசா நம்பர் கொண்டு வந்திருந்தா இங்கேயே பாஸ் பாக்கலாமே" என அங்கலாய்த்தாள் பாவாயி.

வீடு இருந்த அமர்க்களத்தில் கடனேயென்று சாப்பாடு, ஆளுக்கு ஒரு மூலை என்று துக்கம் கொண்டாடிக் கொண்டிருக்கையில், சீக்கிரம் வீடு திரும்ப அனுமதி கேட்கக்கூடத் தயக்கமாக இருந்தது. எப்படியோ மாலைவரை காத்திருந்துவிட்டு "மாமா, ஒரே பதட்டமாயிருக்குது. இன்னிக்கு மட்டும் வீட்டுக்கு ஆட்டோவில் போயிடலாமா?" என்ற பூவாயியின் கெஞ்சல் ஒரு பக்கம் இருந்தாலும் தன் நிலையும் அவ்வாறே இருந்ததால் ஆட்டோ பிடித்துக் கிளம்பினர். அவர்களின் அவசரத்துக்கு ஆட்டோ என்ன, சூப்பர் ஜெட்கூட ஈடு கொடுத்திருக்க முடியாது. வீடு இருக்கும் சந்துக்கு முன்பே இறங்கி, தெருமுனை திரும்புகையில் வீட்டு வாசலில் ஒரே கூட்டமாக இருந்ததையும் ஜனங்கள் போவதும் வருவதுமாக இருந்ததையும் கண்டனர்.

சாம்பனுக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. அவன் படிக்கும் தந்தி பேப்பரில் தேர்வு முடிவு நாட்களில் வரும் தலைப்புச் செய்திகளெல்லாம் வரிசைகட்டி நின்றன மனதில். "ஐயோ, பாவாயி, வூட்டுலே என்னாச்சோ; பயமாயிருக்குதே. புள்ள என்னவோ நல்லாத்தான் எழுதினேன்னுச்சே" என்று தனது பதற்றத்தை அவளுக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிட்டு ஓடவே ஆரம்பித்து விட்டான். அதற்குள் எதிரே வந்த பக்கத்து வீட்டு இசக்கி இவர்களை தரதரவென்று இழுத்துக்கொண்டு வீட்டை அடைந்து, "பேப்பர்க்கார ஐயா, டிவிக்காரவுங்களே, இவுங்கதான் ரோசாவோட அம்மா அப்பா" என்று முதல் ஒலிபரப்பு தனது என்ற பெருமையுடன் சாம்பனையும் பாவாயியையும் அவர்கள்முன் கொண்டு நிறுத்தினாள்.

அங்கு நடுநாயகியாக ரோஜா, அவளது பள்ளியின் தலைமை ஆசிரியர், வகுப்பு மிஸ்ஸம்மா என்று புடைசூழ சற்றுக் கூச்சத்துடன் நின்றிருந்தாள். மகளுக்கு ஒன்றும் நேரவில்லை என நிம்மதியடைந்தாலும் சூழ்நிலை புரியாது மலங்க மலங்க விழித்து நின்றனர் பெற்றவர்கள். தலைமை ஆசிரியர் துரைராஜன் மகிழ்ச்சியுடன் சாம்பனின் கையைக் குலுக்கி, "சாதிச்சுட்டாப்பா உங்க மகள்! மாவட்டத்திலேயே முதல் மாணவி, மாநிலத்தில் மூன்றாவது என்று கலக்கிட்டாளே" என்று பெருமையுடன் கூறினார். வகுப்பாசிரியை பாவாயியை அணைத்துக்கொண்டு, "நீங்க நல்ல விதையை விதைச்சீங்க; நல்லபயிர் வெளஞ்சது. நீங்க பட்ட பாட்டுக்கும், செய்த தியாகத்துக்கும் கெடச்ச பரிசு இது" என வாழ்த்தினார். பெருமையும், கூச்சமுமாக மகளின் இருபுறமும் நின்ற அவர்களை விதவிதமாக ஒருபுறம் புகைப்படம் எடுக்க, போட்டி போட்டுக்கொண்டு வந்த தொலைக்காட்சி நிருபர்களிடம் "மிஸ் சொன்னதுபோல, எவ்வளவு நல்ல விதையையும் திறமையுடன் விவசாயம் செய்தால்தான் விளைச்சல் அமோகமாக இருக்கும். இந்த நிலைக்கு நான் வர இரவும் பகலும் கனவுகண்ட என் பெற்றோரின் முனைப்பும் தியாகமும் காரணமானாலும், ஆரம்ப முதலே என்னையும் என்னுடன் படித்த எல்லாரையும் தங்கள் பிள்ளைகளைப் போலவே கருதி, கருத்துடன் கற்பித்த ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும்தான் காரணம். என்னைப் பெற்றவர்கள் 'ஏரெடுத்த உழவர்கள் என்றால் எங்கள் கல்விப்பயிரைக் கருத்துடன் விளைவிக்கும் ஆசிரியர்கள் 'ஏடெடுத்த உழவர்கள்'! நாடு முழுவதுமே இத்தகைய ஆசிரிய தெய்வங்கள் இருந்தால் மாநிலமென்ன உலக அளவில்கூட நம் மாணவர்கள் பேசப்படுவார்கள்" என்று தன்னடக்கத்துடன் கூறிக்கொண்டிருந்தாள்.

"புள்ளைக்கு முதல்ல சுத்திப்போடு. ஊர்க்கண் பூரா அவமேலதான்" என்று கூறிவிட்டு அண்டை அயல் பெண்மணிகள் வீடு திரும்பினர்.

மகிழ்ச்சிப் பெருக்கில் சாம்பன், பாவாயி இருவருக்கும் இரவு உறக்கமே இல்லை. பொழுது விடிந்ததும் ரோஜாவையும் அழைத்துக்கொண்டு ஜட்ஜ் வீட்டுக்குச் சென்றனர். வழி முழுதும் அங்கங்கு தெரிந்தவர், தெரியாதவர்களெல்லாம் இவர்களை வாழ்த்தினர்.

வீட்டு வாசலிலேயே ஜட்ஜையாவின் குடும்பத்தினர் நின்று இவர்களை வரவேற்றது இவர்களுக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது. உள்ளே சென்றதும் "ரோஜாம்மா, ஐயாவைக் கும்புட்டுக்கம்மா. அவர் குடுத்த வாழ்க்கையாலதான் நீ இவ்வளவு சாதிக்க முடிஞ்சது" எனக் கூற, ரோஜா அனைவரையும் வணங்கினாள். இனிப்பு வழங்கி குதூகலமாக வாழ்த்தினர் அனைவரும். "ஐயா, அன்னிக்கு நாங்க நிலத்தையும் வீட்டையும் தொலைச்சுட்டு வாழவகை தெரியாம நின்னப்ப நீங்க அழைச்சு வந்து ஆதரிக்காம இருந்திருந்தா, நாங்க எங்கே, எங்க மகதான் எங்கே? எங்க காலம் உள்ளமட்டும் உங்களுக்குத்தான் எல்லாத்துக்கும் நன்றி சொல்லுவோம்" என மனம் நெகிழ்ந்தனர் மூவரும்.

"சாம்பா, நல்ல ஈடுபாடும் உழைப்பும் இருந்தால் எந்தப் பள்ளியில் படித்தாலும் நன்கு முன்னேறலாம் என்பதற்கு உன் மகளே நல்ல எடுத்துக்காட்டு. இனி எவ்வளவு வேணுமானாலும் படித்துப் பட்டம் பெறும்வரை என் பொறுப்பு" என்று மகிழ்ச்சியுடன் வாக்களித்தார் ஜட்ஜ்.

இன்னும் சில ஆண்டுகளிலேயே ரோஜா ஒரு கைதேர்ந்த மருத்துவராகவோ, ஆட்சியராகவோ பரிணமித்து மணம் வீசுவதைச் சாம்பனும் பாவாயியும் பார்த்து மகிழும் காலம் வருமென்பது நிச்சயம்!

அம்புஜவல்லி தேசிகாச்சாரி,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com