அத்தியாயம் - 1 அடுத்த நாள் காலையில் அருண் சீக்கிரமே எழுந்துவிட்டான். மளமளவென்று தன் காலைக் கடன்களை முடித்து களப் பயணம் (field trip) போகத் தயாரானான். கீதாவிற்கு ஒரே வியப்பு. மீண்டும் ஒருமுறை பள்ளிக்கூடத்திலிருந்து ஏதாவது மின்னஞ்சல் வந்திருக்கிறதா என்று பார்த்துக்கொண்டார். அருண் அடித்த கொட்டத்திற்கு எந்த விதமான எச்சரிக்கையும் பள்ளியிலிருந்து வரவில்லை.
"அம்மா, கவலைப்படாதீங்க, நான் கட்டாயமா இன்னிக்கு ஃபீல்டு ட்ரிப் போறேன். என்னை யாரும் இடைநீக்கம் பண்ணமாட்டாங்க." அருண் உறுதியாகச் சொன்னான்.
கீதாவிற்கு ஆச்சரியம் அதிகரித்தது. அருண் எப்படி உறுதியாகச் சொல்கிறான் என்று அவருக்கு வியப்பு. பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியையும் அவனுக்கு உடந்தையோ? "அது எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற?"
"எனக்கு எல்லாம் தெரியும் அம்மா. நான் முக்காலமும் அறிந்தவன்."
அருண் சொன்னதைக் கேட்கச் சிரிப்பு வந்தது. இருந்தாலும், "அருண், இன்னிக்கும் ஏதாவது வம்பு தும்புல மாட்டிக்காதே, சரியா?"
"மாட்டேன் அம்மா. நான் இன்னிக்கு நிறைய தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு." அம்மாவுக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு பள்ளிக்கூடத்திற்கு விரைந்தான்.
---
களப்பயணம் போக வகுப்பு மாணவர்கள் எல்லோரும் பேருந்தில் ஏறி உட்கார்ந்தார்கள். சாரா அவன் அருகில் வந்து உட்கார்ந்தாள். சாம் பின்னால் உட்கார்ந்து சளசளவென்று பேசிக்கொண்டிருந்தான்.
"என்ன அருண், இன்னிக்கு இப்படி உற்சாகமா இருக்க?" சாரா கேட்டாள்.
"முகத்திலயே தெரியுதா என்ன? ஆமாம், நான் உண்மையிலேயே உற்சாகமா இருக்கேன் இன்னிக்கு."
"அப்படி என்ன மாற்றம் ஒரு நாளுல?"
"அதுவா, நான் மேஜிக் போஷன் கொஞ்சம் குடிச்சேன், அதான்."
"மேஜிக் போஷன்? இதென்ன வம்பாப் போச்சு?"
அருண் சிரித்துக்கொண்டே தான் டீ அருந்துவது போல பாவலா செய்தான். சாராவுக்குச் சிரிப்பாக வந்தது அருண் செய்ததைப் பார்த்து. "அருண் என்னமோ போ, தேன் குடிச்ச நரியாட்டம் இருக்க நீ. நேத்திக்கு பார்த்த அருணான்னு இருக்கு, எனக்கு."
அப்பொழுது பின் வரிசையிலிருந்து மிஸ் மெடோஸ் எழுந்து வருவதை சாரா கவனித்தாள். "அருண், you got company" என்று ஒரு யூகத்தோடு சொன்னாள் சாரா. அவள் சொன்னபடியே மிஸ் மெடோஸ் அங்கே வந்தார்.
"Sarah, do you mind?" என்றார். அருண் பக்கத்தில் உட்காரத்தான் கேட்கிறார் என்று சாராவுக்குத் தெரியும். உடனேயே எழுந்து இடம் கொடுத்தாள். ஒரு நமட்டுச் சிரிப்போடு பின் வரிசையில் ஓர் இடத்திற்கு சென்றாள்.
"தாங்க்ஸ் சாரா" என்ற மிஸ் மெடோஸ், "அருண், அப்புறம் என்ன நடக்குது?" என்றார்.
அருண் மெதுவாக ஆரம்பித்து, பள்ளிக்கூடத் தண்ணீர் பற்றி அதுவரைக்கும் கண்டுபிடித்ததை எல்லாம் படபடவென்று சொன்னான். அவருக்கு மிக வியப்பாக இருந்தது. அருணோடு போன முறை களப்பயணம் போனபோது அந்தப் பழங்குடியினரின் மூலிகைக்காக நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.
"அருண், நீ சொல்றது எல்லாம் உண்மையா? நம்பவே முடியலையே. ஆச்சரியமா இருக்கு."
"ஆமாம். ஏதோ நம்ம இன்னிக்கு போற இடத்துல எதையோ சட்டத்தை மீறிக் கொட்டறாங்க. எனக்கு வந்த கடிதம் அதை அவ்வளவு கரெக்டா சொல்லுது." அருண் அந்தக் கடிதம்பற்றியும், அதில் மிஸ் மெடோஸ் பற்றிக் குறிப்பிட்டிருந்ததையும் சொன்னான்.
"என்ன! உனக்கு வந்த கடிதத்தில் என்னைப்பத்தி எழுதிருந்ததா?"
"ஆமாம், நீங்க ஒரு tree hugger அப்படீன்னு போட்டிருந்தது" அருண் ஒரு நமட்டுச் சிரிப்போடு சொன்னான்.
"போச்சுடா, உலகத்துல எல்லாருக்கும் என்னைப்பத்தி தெரிஞ்சு போச்சா?"
சற்று நேரத்தில் பேருந்து போகவேண்டிய இடத்தில் போய் நின்றது. ஒவ்வொருவராக வண்டியிலிருந்து இறங்கினர். இறங்கும்போது அருணின் காதில் மிஸ் மெடோஸ், "அருண், என் பார்வையிலேயே இரு. எங்கயாவது காணாம போயிடாதே. நம்ம கண் முன்னாடியே எதுனாச்சும் மாட்டும்" என்றார்.
"சரி, எனக்கு எதுனாச்சும் தப்பா பட்டதுன்னா உடனேயே உங்களுக்கு தெரிவிக்கறேன். சரியா?" என்று அருணும் பதிலுக்குக் கிசுகிசுத்தான்.
அனைவரும் பேருந்திலிருந்து இறங்கிய பின்னர், அந்த உணவு பதனிடும் குடோன் ஆள் ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
"வணக்கம். என் பெயர் ராபர்ட். நான்தான் உங்களுக்கு வழிகாட்டி. வாங்க உள்ளே போகலாம்," என்று அழைத்துப் போனார். "நீங்க வேணும்னா ஃபோட்டோ எடுத்துக்கலாம். இன்னிக்கு எல்லாருக்கும் அனுமதி உண்டு."
அருணுக்கு தனக்கு வந்த கடிதத்தின்படி அங்கே தில்லுமுல்லு கட்டாயமாக நடக்கிறது என்று நம்பினான். ஆனால் எங்கே அந்த illegal dumping என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
தீடீரென்று அவனுக்கு ஒரு யோசனை வந்தது. "ஐயா, எனக்கு அவசரமா ரெஸ்ட்ரூம் போகணும்" என்று வழிகாட்டியிடம் சொன்னான். அருண் சங்கடத்தில் நெளிந்தான். அதைப் பார்த்த மற்ற மாணவர்கள் கொல்லென்று சிரித்தார்கள். அந்த வழிகாட்டி, திசையைக் காட்ட, அருண் ஒரே ஓட்டமாக ஓடினான். அவனது நண்பன் சாம் ஓவென்று சிரித்தான்.
"Guys, he's got to go means, he's got to go," என்று கிண்டல் அடித்தான் சாம்.
சற்று நேரத்தில் அருண் திரும்பி வந்தான். மிஸ் மெடோஸ் அருகே வந்து மெல்லக் கிசுகிசுத்தான். "மிஸ் மெடோஸ், தில்லுமுல்லு எல்லாத்தையும் யாருக்கும் தெரியாம படம் எடுத்துட்டேன்," என்றான்.
(அடுத்த இதழில் முடியும்)
ராஜேஷ் |