நீலகண்ட பிரம்மச்சாரி (பகுதி-2)
புரட்சி மாநகரம்
முதன்முதலாகத் தனது புரட்சிச் செயல்பாடுகளைத் தொடங்கும் பொருட்டு, 1908 பிப்ரவரி 15ம் தேதி தூத்துக்குடி வந்தடைந்தார் நீலகண்டன். அங்கே வ.உ. சிதம்பரம் பிள்ளையின் வீட்டில் சில நாட்கள் தங்கினார். கப்பல் நிறுவன வேலைகளோடு கூடவே, சுதேசி இயக்கத்திற்காகவும் இரவு, பகலாகச் சிதம்பரம் பிள்ளை உழைப்பதைக் கண்டு வியந்தார். அவரோடு இணைந்து சுதேசி இயக்கத்திற்காக உழைத்த சுப்ரமண்ய சிவத்தின் உறுதியைக் கண்டு மலைத்தார்.

சுதந்திர எழுச்சி
கடற்கரையில் தினந்தோறும் நடந்த கூட்டத்தில் பிள்ளையும், சிவமும் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினர். அது அங்கு கூடிய மக்களின் மனதில் விடுதலை வேட்கையை எழுப்பியது. இது பொறுக்காத பிரிட்டிஷ் அரசாங்கம் அவர்களுக்குப் பலவிதங்களில் தொல்லை கொடுக்க ஆரம்பித்தது. அதுவும் தூத்துக்குடியில் தாங்கள் நடத்தி வந்த கோரல் நூற்பாலையின் வேலை நிறுத்தத்திற்கும் தொடர்ந்து நடந்த போராட்டத் தூண்டுதல்களுக்கும் சிதம்பரம் பிள்ளையே காரணம் என்று நினைத்த அது, எப்படியாவது அவரை ஒடுக்க எண்ணியது. ஏற்கனவே அவர் தங்களுக்குப் போட்டியாக சுதேசி கப்பல் நிறுவனத்தை நடத்தி வந்ததைத் தாங்க இயலாத ஆதிக்க அரசு, சிதம்பரம் பிள்ளை மற்றும் சிவத்தின் மீது நடவடிக்கை எடுக்கத் தகுந்த நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அப்போதுதான் தூத்துக்குடி நகருக்கு உதவி கலெக்டராக வந்து சேர்ந்தார் ராபர்ட் வில்லியம் டி'எஸ்டிகார்ட் ஆஷ். வெள்ளை ஆதிக்க வெறி கொண்டிருந்த ஆஷ், தங்களுக்குச் சமமாகக் கறுப்பர் கப்பல் விடுவதையும், தன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் தங்கள் அரசாங்கத்தை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்துவதையும் கண்டு மிகுந்த சினம் கொண்டார்.

தூத்துக்குடியில், பிரிட்டிஷாருக்கு எதிரான எல்லாப் போராட்டங்களுக்கும் தூண்டுதலாக இருப்பவர்கள் வ.உ. சிதம்பரம் பிள்ளையும், சுப்ரமண்ய சிவமும்தான் என்பதை அறிந்து, அவர்களை எப்படியாவது ஒடுக்க உறுதி பூண்டார். அதற்கான வேலைகளில் இறங்கினார்.

தூத்துக்குடியில் இந்த நிகழ்வுகளைக் கண்ட நீலகண்டன், தனது மறைமுகமான புரட்சி வேலைகளை அங்கிருந்து தொடர்வது சரியாகாது என்று கருதினார். அங்கிருந்து திருநெல்வேலிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

திருநெல்வேலியில்...
திருநெல்வேலியில், புகழ்பெற்ற தேசபக்தரும் வழக்குரைஞருமான கணபதி பந்துலுவின் இல்லத்தில் தங்கினார் நீலகண்டன். தேசபக்தர்கள் சிலரின் முயற்சியால் அங்கு சிறு கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் சிறப்புரையாற்றினார். சுதேசி இயக்கச் சார்பாகவே அக்கூட்டம் நடந்தது. அதன்பின் பத்தமடைக்குச் சென்றார். மறவர்குலத் தலைவர்களாக விளங்கிய பூலம் பெரியசாமித் தேவரையும், மறவாக்குறிச்சி பிச்சாண்டித் தேவரையும் சந்திப்பது நீலகண்டனின் திட்டம். அதற்காகப் பத்தமடை அருகே உள்ள பூலத்திற்குச் சென்றார். அங்குள்ள பலர் எதற்கும் அஞ்சாதவர்கள் என்பதாலும், கலவரங்களில் ஈடுபடக் கூடியவர்கள் என்பதாலும் அவர்களைக் கண்காணிக்க ஒரு காவல் நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. அதற்காக ஒரு காவல்துறை ஆய்வாளரும் நியமிக்கப்பட்டிருந்தார்.

ரகசிய போலீஸ் 000
அந்த கிராமத்திற்கு நீலகண்டன் சென்றதும் அவர் 'புதிய மனிதர்' என எளிதாக அடையாளம் காணப்பட்டார். அதனால் காவல் துறையின் விசாரணைக்காக அழைக்கப்பட்டார். ஆய்வாளர், நீலகண்டனிடம் அவர் யார், எதற்காக வந்திருக்கிறார் என்று விசாரித்தார். நீலகண்டன், தன்னை சென்னையிலிருந்து வந்திருக்கும் ஒரு ரகசிய போலீஸ் அதிகாரி என்றும், அவ்வூரில் உள்ள கலவரக்காரர்கள் பற்றி விசாரித்து ரகசிய அறிக்கையை அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்க வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ரகசிய போலீஸார் இம்மாதிரி பல ஊர்களுக்கு வருவதும், விசாரித்துச் செல்வதும் அக்காலத்தில் வழக்கம் என்பதால் ஆய்வாளர் அதனை நம்பிவிட்டார். அந்த ஊரில் உள்ள கலவரக்காரர்களை அழைத்து 'பரேட்' நடத்தச் சொன்னார் நீலகண்டன். அதன் மூலம் 'பெரியசாமித் தேவன்' யார் என்பதை அடையாளம் கண்டுகொண்டார். ஆனால், அவருடன் தனியாக உரையாடச் சந்தர்ப்பம் அமையவில்லை. ஆய்வாளருக்கு நன்றி கூறி விடைபெற்றார் நீலகண்டன். ஆய்வாளர், பதில் நன்றி கூறி, தனது மேலதிகாரிகளுக்கு, ரகசிய போலீஸின் வருகையைப் பற்றி அறிக்கைச் சமர்ப்பிப்பதாகச் சொன்னார். அவரைத் தடுத்த நீலகண்டன், "ஐயா... நாங்கள் ரகசிய போலீஸ் இலாகா. எங்கள் செயல்பாடுகள் எல்லாமே ரகசியமாக இருக்க வேண்டியவை. அது தெரியாமல் நீங்கள் எங்களைப் பற்றி ரிகார்டில் ஏதும் பதிவு செய்தால், நாளை உங்களுக்கே அது மிகப்பெரிய பிரச்சனையாக வரக்கூடும்" என்று எச்சரித்தார். அதனை ஏற்றுக்கொண்ட ஆய்வாளரிடம், "ஐயா, இங்கு வந்தது பற்றி நான் எனது மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துவிடுவேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம். கூடவே நீங்கள் மிகவும் உதவியாக இருந்தீர்கள் என்பதையும் தெரிவித்து விடுகிறேன்" என்றார். அதனைக் கேட்டு மகிழ்ச்சியுடன் நீலகண்டனை வழியனுப்பி வைத்தார் காவல்துறை ஆய்வாளர்.

மறவாக்குறிச்சியில் 3000 வீரர்கள்
அடுத்து மறவாக்குறிச்சி சென்றார் நீலகண்டன். பிச்சாண்டித் தேவரைச் சந்திக்க முயன்றார். ஆனால், அது அவ்வளவு எளிதில் கைகூடவில்லை. மறவர் சீமையில் மிகவும் பலம் வாய்ந்த அவரைச் சந்திக்கப் பரிந்துரை வேண்டியிருந்தது. 'மாப்பிள்ளை ஐயன்' என அழைக்கப்படும் பிள்ளையன் என்பவரை அணுகி, தான் தேச காரியமாக தேவரைச் சந்திக்க வந்திருப்பதாகத் தெரிவித்தார். அவர்மூலம் பிச்சாண்டித் தேவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது.

பிச்சாண்டித் தேவரிடம் தனது நோக்கம் பற்றி, இந்திய தேச விடுதலைக்காக பரோடா மன்னர் துவங்கி, ஜெர்மன் அதிபர்வரை பலர் செய்யும் முயற்சிகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்து அவரது ஆதரவை வேண்டினார் நீலகண்டன். புரட்சி வீரர்கள் கொண்ட படை ஒன்று அமைக்க வேண்டும் என்றும், அதற்கு வீர மறவர்களின் உதவி வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தனது ஐயங்களையெல்லாம் கேட்டுத் தெளிந்த பிச்சாண்டித் தேவர், இறுதியில் நீலகண்டனின் முயற்சிகளுக்கு உதவுவதாக வாக்களித்தார்.

"அப்படியானால் உங்கள் வீரர்களை இப்போதே தயார்படுத்த வேண்டும். அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி, துப்பாக்கிப் பயிற்சி அளிக்க வேண்டும்" என்றார், நீலகண்டன்.

"துப்பாக்கிகள் இல்லாமல் எப்படித் துப்பாக்கிப் பயிற்சி தர முடியும்?" என்றார் தேவர்.

"கூடிய விரைவில் ஜெர்மனிலிருந்து ரகசியமாக ஆயுதங்கள் வரும். ஆனால், அது வரும்வரை காத்திருக்காமல், தங்களிடமுள்ள வேட்டைத் துப்பாக்கிகளைக் கொண்டு, வீரர்களுக்குத் தனித் தனியாகத் துப்பாக்கி சுடும் பயிற்சியை அளிக்கவேண்டும்" என்று சொன்னார் நீலகண்டன். மேலும் "துப்பாக்கி சுடுவதில் மட்டுமல்ல; அணிவகுத்து நடப்பது, மனவுறுதி, தேகப்பயிற்சி என எல்லாமே வீரர்களுக்கு முக்கியம். இதற்கும் பயிற்சிகள் அளிக்க வேண்டும்" என்றார்.

இதைக் கேட்டு மகிழ்ந்த பிச்சாண்டித் தேவர், "கவலை வேண்டாம். எதற்கும் துணிந்த, சாவைக் கண்டு அஞ்சாத 3000 வீரர்களை நான் உங்களுக்குத் தருகிறேன். விரைவில் அவர்களுக்கான ஆயுதங்களுக்கு நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள். அதுவரை எங்கள் வேட்டைத் துப்பாக்கிகள் மூலம் அவர்களுக்குப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் தைரியமாகச் செல்லலாம்" என்று உறுதியளித்தார்.

விரைவில் மீண்டும் வந்து சந்திப்பதாகச் சொல்லி மனநிறைவுடன் புறப்பட்டார் நீலகண்டன்.

சசுப்ரமண்ய சிவம், வ.உ. சிதம்பரம் பிள்ளை, நீலகண்ட பிரம்மச்சாரி நடுவயதில்தென்காசியில்...
மீண்டும் பத்தமடைக்குச் சென்ற நீலகண்டன், அங்கு, சுதேசி இயக்கம் சார்பாக நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். பின் தென்காசிக்குச் சென்றார். சங்கரகிருஷ்ண ஐயர், மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை என்ற இரு நண்பர்களின் அறிமுகம் அங்கு கிடைத்தது. சங்கரகிருஷ்ணன், பாரதியாரின் மனைவி செல்லம்மாள் குடும்பத்தைச் சேர்ந்தவர். இளைஞர். மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை அங்கு ஒரு சைவ உணவு விடுதி வைத்திருந்தார். அவரும் ஓர் இளைஞரே! இவரது உறவினர்தான் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நெருங்கிய நண்பரான மாடசாமிப் பிள்ளை. இந்த இளைஞர்கள் இருவரும் நீலகண்டனின் புரட்சி இயக்கத்தில் இணைந்ததுடன், அவரது புரட்சிச் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் வாக்களித்தனர்.

தென்காசியில் சுதேசி இயக்கத்தை ஆதரித்துச் சில சொற்பொழிவுகள் செய்தார் நீலகண்டன். பின்னர் அம்பாசமுத்திரம் சென்றார். கோமதி சங்கர தீக்ஷிதர் அங்கே நீலகண்டனுக்கு உதவினார். அங்கும் சில சொற்பொழிவுகளை நிகழ்த்தினார் நீலகண்டன்.

அவர் தென்காசியில் தங்கியிருக்கும்போதுதான் திருநெல்வேலிக் கலவரம் உண்டானது.

திருநெல்வேலிக் கலவரம்
பிரிட்டிஷாரை எதிர்த்துச் செயல்பட்டதற்காக ஆறுமாத சிறைத் தண்டனை பெற்றிருந்த புரட்சியாளர் விபின்சந்திரபால் விடுதலை செய்யப்பட்டார். அந்த நிகழ்வை மிகச் சிறப்பாகக் கொண்டாட வ.உ. சிதம்பரம் பிள்ளை தலைமையிலான தேசபக்தர்கள் கொண்ட குழு முடிவுசெய்தது. அது தங்களுக்கு எதிரானதாக பெரும் கலகத்தில் முடியும் என்று எண்ணிய பிரிட்டிஷ் அரசு, அந்த நிகழ்விற்குத் தடை விதித்தது. சிதம்பரம் பிள்ளைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அவரும், அவரைச் சார்ந்தோரும் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அச்சுறுத்தியது. பலரை அதிகாரிகள் நேரடியாக எச்சரித்தனர். இதையறிந்த சிதம்பரம் பிள்ளை வெகுண்டார், வருந்தினார். எப்படி இருந்தாலும் விழாவை நடத்தியே தீருவதென்று முடிவு செய்தார்.

வந்தே மாதரம்
பிள்ளை முன்னரே திட்டமிட்டபடி பிரிட்டிஷாரின் தடையை மீறி சுப்ரமணிய சிவம் போன்ற நண்பர்களுடன் இணைந்து விபின்சந்திர பாலின் விடுதலைத் திருநாளை சிறப்பாகக் கொண்டாடினார். ஆயிரக்கணக்கான மக்கள் எழுச்சியோடு கலந்துகொண்ட அக்கூட்டத்தில் சுதந்திரக் கனலைத் தூண்டும்படி சிதம்பரம் பிள்ளையும் சிவமும் பேசினர். சுதந்திர முழக்கம் வானுயர எழுந்தது. 'வந்தேமாதரம்' என்ற ஒலி விண்ணைப் பிளந்தது. பிரிட்டிஷார் பலர் "வந்தேமாதரம்" என்று சொல்லும்படி கிளர்ச்சியாளர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டனர். எங்கே இந்த முழக்கம் பெருங்கிளர்ச்சியாகி நாடு முழுவதும் பரவிவிடுமோ என்று பிரிட்டிஷ் அரசு அஞ்சியது. இதற்கு மூலகாரணமாக இருந்த பிள்ளையையும், சிவத்தையும் அறவே ஒடுக்க எண்ணியது. கைது செய்யத் திட்டமிட்டது. தூத்துக்குடியிலேயே அவர்களைக் கைது செய்தால் அது மேலும் கிளர்ச்சியை, கலவரத்தை உருவாக்கி விடும்; தங்களுக்கு மிகப் பெரிய எதிர்ப்பு எழும் என்று அஞ்சியது. என்ன செய்யலாம் என யோசித்துத் திட்டம் ஒன்றைத் தீட்டியது.

கைது, கடுங்காவல், துப்பாக்கிச் சூடு
திருநெல்வேலி கலெக்டர் விஞ்ச், தம்மை வந்து சந்திக்கும்படி வ.உ. சிதம்பரம் பிள்ளை, சிவம் இருவருக்கும் ஆணை பிறப்பித்தார். இருவரும் நெல்லைக்குச் சென்று அவரைச் சந்தித்தனர். இருவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சுமத்திச் சீறி விழுந்த விஞ்ச், அவர்களை உடனடியாக திருநெல்வேலியை விட்டு வெளியேற வேண்டும் என்றும், இனிமேல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என்று உறுதிமொழிப் பத்திரத்தில் எழுதிக் கையொப்பமிட வேண்டும் என்றும் கட்டளை பிறப்பித்தார். இதைக் கேட்டுச் சினந்த சிதம்பரம் பிள்ளை, விஞ்ச் துரையின் செயல்பாடுகளை, நேர்மையற்ற நடவடிக்கைகளைப் பலவாறாக விமர்சித்துப் பேசினார். அவரது பாரபட்சமான செயல்பாடுகளைக் கடுமையாக எதிர்த்தார். விஞ்ச்சின் கட்டளையை ஏற்க மறுத்தார். விஞ்ச்சின் சினம் அதிகமாயிற்று. இருவரையும் கைது செய்ய உடனடியாக ஆணை பிறப்பித்தார்.

இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்ததுமில்லாமல் சிதம்பரம் பிள்ளையின் வீட்டிலும் ரகசிய போலீசார் சோதனை மேற்கொண்டனர். சில கடிதங்களையும் கைப்பற்றினர். செய்தி தென்னாடெங்கும் பரவியது. எங்கும் கடையடைப்பு நிகழ்ந்தது. கைதைக் கண்டித்து பொதுக்கூட்டங்களும், ஊர்வலங்களும் நடந்தன. சில இடங்களில் கல்வீச்சு, தீ வைப்பு என்று கிளர்ச்சிகள் அதிகரித்தன. நகரசபை அலுவலகம், காவல்துறை அலுவலகம், சப்-ரிஜிஸ்தரார் அலுவலகம் போன்றவை தீக்கிரையாகின. கலவரம் செய்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் நால்வர் மாண்டனர். சிலர் படுகாயமுற்றனர். ஒரு காவல்துறைப் பணியாளருக்கு மண்டை உடைந்தது.

திருநெல்வேலி நகரம் மட்டுமல்லாமல், தச்சநல்லூர். தூத்துக்குடி போன்ற இடங்களிலும் கலவரம் பரவியது. இதனால் சினம் கொண்ட டெபுடி கலெக்டர் ஆஷ், கலகக்காரர்கள் சிலரைச் சுட்டார். அதில் ஒரு அப்பாவிச் சிறுவன் பலியானான். கலவரம் சில நாட்களுக்குக் தொடர்ந்தது பின் சென்னை உள்ளிட்ட நகரங்களிலிருந்து நூற்றுக்கணக்கான காவலர்களை அழைத்து வந்து கலவரத்தை அடக்கியது பிரிட்டிஷ் அரசு.

இந்தக் கலவரங்களின் போது தென்காசியில் இருந்தார் நீலகண்டன். இந்த நேரத்தில் அங்கு புரட்சிப்படைக்கான செயல்களை மேற்கொள்வது சரியாகாது என்பதை உணர்ந்து சென்னைக்குப் புறப்பட்டார்.

(தொடரும்)

பா.சு. ரமணன்

© TamilOnline.com