தம்மைத் தாமே நக்கிக் கொள்கிற நாய்கள்
"வர்ண வேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். தமிழை விட சமஸ்கிருதம் உயர்வானது. பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழில் எழுத வேண்டும், பேச வேண்டும் என்கின்ற தமிழறிஞர்கள், தம்மைத் தாமே நக்கிக் கொள்கிற நாய்கள். சமஸ்கிருதம் இங்கே ஆதரித்து வளர்க்கப்பட்டிருந்தால், ஆங்கிலம் இப்படி நுழைந்திருக்காது" என்று அண்மையில் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் சென்னை சமஸ்கிருத சேவாசமிதி நடத்திய பாராட்டுக் கூட்டத்தில் பேசியதாகச் செய்தி.

ஜெயகாந்தனின் பதிப்பாளர்கள் அவருக்கு அடுத்த வாரம் நடத்திய பாராட்டு விழாவில் அவர் தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார். தன்னை அறியாமலேயே பிறரைப் புண்படுத்தி விட்டோமோ என்று வருத்தம் தெரிவித்து, விலங்கு உயிர்கள் எல்லாம் தம்மை மட்டும் நேசிப்பவை, மனிதன் மட்டுமே தன்னையும் தாண்டிப் பிற உயிர்கள் மீதும் கருணை காட்டுபவன், என்ற பொருளிலேதான் "தம்மைத்தாமே நக்கும் நாய்" என்று குறிப்பிட்டதாகச் சொன்னார். "நாய்க்குப் பதில் சிங்கம் என்று வேண்டுமானால் போட்டுக் கொள்ளுங்களேன்!" என்றார் நகைப்புக்கிடையே. இதே தொனியில் "கலைச்சொற்களைத் தமிழாக்கம் செய்யும் முயற்சியைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது; சமஸ்கிருதத்தில் கலைச்சொற்கள் படைத்திருந்தால் தமிழில் ஆங்கிலக் கலப்பு குறைந்திருக்கும்" என்று பொன் நாவரசு நினைவுச் சொற்பொழிவில் தொடர்ந்திருக்கிறார்.

ஞானபீட விருது சாதாரணமான விருதல்ல. பொதுவாக அது விருது பெறும் எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாமல், அவர் எழுதும் மொழிக்கும் பெருமை சேர்க்கும். ஞானபீட விருது பெற்றவர்களின் பேச்சுக்களை அவர் மொழியினர் மட்டுமல்லாமல், எல்லா இந்திய மொழியினரும் கவனிப்பார்கள். "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்று கொண்டாடினானே பாரதி அவனுக்கு மட்டும் இலக்கிய நோபல் பரிசு கிடைத்திருந்தால்! அம்ம, நினைக்கவே இனிக்கிறதல்லவா! அந்நியனுக்கு அடிமைப்பட்டு வாடிய காலத்திலும் தன் பாடல்களின் ஒவ்வொரு சொல்லிலும் தன் நாட்டையும், மொழியையும் வானளாவ உயர்த்திப் பிடித்து, தன் காலத்தவர் மட்டுமல்ல, இனி வரும் ஒவ்வொரு தலை முறையையும் நம் மரபைக் கொண்டாட வைக்கிறானே, அவனுக்கு மட்டும் விருது கிடைத்திருந்தால்!

எழுத்தாளன் என்பவன் எழுத்தை ஆள்பவன். சொல்ல வந்த கருத்தை அவனால் நளினமாகவும் சொல்ல முடியும்; நாற்ற மடிக்கவும் செய்ய முடியும். இந்தியா என்ற கதம்பத்திலே ஒவ்வொரு பூவையும் நுகர் வதன் தேவையைப் பற்றி 1995 இல் ஞான பீட விருது பெற்றுப் பேசிய கன்னட எழுத்தாளர் யு.ஆர். ஆனந்தமூர்த்தி நளினமாகச் சொன்னார்.

கலைச்சொற்களைத் தமிழுக்குப் பதில் சமஸ்கிருதத்தில் படைத்திருந்தால் ஆங்கிலத்தின் ஊடுருவல் தணிந்திருக்குமா? சமஸ்கிருதச் சொற்களை இயல்பாகவே ஏற்றுக் கொள்ளக்கூடிய வடமொழிகளைப் பார்ப்போமே. நடந்திருக்கிறதா? வாழும் மொழியின் சொற்களை இரவல் வாங்குவதை விட்டுப் பண்டைய மொழியில் சொற்கள் படைப்பதும் புதிதல்ல. ஆங்கிலம் தன்னம்பிக்கையுடன் தலையெடுக்கும் முன்னர், அதன் சொல்வளம் பெருகுவதற்கு முன், அதன் மருத்துவ, அறிவியற் கலைச்சொற்கள் தங்கள் மொழிக் குடும்பத்துடன் தொடர்புள்ள ஐரோப்பிய மொழிகளிலிருந்து இரவலாகவும், செம்மொழி களான கிரேக்கம், லத்தீனம் ஆகியவற்றின் வேர்களில் இருந்தும் படைக்கப்பட்டன.

ஆனால், அண்மையில் தோன்றிய கணினித் துறையில் கலைச்சொற்கள் தற்கால ஆங்கிலச் சொற்களின் அடிப்படையிலேயே உருவாகின. புதிய கருத்துகளை பல்லாயிரக் கணக்கானோர் வெகுவிரைவில் உருவாக்கி எல்லோரிடமும் கருத்துப் பரிமாற்றம் கொள்ள முடிவது கணினித் துறையில் மட்டும்தான். இதில் தான் பத்து வயதுச் சிறுவர் பலரும் நிபுணராக முடிகிறது. கலைச்சொற்களைத் தமிழாக்கம் செய்வதன் அடிப்படையே அதுதான். தாய்மொழியில் இருக்கும் சொற்களை நிபுணர்கள் துணையில்லாமலேயே புரிந்து கொள்ள முடியும். ஆனால் தாய் மொழியிலும் வேர்ச்சொற்களை அறிவதற்காகவாவது பயிற்சி தேவை.

தமிழ்நாட்டின் சிக்கல் அளவுக்கு மீறிய தமிழ்ப் பற்றால் அல்ல. தமிழ்நாட்டில் தமிழ் படிக்காம லேயே பட்டம் பெற முடியும், வேலை பார்க்க முடியும். தமிழக ஊடகங்களின் தமிழில் அளவுக்குமீறிய பிறமொழிக் கலப்பு. தமிழ் மட்டும் தெரிந்த ஒரு நாட்டுப்புறத்தார் வழக்கு மன்றம் ஏறினார் என்றால், அவரைப் பற்றிய வழக்கு அவருக்குத் தெரியாத மொழியிலே நடக்கும். இது சரியில்லை என்று யாருக்கும் தோன்றுவதில்லை. ஏனென்றால், படித்த, பட்டம் பெற்ற, ஆங்கிலம் தெரிந்த நடுத்தட்டு மக்களுக்கு இது ஒரு சிக்கலே இல்லை. அவர்கள் தீர்வு எல்லோரும் ஆங்கிலம் படிக்கட்டுமே என்பதுதான். நமது முன்னோர்கள் சிலரும் இது போல, அப்போது ஆட்சி மொழி எதுவோ அதில் கருத்துப் பரிமாறிக் கொண்டிருந்ததால்தான், அந்த மொழிகளின் ஆட்சி வீழ்ந்த பின்னர் தொடர்ச்சியில்லாமல் தடுமாறுகிறோம்.

தமிழில் கலைச்சொற்கள் பல பிறமொழிச் சொற்கள்தாம். இவற்றில் பெரும்பாலானவை அந்நிய மொழி பேசுவோரின் ஆட்சிக்குக் கீழ்ப்பணிய நேர்ந்த போது உருவானவை. கலைச்சொற்கள் பிறமொழிச் சொற்களாக இருப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. புதிய கருத்துகளைக் குறிக்கப் புதுச் சொற்களைப் படைப்பதற்கு வேர்ச்சொற்கள் இல்லாமல் போய்விடுகிறது. பிறமொழியில் படித்து, பிற மொழியில் சிந்தித்து, பிறமொழியில் வேலை செய்யும்போது இயல்பாகவே பிறமொழிக்காரர்களின் சிக்கல்களைத் தீர்க்கத்தான் தோன்றும். அதனால்தான் உலகிலேயே மிக அதிகமான கணினி நிபுணர்களைக் கொண்டிருந்தாலும், இந்தியர்கள் இன்னும் தம் மக்கள் சிக்கல்களுக்குத் தீர்வு காணாமல் பிற நாட்டவர்களுக்குக் குற்றேவல் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழில் கலைச்சொற்களை உருவாக்க முனைபவர்கள் கண்மூடித்தனமானவர்கள் அல்லர். அவர்கள் ஆழமான சிந்தனைகளை பேரா. ராதா செல்லப்பன் ("அறிவியல் தமிழ், இன்றைய நிலை"), முனைவர் மறைமலை ("சொல்லாக்கம்"), பேரா. வி. சி. குழந்தைசாமி போன்றோர் நூல்களிலிருந்து அறியலாம். கலைச்சொல்லாக்கம், ஆங்கிலத்தின் தாக்கம் பற்றி மேலோட்டமாகப் பேசி விட முடியாது. "ஞானபீடம்" என்ற மலைப்பான விருதுகளைப் பெற்றவர்களிடமிருந்து நாம் எதிர்பார்ப்பது பயனுள்ள சொற்களைத்தான். "ஆறாது நாவினாற் சுட்ட வடு."

பாரதியார் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. தமிழ்த்தாய் தன் மக்களிடம் புலம்புவது போல் அந்தப் பாடல் அமையும்.

"கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!"
அப்படி என்ன சொன்னான் அந்தப் படுபாவி?
"புத்தம் புதிய கலைகள் பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை"
உண்மைதான். அதனால் என்ன, கொண்டு வருவோம் தாயே!
"சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை!"
அப்படியா சொன்னான்? பேதை! தமிழைப் பற்றி அவனுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!
"மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"
அடப்பாவி! அப்படியா சொன்னான்? தாயே உன் காதிலா இந்த வசை விழுந்தது?
"சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!"

அப்படியே செய்கிறோம் தாயே! யார் வசை பாடினாலும் அதைப் பொருட்படுத்தப் போவதில்லை!

மணி மு. மணிவண்ணன்

© TamilOnline.com