கர்ணன் வள்ளலான கதை
ஏவுவதைச் செய்கின்ற பெண்பேயான கிருத்யை துரியோதனனை எங்கிருந்து பாதாளலோகத்துக்கு எடுத்துச் சென்றதோ, அங்கேயே திரும்பக் கொண்டுவந்துவிட்டு மறைந்துபோனது. துரியோதனன் எடுத்துச் செல்லப்பட்டதும், திரும்பக் கொண்டுவந்து விடப்பட்டதும் இரவு நேரத்தில் நடந்தவை; மேலும் துரியோதனனே நடந்தவற்றையெல்லாம் 'ஏதோ கனவில் நடந்தவை' என்றுதான் எண்ணினான். அதற்கும்மேல், துரியோதனன் நடந்ததையெல்லாம் யாருக்கும் சொல்லவில்லை என்கிறது வியாச பாரதம். "க்ருத்யையினால் அழத்துக்கொண்டுபோய் இராக்காலத்தில் தானவர்களால் இந்தத் துரியோதனனுக்கு எந்தவிஷயம் சொல்லப்பட்டதோ, அதை இவன் ஒருவனுக்கும் சொல்லவில்லை". (கும்பகோணம் பதிப்பு, வனபர்வம், கோஷயாத்ரா பர்வம், அத். 253, பக். 943). எனவே, கர்ணன் நரகாசுரனுடைய அம்சம் என்பதும், அவன் இந்திரனுக்குத் தன் கவச குண்டலங்களை அளிக்கப்போகிறான் என்பதும் கர்ணனுக்கேகூடத் தெரிவிக்கப்படவில்லை.

பொழுது விடிந்தது. துரியோதனனின் மனதில், கர்ணன் அர்ஜுனனைப் போரில் கட்டாயம் வெல்வான் என்ற பிரமை ஏற்பட்டது. இருள் கவிவதற்கு முன்னால் துரியோதனனுக்கு அருகிலிருந்தபடி உறங்கிய கர்ணன் விழித்தெழுந்தான். 'நண்பா! இறந்துபோய்விட்டால் அதன்பிறகு பகைவரை வெல்வது எவ்வாறு? நன்மைகளை விரும்புகிறவன் உயிருடன் இருந்தே தீரவேண்டும். உனக்கு ஒருவேளை அர்ஜுனனுடைய பராக்கிரமத்தைப் பார்த்து பயம் ஏற்பட்டிருக்கலாம். பதின்மூன்று ஆண்டுகள் முடிந்ததும் நடக்கப்போகும் போரில் நான் அர்ஜுனனைக் கொல்வேன். இது உறுதி' என்று சபதம் செய்தான். துரியோதனன் இதனால் மனம் தேறினான். நகரம் திரும்பச் சம்மதம் தெரிவித்தான். அனைத்துப் படைகளும் பின்தொடர, அந்தணர்கள் ஆசி மொழிகூற, துரியோதனன் கர்ணனுடனும் சகுனியுடனும் நகரம் திரும்பினான்.

அரண்மனைக்குத் திரும்பியதும் துரியோதனன் பீஷ்மரைச் சந்தித்தான். நடந்தவற்றை ஒற்றர் மூலமாக அறிந்திருந்த பீஷ்மர், 'துரியோதனா! நீ காட்டுக்குப் புறப்பட்டபோதே உன்னைத் தடுத்தேன். நீ, நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. அங்கு சென்றாய்; கந்தர்வர்களால் சிறையெடுக்கப்பட்டாய். உனக்குத் துணையிருப்பான் என்று நீ எண்ணிக்கொண்டிருக்கும் இந்தக் கர்ணன், போர்க்களத்தில் உன்னைக் கைவிட்டுவிட்டு உன் கண்முன்னாலேயே தப்பியோடினான். கடைசியில் உன்னைப் பாண்டவர்கள் வந்து குல நன்மையை உத்தேசித்துக் காப்பாற்றினார்கள். இனி, பாண்டவர்களோடு நட்புக்கொண்டுவிடு. அதுதான் உனக்கு நன்மையைத் தரும்' என்றார். இதே நல்லுரையைத்தான் சித்திரசேனனுடனான யுத்தம் முடிந்தபிறகு சகுனியும் சொன்னான் என்பதைப் பார்த்தோம்.

அப்போது எழாத கோபம், துரியோதனனுக்கு இப்போது எழுந்தது. உரக்கச் சிரித்தான். பீஷ்மரை ஏளனமாகப் பார்த்தான். தம்பியர் புடைசூழ, சகுனியோடு அங்கிருந்து வெளியேறினான். பீஷ்மர் இதைக்கண்டு வருத்தமடைந்து, தன் மாளிகைக்குக் கவலையுடன் திரும்பினார். அவர் சென்றதும் துரியோதனன், கர்ணன் போன்றோருடன் அந்த இடத்துக்கு வந்தான். கர்ணன் துரியோதனனைப் பார்த்து, 'பீஷ்மர் எப்போதும் பாண்டவர்களைப் புகழ்கிறார். நம்மை இகழ்கிறார். உன்னிடம் கொண்டுள்ள பகைமையின் காரணமாக என்னையும் இகழ்கிறார். இதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவிலை. எனக்கு அனுமதி கொடு. நான் ஒருவனாகவே போருக்குச் சென்று பாண்டவர்கள் அனைவரையும் வெல்வேன். என் பராக்கிரமத்தை பீஷ்மர் அப்போது தெரிந்துகொள்வார். உன்பொருட்டு, நான் நாட்டை வென்று உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன். எனக்கு அனுமதி கொடு' என்றான். இந்த வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன், கர்ணன்மீது முன்னைக் காட்டிலும் அன்புடையவன் ஆனான். சித்திரசேனனுடனான போரில் கர்ணன் தன்னைக் கைவிட்டுவிட்டுக் களத்தை விட்டே ஓடியது அவன் நினைவில் எழவேயில்லை. கர்ணன் அர்ஜுனனைப் போல திக்விஜயம் செய்து, பலநாடுகளை வென்று திரும்புவதற்கு அனுமதி கொடுத்தான்.

கர்ணன் ஒரு பெரும்படையைத் திரட்டிக்கொண்டு திக்விஜயம் புறப்பட்டான். தன் தோல்விகளை எப்போதும் குத்திக்காட்டிக்கொண்டே இருக்கும் பீஷ்மரிடம் அடையும் அவமானத்துக்கு மருந்தாக அவனுக்கு இது தேவைப்பட்டது. முதலில் துருபதனுடைய நாட்டுக்குச் சென்றான். ஆதிபர்வத்தில் துரோணருக்கு குருதட்சிணையாக துருபதனை வென்று அவரிடத்தில் ஒப்படைக்கவேண்டிய போரில், கர்ணன் துரியோதனனுடன் துருபதன்மீது படையெடுத்துச் சென்று, தோல்வி அடைந்திருந்தான். இப்போது திக்விஜயப் போரில் துருபதனை வென்றான். அவனை துரியோதனனுக்குக் கப்பம் கட்ட வைத்தான். அதைத் தொடர்ந்து (நரகாசுரனுடைய பேரனான) பகதத்தனை வென்றான். மகதம், மிதிலை, கோசலம் போன்ற நாடுகளையும் வென்று, அங்கம் வங்கம் கலிங்கம் போன்ற நாடுகளையும் வென்றான். தென்திசைக்கு வந்து பாண்டிய நாட்டையும் ஸ்ரீசைலத்தையும் முறியடித்தான். அதன்பிறகு மேல்திசை சென்று மிலேச்சர் போன்றோர்களையும் யவனர்களையும் வென்று, அனைவரையும் துரியோதனனுக்குக் கப்பம் கட்டவைத்தான்.

துரியோதனன் பெருமகிழ்ச்சியடைந்தான். அஸ்தினாபுரத்தின் எல்லைக்கு வந்து, தன் நூறு சகோதரர்களும் உறவினர்களும் புடைசூழக் கர்ணனை வரவேற்றான். கர்ணனுடைய வெற்றியை நாடெங்கிலும் பறையறைந்து தெரிவித்தான். 'கர்ணா! பீஷ்மர், துரோணர் போன்றவர்கள் மூலமாகக்கூட அடைந்திராத நன்மைகளை உன்மூலம் அடைந்தேன். உன்னுடைய திறமையில் பதினாறில் ஒருபங்குகூட பாண்டவர்களுக்கு இல்லை. இனிமேல் எனக்கு பயமில்லை. "கர்ண! பெரிய வில்லைக் கையில் தாங்கியவனே! அப்படிப்பட்ட நீ, இந்திரன் அதிதியைப் பார்ப்பதைப்போல் திருதராஷ்டிரரையும் புகழ்பெற்றவளான காந்தாரியையும் பார்" என்றுகூறி, வெற்றிபெற்றுத் திரும்பிய கர்ணனைத் தன் பெற்றோர்களைச் சந்திக்கச் செய்தான். (வனபர்வம், கோஷயாத்ரா பர்வம், அத். 255, பக். 950). அவர்களைச் சந்தித்த கர்ணன், "புத்திரன்போல அவனுடைய (திருதராஷ்டிரனுடைய) இரு கால்களையும் பிடித்து வணங்கினான். திருதராஷ்டிரஷ்டிரனாலும் அன்புடன் தழுவிக்கொள்ளப்பட்டான். பாரதரே! அந்த ஸமயம் தொடங்கி துரியோதன ராஜனும் ஸுபலனுடைய புத்திரனான சகுனியும். யுத்தத்தில் கர்ணனால் பார்த்தர்களை {பாண்டவர்களை} ஜயிக்கப்பட்டவர்களாக எண்ணினார்கள்." (மேற்படி இடம், பக். 951).

எல்லாப் பதிப்புகளும் கர்ணனுடைய திக்விஜயத்தைப் பற்றி இவ்வளவு சிறப்பாகச் சொன்னாலும் Bhandarkar Oriental Research Institute வெளியிட்ட செம்பதிப்பான போரி பதிப்பு, கர்ணனுடைய திக்விஜயத்தை 'இடைச்செருகல்' என்று ஒதுக்குகிறது.

துரியோதனனுக்குப் பெருமிதம் தாங்கவில்லை. அந்தணர்களை அழைத்து, (தர்மபுத்திரன் செய்ததைப் போலவே) தானும் ஒரு ராஜசூய யாகத்தை நடத்தவேண்டும் என்றுசொல்லி, அவர்களை நடத்திக்கொடுக்கச் சொன்னான். தர்மபுத்திரனும் திருதராஷ்டிரனும் உயிரோடு இருப்பதனால், துரியோதனனால் ராஜசூய யாகத்தை நடத்த முடியாது எனவும், அதற்கு இணையான 'வைஷ்ணவப் பெருவேள்வி'யை வேண்டுமானால் துரியோதனன் நடத்தமுடியும் என்றும் அவர்கள் சொன்னார்கள். இவற்றையெல்லாம் நம் தொடரில் ஆகஸ்டு 2014ம் ஆண்டு 'விலக்கப்பட்ட வேள்வி' என்ற தலைப்பில் எழுதியிருக்கிறோம். அங்கே வாசிக்கலாம். துரியோதனனால் ஏன் ராஜசூய யாகத்தைச் செய்ய முடியாமல் போனது என்பது, துரியோதனன் எப்போதுமே ஒரு இளவரசனாகக்கூட இருந்ததில்லை என்ற உண்மைக்கு அத்தாட்சி என்று இந்த நிகழ்வை விளக்கியிருக்கிறோம்.

பொன்னாலான கலப்பையைச் செய்து, ஏராளமான பொருட்செலவில் வைஷ்ணவப் பெருவேள்வி நடத்தப்பட்டது. துரியோதனன் எல்லா மன்னர்களுக்கும் தூதர்களை அனுப்பி அவர்களை வேள்விக்கு அழைத்தான். தலைகால் புரியாத காரியமாய் துச்சாதனன் இன்னொரு செயலையும் செய்தான். தான் நடத்தும் வேள்வியைப் பார்க்க வருமாறு பாண்டவர்களை அழைப்பதற்காக, துவைதவனத்துக்குத் தூதர்களை அனுப்பினான்! அவன் தூதர்களிடம் சொன்ன வார்த்தைகளைப் பாருங்கள்: "அந்தத் தூதர்களுள் புறப்படுகின்ற ஒரு தூதனைப் பார்த்து, துச்சாஸனன், அப்பொழுது, 'தூத! விரைவாக த்வைதவனத்திற்குப் போ. பாப புருஷர்களான (those wicked persons) பாண்டவர்களையும் அந்த வனத்தில் வஸிக்கிற பிராமணர்களையும் நியாயப்படி அழைப்பாயாக' என்று சொன்னான்." (வனபர்வம், கோஷயாத்ரா பர்வம் அத். 257, பக். 954) இதைக் கிஸாரி மோகன் கங்கூலி இப்படி மொழிபெயர்க்கிறார்: Then to a certain messenger on the point of setting out, Dussasana said, 'Go thou speedily to the woods of Dwaita; and in that forest duly invite the Brahmanas and those wicked persons, the Pandavas.'

நாட்டுக்குள்ளேயே வரக்கூடாது என்ற நிபந்தனையைக் கடைப்பிடித்து வனவாசம் மேற்கொண்டிருக்கும் அவர்களால் எப்படி வரமுடியும்! 'நான் வேள்வி நடத்துகிறேன் என்று தெரிந்துகொள். வயிற்றெரிச்சல் படு' என்ற மறைமுகமான செய்தியல்லவா அது!

தூதர்கள் தர்மபுத்திரரிடம் சென்று இந்தச் செய்தியைச் சொன்னார்கள். 'மிக்க மகிழ்ச்சி. நாங்கள் வனவாசத்திலிருப்பதால் வரமுடியாத நிலையிலிருக்கிறோம் என்று தெரிவி' என அவர் பதில் சொன்னார். அருகிலிருந்த பீமன் தூதனுக்குச் சொன்னான்: "தர்மங்களால் பிரகாசிக்கிற யுதிஷ்டிர ராஜர் அஸ்திரங்களாலும் சஸ்திரங்களாலும் எப்பொழுது அந்தத் துரியோதனனை ஜ்வலிக்கின்ற அக்நியில் விழும்படிச் செய்வாரோ அப்பொழுது வருவார். பாண்டு மைந்தனான யுதிஷ்டிர மகாராஜர் பதின்மூன்றாவது வர்ஷத்திற்குமேல் திருதராஷ்டிர புத்திரர்களிடமுள்ள கோபமாகிற ஹவிஸை எப்பொழுது யுத்தமாகிற யாகத்தில் ஹோமம் செய்கிறாரோ அப்பொழுது நாங்கள் வருவோம் என்று நீ அந்தத் துரியோதனனுக்குச் சொல்' என்று சொன்னான்." (மேற்படி அத்தியாயம், பக். 955).

தூதன் துரியோதனனிடத்தில் சென்று நடந்தவற்றையெல்லாம் சொன்னான். யாகம் நடந்து முடிந்தது. துரியோதனன் பெருமகிழ்ச்சியில் திளைத்தான். 'இது போதாது. பாண்டவர்கள் யுத்தத்தில் கொல்லப்பட்ட பிறகு, நீ ராஜசூய யாகத்தை நடத்தவேண்டும். அப்போது நான் உன்னைப் பூஜிப்பேன் என்றான் கர்ணன். 'நான் எப்போது அந்த யாகத்தைச் செய்வேனோ' என்றான் துரியோதனன். அப்போது கர்ணன் ஒரு சபதத்தைச் செய்கிறான். இந்தச் சபதத்தை கவனமாகப் பாருங்கள்:

"அப்பொழுது கர்ணன் அந்தத் துரியோதனனைப் பார்த்து, 'ராஜகுஞ்சர! என் சொல்லைக் கேள். அர்ஜுனன் கொல்லப்படுகிற வரையில் நான் கால்களை அலம்புகிறதில்லலை; மாம்ஸத்தைப் பக்ஷிக்கிறதில்லை; மதுவில்லாமல் உண்கிற விரதத்தைக் கைக்கொள்ளுவேன். எவனால் யாசிக்கப்பட்டாலும் நான் இல்லை என்கிற சொல்லைச் சொல்லமாட்டேன்' என்று சொன்னான்" (வனபர்வம், கோஷயாத்ரா பர்வம் அத். 258, பக். 957)

அதாவது இந்த சபதத்தின்படி கர்ணன், அர்ஜுனனைக் கொல்லும்வரையில் கால்களைக் கழுவுவதில்லை; மாமிசம் உண்பதில்லை; மது இல்லாமல் உண்கிற விரதத்தை மேற்கொண்டான். யார் வந்து யாசித்தாலும் இல்லை எனாது கொடுப்பேன் என்று சபதம் மேற்கொண்டான். 'எவனால் யாசிக்கப்பட்டாலும்' என்பது அந்த சபதத்தில் இடம்பெற்றிருக்கிற காரணத்தால்தான் 'இந்திரன் உன் கவச குண்டலங்களை யாசிக்க வருகிறான். கொடுக்காதே' என்று எச்சரித்த சூரியனுடைய வார்த்தைகளைக் கர்ணனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் கர்ணன் இந்திரனிடத்தில் நடத்தியது ஒரு பண்டமாற்று வியாபாரம்தானேயொழிய 'யாசகம்' என்ற வரைமுறைக்குள் அடங்காத ஒன்று. இன்னும் சில சம்பவங்களைப் பார்த்துவிட்டு அதற்கு வருவோம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com