சத்குரு: பூர்வகுடி வாழ்விடங்கள் வழியே ஒரு புனிதப் பயணம்
ஒரு நாட்டின் பாரம்பரியம் அதன் மக்கள்மீது தாக்கம் செலுத்துகிறதா? நூற்றாண்டுகளுக்கு முன்னர் மனிதர் பட்ட துயரங்கள் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாதிக்குமா? ஒரு சித்த புருஷரைத் தவிர வேறெவரும் இத்தகைய அசௌகரியமான கேள்விகளுக்கு விடைகாணத் துணிய மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்குத்தான் வாழ்க்கை மற்றும் இந்த உயிர்ப்புள்ள நிலக்கோளின் இயக்கத்தைப் பற்றிய ஆழ்ந்த புரிதல் உண்டு.

செப்டம்பர் 15, 2020 அன்று டென்னஸியின் மக்மின்வில் நகரிலிருந்து 6000 மைல் அதிசயப் பயணம் ஒன்றை சத்குரு தொடங்கினார். இந்த மோட்டர்சைக்கிள் பயணம் 15 மாநிலங்கள் வழியே செல்லும். இங்கு வசிக்கும் பூர்வகுடி இந்தியர்களின் இன்றைய வாழ்முறை, வரலாறு, கலாச்சாரம் ஆகியவற்றை சத்குரு நேரடியாகக் கண்ணுறுவார். 15ம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வருகை தொடங்கிய இன்றுவரையிலான அவர்கள் வாழ்க்கையை ஆராயும் இந்த நிகழ்வு 'Of Motorcycles and a Mystic' (மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஒரு சித்தர்) என்பதாக இருக்கும். இந்தப் பூர்வகுடியினர் அழிவையும் புலம்பெயர்தலையும் எதிர்கொண்ட இந்தக் காலகட்டத்தில், அமெரிக்கா புதியன படைத்தல், சாகஸம், வர்த்தகம் ஆகியவற்றின் நாற்றங்காலாக இருந்து உலகோரை வரவேற்றது. நாடு வசீகரமான வளர்ச்சியைக் கண்டது.



"இந்த நாடு என்னைக் கவரக் காரணம் அதன் அழகல்ல, அதன் துயரங்களே" என்று அமெரிக்காவுடனான தனது ஆழ்ந்த தொடர்பை சத்குரு வெளிப்படுத்தினார். "1999ல் நான் சென்டர் ஹில் லேக் பகுதியில் இருந்தபோது ஒரு கடுந்துன்பம் கொண்ட ஆத்மாவைச் சந்தித்தேன். இந்நாட்டின் பல பகுதிகளிலும் அப்படிப்பட்ட துயரம் இருப்பதைக் கண்டேன். இவற்றின் இருப்பை நாம் உணர்ந்தாலும் உணராவிட்டாலும், அவை மனித வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும். காரணமே இல்லாமல் சொல்லற்கரிய கஷ்டங்கள் ஏற்படும்" என்று விளக்கினார் சத்குரு. புராதனமான செரகீ நாட்டின் கம்பர்லாந்து பீடபூமியில் ஈஷா அக அறிவியல் மையத்தை சத்குரு தொடங்கினார். "மிகத் தாமதமாகத்தான், இதைக் 'கண்ணீர்த் தடம்' என்று சரித்திரத்தில் அழைக்கிறார்கள் என்பதை நான் அறியவந்தேன்" என்கிறார் சத்குரு.



அமெரிக்கப் பழங்குடியினரின் ஆதி கலாச்சாரத்துக்குள் மூழ்கி முத்தெடுக்கும் இந்தப் பயணம் செப்டம்பர் 15, 2020 அன்று தொடங்கி ஒரு மாத காலம் தொடரும். இந்தப் பிரபஞ்சமும் உலகமும் எல்லாப் பொருட்களையும், உயிர்களையும் ஈன்று புரக்கும் கருவறை என்கிற நம்பிக்கை உலகெங்கிலுமுள்ள பழங்குடிகளிடம் உண்டு. நிலத்தோடும், பஞ்சபூதங்களோடும், இயற்கைச் சக்திகளோடும் அவர்களுக்கு ஒரு நெருங்கிய பந்தம் உண்டு. அமெரிக்கப் பூர்வகுடிகளுக்கும் இந்திய மக்களுக்கும் இடையே உள்ள இப்படிப்பட்ட அடிப்படை நம்பிக்கைகளை சத்குரு ஆராய்வார்.



நீத்தாரை நினைக்கும் மிகப்புனித நாளான மஹாளய அமாவாசை அன்று சத்குரு இந்தப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். செரகீ பிரதேசம், கமஞ்சீ பகுதி, மிஸிஸிபி பாயும் இல்லினாய், மிசௌரி, நியூ மெக்சிகோ, கொலராடோ மாநிலங்கள் வழியே பயணித்து, அவர் டென்னசிக்குத் திரும்புவார். சத்குரு மொபைல் குறுஞ்செயலி (App) வழியே உலகெங்கிலும் உள்ளவர்கள் இந்த அற்புதப் பயணத்தைப் பின்தொடர முடியும்.



அமெரிக்க மக்கள்தொகைக் கணிப்பின்படி, அமெரிக்காவில் பூர்வகுடி அமெரிக்கர் மற்றும் பூர்வகுடி அலாஸ்கர்களின் சதவிகிதம், மொத்த மக்கள்தொகையில் 1.5%, அதாவது 4.5 மில்லியன் ஆவர்.

சமூக ஊடகங்களில் பின்தொடர:
ட்விட்டர் | இன்ஸ்டாகிராம் | முகநூல்

ஈஷா அமெரிக்கா:
ட்விட்டர் | இன்ஸ்டாகிராம் | முகநூல்

சத்குரு 3,500 சதுர மைல் பரப்பளவுள்ள க்ரோ நாட்டுக்குப் போனபோது, அங்கிருந்த பூர்வகுடி மருத்துவர் ஷான் ரியல் பேர்டு உடன் மொன்டானா நிலப்பகுதியை குதிரைமேல் சென்று பார்த்து ரசித்தார்.


செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com