அக்டோபர் 2020: வாசகர்கடிதம்
செப்டம்பர் 'தென்றல்' இதழில் துரியோதனனைத் தூக்கிச்சென்ற தைத்யர்கள் பற்றிய நிகழ்ச்சிகளை அற்புதமாகத் தொகுத்துக் கொடுத்துள்ளார் ஹரிகிருஷ்ணன். இந்த லாக் டவுன் காலத்தில் எழுத்துலகம், கலையுலகம் சேர்ந்த சிலரின் தீவிரச் செயல்பாட்டு விவரங்களைப் படித்து மிகவும் ஆச்சரியப்பட்டோம்.

கலிஃபோர்னியா மாவட்டம் 4-ன் பிரதிநிதியாக நகர்மன்ற உறுப்பினர் பதவிக்குக் கட்சி சார்பின்றிப் போட்டியிடும் நித்யா ராமன் அவர்களின் சிந்தனைகள், குறிக்கோள்கள், பணிகள், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள், செயல்கள் யாவற்றையும் சிறப்பாக நேர்காணலில் சொல்லியிருந்தார். அவர் வெற்றியடைய வாழ்த்துகிறோம்.

நாதஸ்வர தம்பதிகள் திருவண்ணாமலை பாலகணேசன், பாகேஸ்வரி பற்றியும், அவர்களின் யூட்யூப் சேனலைப் பற்றியும் படித்து, சேனலைப் பார்த்து மகிழ்ந்தோம். அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இளந்தென்றல் அனைத்து வயதினரும் படித்து மகிழும்படி அமைந்துள்ளது. 'தவியாய் தவிதவிப்பாய்' 'வீரம்' சிறுகதைகள் மனதைத் தொட்டன. எந்தச் சூழ்நிலையிலும் தென்றல் இதழை மிகச் சுவாரசியமாகத் தருவதற்கு நன்றி.

சசிரேகா சம்பத்குமார்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

© TamilOnline.com