வழக்கம் போல் இம்முறையும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, வாக்காளர்களின் விரல் மை அழிவதற்கு முன்பே, பதவியேற்ற சில நிமிடங்களில், தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை உதவி தேர்தல் அதிகாரியிடம் அளித்து மறுபடியும் நாடகம் ஒன்றை நடத்தி முடித்தார் கீரிப்பட்டி ஊராட்சி பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட அழகுமலை.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியிலுள்ள பாப்பாபட்டி, நாட்டார்மங்கலம், கீரிப்பட்டி ஆகிய மூன்று ஊராட்சிகளில் தலைவருக்கான தேர்தலை அப்பகுதி மக்கள் தொடர்ந்து புறக்கணிப்பதும், அப்படியே தேர்தல் நடந்தாலும் பதவி ஏற்ற மறுநிமிடமே வெற்றி பெற்றவர் பதவியை ராஜினாமா செய்வதும் வாடிக்கையாகிப் போய்விட்டது.
இப்பகுதிகளின் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவி தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை அப்பகுதியிலுள்ள ஒரு சமூகத்தவர் எதிர்ப்பதே இதற்குக் காரணமாகும்.
இம்முறையும் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது நாட்டார்மங்கலத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் முன்வராதது குறிப்பிடத்தக்கது. அங்கு தேர்தல் நடைபெறவில்லை. பாப்பாபட்டி ஊராட்சியில் தலித் மக்களின் இயக்கமாக செயல்படும் 'விடுதலைச் சிறுத்தை' அமைப்பின் சார்பாகப் போட்டியிட விண்ணப்பித்தவரின் திடீர் மரணத்தினால் அங்கும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
ஆனால் கீரிப்பட்டி ஊராட்சியில் மட்டும் தேர்தல் ஆணையம் அறிவித்த தேதியில் நடைபெற்றது. இங்கு ஊர் மக்களே தங்களுக்கான வேட்பாளராக அழகுமலையை தேர்வு செய்தனர். அதே சமயத்தில் திருமாவளவனின் 'விடுதலைச் சிறுத்தை' இயக்கத்தின் சார்பாகப் பூங்கொடி என்பவர் போட்டியிட்டார்.
தேர்தல் கமிஷன் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்து, முடிவை அறிவித்துச் சந்தோஷப்பட்டுக் கொண்ட வேளையில் அழகுமலை பதவியேற்ற சில நிமிடங்களிலேயே தன் பதவியை ராஜினாமா செய்து அதிர்ச்சி அளித்தார். இதற்கிடையில் விடுதலைச் சிறுத்தை இயக்கத்தின் வேட்பாளரான பூங்கொடிக்கு வாக்களித்ததாகக் கூறி அவ்வூரைச் சேர்ந்த 15 குடும்பத்தினரை கிராம மக்கள் ஒதுக்கிவைத்தது தீண்டாமைக் கொடுமையின் உச்சம்.
இரு சமூகத்தினரையும் உசிலம்பட்டி கோட்டாட்சியர் அழைத்துச் சமரசம் பேசியதையடுத்து இப்பிரச்சினை தீர்க்கப்பட்டது. மேலும் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இச்சம்பவத்தைத் தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகக் கண்டித்தது. சாதிவெறியர்களின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் வகையில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டகாச்சியேந்தல் ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் செயல்பட தொடங்கும் வரை மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு, வளச்சித் திட்டங்களை தமிழக அரசு ஏற்படுத்தி, தேர்தல் நடத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் ஒன்றையும் இயற்றியது.
தொகுப்பு: கேடிஸ்ரீ |