இடைத்தேர்தல் தந்த எச்சரிக்கை
இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த காஞ்சி, கும்மிடிப்பூண்டி இடைதேர்தலின் முடிவுகள் தமிழக எதிர்க்கட்சிகளுக்குப் பேரதிர்ச்சியைத் தந்துள்ளன.

சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக் காலமே உள்ள நிலையில் இந்த இடைத்தேர்தலை எந்தக் கட்சியும் விரும்பவில்லை. ஆனால் தேர்தல் ஆணையம் இடைத்தேர்லை நடத்த முடிவு எடுத்ததுமட்டுமல்லாமல், தேர்தலுக்கான தேதியையும் அறிவித்துவிட்டது.

காஞ்சிபுரத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசின் மனைவி மைதிலி திருநாவுக்கரசும், கும்மிடிப் பூண்டியில் மறைந்த முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரின் மகன் விஜயகுமாரும் வேட்பாளர்களாக அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டனர்.

எதிர்க்கட்சிக் கூட்டணியினர் தி.மு.க. நிறுத்தும் வேட்பாளர்களை ஆதரிப்பது என முடிவெடுத்தனர். காஞ்சியில் பி.எம். குமாரும், கும்மிடிப்பூண்டியில் வெங்கடாசலபதியும் வேட்பாளர்களாக நின்றனர். மத்திய அமைச்சர்கள் மற்றும் கூட்டணித் தலைவர்கள் என்று இடைத்தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்தது.

கூட்டணி ஏதுமின்றித் தனியாக அ.தி.மு.க. களம் இறங்கியது. கட்சியின் பொதுச் செயலரும், முதலமைச்சருமான ஜெயலலிதா தொடர்ந்து 6 நாட்கள் இரண்டு தொகுதிகளிலும் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டார்.

தேர்தலில் வன்முறை, கள்ளஓட்டு, விதிமீறல் போன்றவை நடைபெறுவதைத் தவிர்க்கத் தேர்தல் ஆணையம் கே.ஜே.ராவ் தலைமையில் சிறப்புத் தேர்தல் பார்வை யாளரை தமிழகம் அனுப்பியது. ஆங்காங்கு தொங்கும் பேனர்கள், கட்சிக் கொடிகள், போஸ்டர்கள் எல்லாவற்றுக்கும் ராவ் போட்டார் தடை. சம்பந்தமில்லா வெளியாட்கள் தொகுதிக்குள் நடமாடுவதைத் தடுத்தார். ஒரே நாளில் காஞ்சி, கும்மிடிப் பூண்டி மக்களின் ஹீரோவானார் ராவ்!

ஆரவாரமாக இருந்த தொகுதிகள் ராவின் வருகைக்குப் பின் அமைதிப் பூங்காவாக மாறின. வன்முறையில் ஈடுபடுபவர்களைப் பார்த்ததும் சுடுவதற்கு உத்தரவிட்டார். பொதுமக்கள் நிம்மதி அடைந்ததது மட்டுமல்லாமல் தேர்தல் நாளன்று பெருமளவில் வாக்களிக்கப் புறப்பட்டது இந்த நடவடிக்கைகளின் வெற்றி என்று சொல்லலாம்.

கருத்துக் கணிப்புகள் அத்தனையையும் முறியடித்து அ.தி.மு.க பெருவா¡ரியான வாக்குகளைப் பெற்று இரு தொகுதிகளையும் மறுபடியும் தக்க வைத்துக் கொண்டது.

''ஏழு கட்சிகளின் இறுமாப்பிற்குக் கொடுக்கப்பட்ட சம்மட்டி அடி இது'' என்று தனது வெற்றியை வர்ணித்தார் ஜெயலலிதா. மேலும் அவர் இதை, ''மக்கள் கூட்டணி தந்த வெற்றி'' என்றார்.

''பணத்தினால் கிடைத்த வெற்றி'' என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினாலும் மெகா கூட்டணியையும் மீறி அ.தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி எதிர்க்கட்சியினரை ரொம்ப யோசிக்க வைத்தது என்பது நிஜம்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com