(அத்தியாயம் - 10) அருண் வகுப்பில் 'எதனால் எனக்கு எதிராக எல்லோரும் இப்படி வேலை செய்கிறார்கள்?' என்று தனக்குள் புலம்பிக்கொண்டே இருந்தான். அவனுக்கு தனது பள்ளி பாதுகாவலர், கண்காணிப்பாளர் எல்லார் மீதும் கோபம் கோபமாக வந்தது.
மதிய உணவு வேளையில் சாரா அருணை சமாதானப்படுத்த முயன்றாள். அருண் அவளை உதாசீனப்படுத்தினான். காரணமே இல்லாமல் தன் நல்ல தோழி சாராவின்மீது எரிச்சல் படுகிறோமே என்று இருந்தது. அதிகப்பிரசங்கித் தனமாக நடந்துகொள்கிறோமோ என்றும் இருந்தது. தனது பள்ளித் தலைமை ஆசிரியைக்கும், வகுப்பு ஆசிரியைக்கும் கெட்ட பெயர் வாங்கி கொடுத்துவிட்டோமோ என்று தோன்றியது.
பள்ளிநேரம் முடிந்தபின் சாரா அருணுக்காகக் காத்திருந்தாள். அருண் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். "சாரா, இன்னிக்கு மதியம் உன்மேல காரணமே இல்லாம எரிச்சல் பட்டுட்டேன். சாரி."
"பரவால்ல. சகஜம்தான்."
"இல்லை, நான் பண்ணினது தப்பு. யார் மேலேயோ இருந்த கோபத்தை உன்மேல காட்டிட்டேன்."
"இதையெல்லாம் பெரிசு பண்ணுறயே? சீ அசடு."
இருவரும் மெல்ல நடந்தார்கள். "அருண், உன்னால் முடிஞ்சதை நீ பண்ணின, அவ்வளவுதான். அதுக்குமேல பெரியவங்க பாத்துக்குவாங்க. நாம நம்மளால முடிஞ்சதைப் பண்ணனும். Very simple philosophy."
"தேங்க்ஸ் சாரா. உன்னை மாதிரி ஒரு நல்ல நண்பி எனக்கு ஒரு வரப்பிரசாதம்."
"அருண், எனக்கும் இப்ப உன்கூட பழகிப் பழகி ராப்ளே என்கிற பெயரைக் கேட்டாலே திகிலாத்தான் இருக்கு. நான் கல்யாணம் பண்ணும்போது கூட ராப்ளேன்னு பெயர்கொண்ட ஆளைப் பார்த்தா நூறடி தூரம் ஓடிப் போய்ருவேன்" என்று ஜோக் அடித்தாள்.
அருண் கலகலவென்று சிரித்தான். "மிஸ் லேக் வந்திட்டாங்க பாரு. அம்மா எனக்காக காத்திட்டு இருக்காங்க" என்று சொல்லி சாரா விடைபெற்றாள்.
★★★★★
அன்றிரவு சாப்பிடும்போது அருண் பள்ளியில் அன்று நடந்ததைப்பற்றிச் சொன்னான். ரமேஷ் வீட்டில் இருந்தார். அவருக்கு அன்று இரவில் நல்லவேளையாக அலுவலக வேலை இல்லை.
கீதாவுக்கு முன்கூட்டியே விவரம் தெரியும், அவர் பதட்டமே இல்லாமல் கேட்டுக்கொண்டிருந்தார். ரமேஷுக்கோ கொஞ்சம் கொஞ்சமாகக் கோபம் ஏறியது. தன் மகன் பள்ளிக் கண்காணிப்பாளர் அளவுக்குப் போய்விட்டான் என்றதும் கீதாவை ஒரு முறை முறைத்தார். கீதாவுக்கும், இந்த அளவுக்கு அருண் செய்வான் என்று தெரியாது.
"அடுத்தது என்ன, இடைநீக்கம் தானே?" ரமேஷ் வெடித்தார். "அதிகப்பிரசங்கி. பெரிய லோக ரட்சகர்னு நினைப்பு."
"என்னங்க, கொஞ்சம் சத்தம் போடாம பொறுமையா இருக்கீங்களா?" கீதா கேட்டுப் பார்த்தார்.
"ஒரு நாளைக்கு மனுஷன் நிம்மதியா வீட்டில இருக்கக்கூடாது. சே, என்ன குழந்தைங்கடா இதுங்க. ராட்சஸ ஜன்மங்கள்." ரமேஷின் கோபம் நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டே போனது.
"அப்பா! அம்மா! நான் அப்படி பண்ணிருக்காட்டினா எங்க பள்ளிக்கூடத்துல நிறைய மாணவர்கள் அந்தத் தண்ணினால நோய்வாய்ப் பட்டிருக்கலாம். நான் எந்தத் தப்பும் பண்ணல."
"அருண், இந்தமாதிரிப் பெரியதனம் பண்ணுறத நிறுத்து. இல்லேன்னா நான் உன்னை ஒருவழி பண்ணிடுவேன்." சின்னப் பையனுக்குப் போட்டியாக ரமேஷ் மல்லுக்கட்டினார்.
"அப்பா, என்னால மத்தவங்க மாதிரி சும்மா கண்ண மூடிட்டு இருக்கமுடியாது. ஏதாவது தப்புன்னு பட்டா நான் அப்படித்தான் கேட்பேன்."
அருணின் எதிர்ப்பேச்சில் ரமேஷின் ரத்த அழுத்தம் எகிறியது.
"அம்மா, நீங்க கொஞ்சம் என் நண்பன் ரோவனோட அம்மாவுக்கு ஒரு ஃபோன் அடிக்கிறீங்களா இப்ப?" என்று அம்மாவைக் கேட்டான்.
"எதுக்கப்பா?"
"அவங்கதான் எங்க பள்ளிக்கூடத்தோட P.T.A. தலைவர். அவங்ககிட்ட சொன்னா அவங்க ஒரு உலுக்கு உலுக்கி உண்மையெல்லாம் வரவச்சிடுவாங்க."
ரமேஷ் எரிமலையானார். 'அருண், போதும். THAT IS ENOUGH! நிறுத்துன்னா நிறுத்தமாட்டே? எங்களை என்ன கோமாளின்னு நினைச்சியா, நீ என்ன செஞ்சாலும் சிரிச்சிட்டு போறதுக்கு? You are grounded, you disobedient boy. You are grounded. சாப்பாட்டுத் தட்டை சமையல் அறையில வச்சிட்டு, மேல போய் பல் விளக்கிட்டு படுத்துக்கப் போ. இனி ஒரு நிமிஷம் கூட நீ இங்க இருக்கக்கூடாது."
அருண் கப்சிப்பென்று அப்பா சொன்னபடி செய்தான்.
"கீதா, நீ முதல்ல பள்ளிக்கூடத்திலிருந்து ஏதாவது இ-மெயில் வந்திருங்கான்னு பாரு. ஏதாவது சஸ்பெண்டு பண்ணிருக்கப் போறாங்க."
கீதாவிற்கு அப்பொழுதுதான் அருணுக்கு மறுநாள் ஒரு களப்பயணம் (field visit) இருப்பது ஞாபகம் வந்தது. ஊரிலுள்ள ஒரு உணவு பதப்படுத்தும் கிடங்குக்குப் போகப்போகிறார்கள். அருண் அதைப்பற்றி மறந்தே போய்விட்டான். எங்கே இந்தச் சில நாட்களாக நடந்த அமளியில் அருணை நாளைக்கு வரக்கூடாது என்று சொல்லிவிடுவார்களோ என்று கீதா பயந்தார். அருணின் செய்கைகள் வம்பில் மாட்டிவிடக் கூடியவைதான்.
அருண் மாடிப்படி ஏறிப் போவதைப் பார்த்தார் கீதா. "அருண், நாளைக்கு உனக்கு ஃபீல்டு ட்ரிப், ஞாபகம் இருக்கா?' அருண் படியில் அப்படியே நின்றான். அவனுக்கும் அப்போதுதான் ஞாபகம் வந்நது.
"உன்னை இடைநீக்கம் பண்ணிருந்தா நாளைக்கு நீ போகமுடியாது. நான் மின்னஞ்சல் பாத்துட்டு சொல்றேன்."
"இல்லை அம்மா, என்ன சஸ்பெண்ட் பண்ண மாட்டாங்க. நிச்சயமாத் தெரியும்" என்று சொல்லிவிட்டு மாவீரன்போல மேலே படியேறினான்.
"அருண், படுத்துக்கறதுக்கு முன்னால நம்ப வீட்டு தபாலை எடுத்து வச்சிட்டுப் போ."
அருண் தடதடவென்று இறங்கித் தபால் எடுக்கப் போனான். வந்திருந்த கடிதங்களை ஒவ்வொன்றாக எடுக்கையில், தன் பெயருக்கு ஒரு கவர் வந்திருப்பதைப் பார்த்தான். அவன் இருதயம் சந்தோஷத்தில் டப்டப்பென்று அடித்தது. மற்ற கடிதங்களை அம்மாவிடம் கொடுத்துவிட்டு, மாடிக்கு ஓடினான். நெஞ்சு படபடக்க கடிதத்தைப் படித்தான்:
அன்புள்ள அருண், நாம் மீண்டும் கடிதத்தின் மூலமாகச் சந்திக்க வேண்டியதாகி விட்டது. அப்பப்பா... அசகாய சூரனப்பா நீ. என்ன துணிச்சல் இந்தச் சின்ன வயதில்! தண்ணீரின் திகட்டலான இனிப்புக்குக் காரணம் கண்டுபிடிக்காமல் விடமாட்டீங்கிறயே. அந்த டிம் ராப்ளே உன்கிட்ட போட்ட நாடகம் இருக்கே, அதுக்கு ஒரு ஆஸ்கார் விருதே கொடுக்கலாம். எல்லாம் அவருக்கு முன்கூட்டியே தெரியும். உங்க பள்ளிக்கூடத்துக்கு வரதுக்கு முன்னாடி அவர்தான் மெயின் குழாயை மூடி, பள்ளிக்குத் தண்ணி வராம இருக்க உத்தரவு இட்டாரு. நீ ஏதாவது வம்பு பண்ணுவேன்னு அவங்க அண்ணன் முன்னமே எச்சரிக்கை செஞ்சிட்டாரு. எல்லாம் ஒரு குட்டையில் ஊரின மட்டைங்கதானே. திமிர் பிடிச்ச பயலுக அவங்க அண்ணன் தம்பி இரண்டு பேருமே.
கவலைப்படாதே. இந்த தடவையும் அதிர்ஷ்ட தேவதை உன் பக்கம் இருக்கிறாள். நாளைக்கு நீ ஃபீல்டு ட்ரிப் போற இடத்துலதான் சமீபகாலமா விதியை மீறிக் குப்பையைக் கொட்றாங்க. அதனால நிலத்தடி நீர் மாசுபட ஆரம்பிச்சிருக்கு. உங்க பள்ளிக்கூடத் தண்ணீரின் திதிப்புச் சுவைக்கு அதுதான் காரணம். அந்த இடம் நம்ம ஹோர்ஷியானாவுக்குச் சொந்தமானது. இப்ப புரியுதா ஏன் பள்ளிக்கூடத்துல திடீர்னு தண்ணி நின்னு போச்சுன்னு?
நாளைக்கு நல்ல வேளையாக 'tree hugger' மிஸ் மெடோஸ் உங்ககூட வரப்போறாங்க. அவங்க உதவியை நாடு. ஞாபகம் இருக்கா, அந்த ஹில்லரிக்காக அவங்க உனக்குப் பண்ணின உதவி? எப்படியாவது அந்த உணவு பதப்படுத்தும் குடோன்ல நடக்கிற குப்பை டம்ப்பிங் எங்கேன்னு மிஸ் மெடோஸ் உதவியுடன் கண்டுபிடி. Good luck. (அந்த அண்ணன், தம்பி பசங்கள ஒரு வழி பண்ணிடு.)
இப்படிக்கு, என்றும் உன் அபிமானன்.
(தொடரும்)
ராஜேஷ் |