சுதாங்கன்
பத்திரிகையாளரும், எழுத்தாளருமான சுதாங்கன் (62) காலமானார். திருநெல்வேலி அருகே தென்திருப்பதியில், அக்டோபர் 4, 1958 அன்று பிறந்த இவரது இயற்பெயர் ரங்கராஜன். பிரபல எழுத்தாளர் பி.ஸ்ரீ. ஆச்சார்யாவின் மகள்வழி கொள்ளுப் பேரன் இவர். இளம் வயதிலிருந்தே எழுத்தார்வம் மிக்கவராக இருந்தார். பள்ளிப் பருவத்தில் 'வானவில்' என்ற கையெழுத்து இதழை நடத்தினார். பி.யூ.சி. முடித்தபின் பணிவாய்ப்பு தேடி சென்னை வந்தார். மாலன் ஆசிரியராக இருந்த 'திசைகள்' இதழில் சேர்ந்தார். இதழியல் நுணுக்கங்களின் அடிப்படைகளைப் பயின்றார். பின்னர் பல இதழ்களில் சுதந்திர இதழாளராக எழுதிவந்தார். 'ஜூனியர் விகடன்' இவருக்குப் பல வாசல்களைத் திறந்து விட்டது. 'இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம்' பாணியை அவ்விதழில் அறிமுகப்படுத்தினார். குற்றங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளை, துப்பறியும் உத்தியில் வாசகர்களிடம் கொண்டுசேர்த்தார். 1992வரை அவ்விதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய சுதாங்கன், அதன்பின் 'தினமணி கதிர்', 'தமிழன் எக்ஸ்பிரஸ்' உள்ளிட்ட பல இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

கால மாற்றத்திற்கேற்ப காட்சி ஊடகத்துக்கு மாறினார் சுதாங்கன். அரசியல் சார்ந்த பல நிகழ்ச்சிகளுக்கு நெறியாளராகவும், தொகுப்பாளராகவும், செய்தி ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார். பல அரசியல்வாதிகளுடன் நெருக்கமான நட்புக் கொண்டவர். 'ஸ்டேட்ஸ்மென்' இதழ் விருது பெற்றிருக்கும் இவர், திரைத்துறையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இயக்குநர் பாரதிராஜாவின் 'அந்திமந்தாரை' உள்ளிட்ட சில படங்களில் நடித்துமிருக்கிறார் சிறுகதை, நாவல், தொடர் என்று பல படைப்புகளைத் தந்திருக்கிறார். 'தேதியில்லாத டைரி', 'சுட்டாச்சு சுட்டாச்சு' போன்ற இவரது கட்டுரை நூல்கள் குறிப்பிடத் தகுந்தன. இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் காலமானார். ஒரே மகன் ஆகாஷ் துபாயில் வசிக்கிறார்.

கீழே விழுந்து, எலும்பு முறிவுக்குச் சிகிச்சை பெற்று வந்த சுதாங்கன், திடீர் மூச்சுத் திணறலால் காலமானார்.

© TamilOnline.com