பண்டிட் ஜஸ்ராஜ்
மூத்த ஹிந்துஸ்தானி பாடகரும், பாரம்பரிய இந்திய இசையின் பெருமையை வெளிநாடுகளில் பரப்பியவருமான பண்டிட் ஜஸ்ராஜ் (90), ஆகஸ்ட் மாதம், நியூஜெர்ஸியில் காலமானார். ஜனவரி 28, 1930 அன்று, ஹரியானாவில் பாரம்பரிய இசைக்குடும்பத்தில் பிறந்த ஜஸ்ராஜ், இளவயதிலேயே தந்தையை இழந்தார். மூத்த சகோதரர் பிரதாப் மற்றும் உறவினர்களால் ஆதரிக்கப்பெற்ற இவர், சிறு வயதிலேயே இசைத்துறைக்கு வந்துவிட்டார். ஆரம்பத்தில் அண்ணன் பிரதாப் மற்றும் மணிராமிடம் இசை பயின்றார். அவர்களூடன் இணைந்து கச்சேரி செய்தார். பின் சனந்தின் தாகூர் சாஹிப், மஹ்ராஜ் ஜெய்வந்த் சிங் போன்ற புகழ்பெற்ற பாடகர்களிடம் பயின்றார். அவர்களுடன் இணைந்து கச்சேரியில் பாடி, திறனை வளர்த்துக் கொண்டார்.

வானொலியில் ஹிந்துஸ்தானி இசை பாடிப் பரவலாக அறிமுகம் பெற்றார். வாய்ப்புகள் வந்தன. நாளடைவில், கச்சேரி செய்யாத நாளே இல்லை என்னுமளவிற்கு உழைத்தார். இயக்குநர் வி. சாந்தாராமின் மகளான மதுராவுடன் திருமணம் நிகழ்ந்தது.

உலகெங்கிலும் கச்சேரிகள் செய்திருக்கும் ஜஸ்ராஜிற்கு, உலக அளவில் சீடர்கள் உள்ளனர். இவர் பாடி நூற்றுக்கணக்கான ஆல்பங்கள் வெளியாகியிருக்கின்றன. ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் இவர் பாடிய 'வந்தே மாதரம்' ஆல்பப் பாடல் இவருக்குப் பெரும்புகழைத் தந்தது. 'மதுராஷ்டகம்' உள்ளிட்ட பல பாடல்களை மிக இனிமையாகப் பாடியிருக்கிறார். தபேலா வாசிப்பதிலும் இவர் தேர்ந்தவர். இவரது வாழ்க்கை, 'சங்கீத் மார்த்தாண்ட பண்டிட் ஜஸ்ராஜ்' என்ற பெயரில், ஃபிலிம்ஸ் டிவிஷன் தயாரிப்பில் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. அதனை, பண்டிட்டின் மனைவி மதுரா ஜஸ்ராஜ் இயக்கியிருக்கிறார்.

'சங்கீத சாம்ராட்', 'கலா ரத்னா', 'சங்கீத நாடக அகாடமி விருது, 'பத்மஸ்ரீ', 'பத்மபூஷண்,' 'பத்மவிபூஷண்' உள்ளிட்ட பல உயரிய விருதுகளைப் பெற்றவர். 80 வருடங்களாக இசைபரப்பிய இதயம், அமெரிக்காவில் ஓய்வு கொண்டது.

© TamilOnline.com