நீலகண்ட பிரம்மச்சாரி
(பகுதி-1)

ஒரு தீவிரவாதி வருகிறார்!
1912ம் ஆண்டு. பிப்ரவரி மாதத்தில் ஒருநாள். அந்த சிறைச்சாலை பரபரப்பாக இருந்தது. காரணம், மிகப்பெரிய தீவிரவாதி ஒருவர் கைதியாக அங்கு அழைத்து வரப்பட இருக்கிறார் என்பதுதான். அந்தச் சிறைச் சாலையில், கைதிகளை அடைக்கத் தனித்தனி அறைகள் கொண்ட பல தொகுப்புகள் இருந்தன. அந்தத் தீவிரவாதியை அடைத்து வைப்பதற்காகவே 21 வரிசைகள் கொண்ட ஒரு சிறைத்தொகுதி முழுக்கக் காலி செய்யப்பட்டது. முதல் பத்து அறைகளும், இறுதிப் பத்து அறைகளும் காலியாக விடப்பட்டு நடு அறை ஒன்றில் அவரைத் தனியாக அடைக்கத் திட்டமிட்டனர். காரணம், பயம். எங்கே அவர் பிற கைதிகளிடம் பேசி, அவர்களது மனதை மாற்றி, தனது புரட்சிப் படைக்குத் தயாராக்கி விடுவாரோ என்ற அச்சம். அதனால், அவரைத் தனிமைப்படுத்தத் திட்டமிட்டு இவ்வாறு செய்தனர்.

ஒல்லியான, கறுப்பு உருவம். அலட்சியமான முகத்தில் நீண்ட தாடி. எப்போதும் சிவந்திருக்கும் தீர்க்கமான கண்களுடன் சிறைச்சாலைக்கு அந்தத் தீவிரவாதி அழைத்து வரப்பட்டபோது சிறை அலுவலர்கள் மட்டுமல்லாமல், கைதிகளுக்குமே சற்று கலக்கமாகத்தான் இருந்தது. இப்படி எல்லாருமே கண்டு அஞ்சிய அந்தத் தீவிரவாதியின் பெயர், நீலகண்ட பிரம்மச்சாரி. அவருக்கு அப்போது வயது 23!

பிரிட்டிஷாரை அச்சுறுத்திய மாபெரும் புரட்சியாளராக இருந்து, தன் வாழ்வின் பல ஆண்டுகளைச் சிறையில் கழித்து, சொல்லொணாத் துயருற்று, பின் அகமலர்ந்து, எல்லாவற்றையும் துறந்து, துறவியாக முகிழ்த்தவர் நீலகண்ட பிரம்மச்சாரி. 'பிரம்மச்சாரி', 'சாது ஓம்கார்' ஆன கதை, அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

இளமை எனும் பூங்காற்று
சீர்காழி மாவட்டத்தில் ஒரு சிற்றூர் எருக்கூர். இவ்வூரில் வாழ்ந்து வந்த சிவராமகிருஷ்ணன் - சுப்புத்தாயி இணையருக்கு, டிசம்பர் 4, 1889 அன்று, மூத்த மகனாகப் பிறந்தார் நீலகண்டன். தந்தைக்கு வைதீகம் தொழில். நீலகண்டனுக்குப் பின் இரண்டு தம்பிகளும், ஐந்து தங்கைகளும் பிறந்தனர். குடும்பம் வறுமையில் தத்தளித்தது. சமயத்தில் தண்ணீரையே உணவாக உட்கொள்ள வேண்டிய அளவுக்கு வறுமை. உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார் நீலகண்டன். பின் சீர்காழியில் உயர்நிலைப் பள்ளியில் கற்றார். நான்காவது ஃபாரம் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒருநாள் ஏதோ தோன்ற, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறினார். பல இடங்களிலும் அலைந்து திரிந்தார். பின் திருவனந்தபுரம் சென்றார். அங்கு 'ஊட்டுப்புறை' என்ற பெயரில் அன்ன சத்திரங்கள் இருந்தன. அவை ஏழைகளுக்குத் தங்க இடமும், உண்ண உணவும் இலவசமாக அளிக்கும் நோக்கத்தில் மன்னர்களாலும், செல்வந்தர்களாலும் அமைக்கப்பட்டவை. ஊட்டுப்புறை ஒன்றில் சில மாதங்கள் தங்கிய நீலகண்டன், பின் வேலை தேடிச் சென்னைக்குச் சென்றார்.

திருவல்லிக்கேணியில் கூட்டுறவு சங்கம் ஒன்றில் அவருக்கு வேலை கிடைத்தது. நீலகண்டனுக்கு பார்ப்பவரை ஈர்க்கும் முகம். சிறந்த பேச்சுத்திறனும் இருந்தது. நாளடைவில், தனது திறமையால் கூட்டுறவு சங்கத்தின் முகவராக உயர்ந்தார். தினந்தோறும் வியாபார நிமித்தமாக புதிய மனிதர்களைச் சந்திப்பதும், உரையாடுவதும், பேரம் பேசுவதும் அவரது வழக்கமானது. இது மனிதர்களின் உளவியலைப் புரிந்து கொள்ளவும், அவர்களது பலம் மற்றும் பலவீனங்களை அறிந்துகொள்ளவும் அவருக்கு வாய்ப்பானது.

சுதேசமித்திரன், இந்தியா போன்ற இதழ்களைத் தவறாமல் வாசிப்பார் நீலகண்டன். அதில் வெளியாகும் பாரதியாரின் கட்டுரைகளை வாசிக்க வாசிக்க அவருள் சுதந்திர தாகம் சுடர்விட்டது. கர்சனின் வங்கப் பிரிவினையால் நாடெங்கும் கிளர்ச்சியும், சுதந்திர விழிப்புணர்வும் தோன்றியிருந்த காலம் அது. சுதந்திர உணர்வு நீலகண்டனுள் வேரூன்றியது.

லால், பால், பால்



லால்-பால்-பால்
அக்காலகட்டத்தில் தங்களது பேச்சின் மூலம் நாடெங்கும் சுதந்திரக் கனலை மூட்டியவர்களில் முக்கியமான மூவர் லால், பால், பால் ஆகியோர். (லால் - லாலா லஜபதி ராய்; பால் - பாலகங்காதர திலகர்; பால் - விபின் சந்திரபால்). பாரதி, வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுரேந்திரநாத் ஆர்யா, மண்டயம் திருமலாச்சாரி, ஸ்ரீநிவாசாச்சாரி உள்ளிட்ட பலரும் சுதந்திரம் பெறுவதற்குத் திலகரின் வழியையே சிறந்ததாகக் கருதினர். விபின் சந்திரபாலின் அழைப்பை ஏற்று பாரதியார், 1906ல், கல்கத்தாவில் நிகழ்ந்த காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றார். அதன்பின் பாரதியார், சுரேந்திரநாத் ஆர்யா, வ.உ. சிதம்பரம் பிள்ளை போன்றோர் இணைந்து, சென்னையில் 'சென்னை ஜன சங்கம்' என்ற அமைப்பை ஏற்படுத்தினர். மாதந்தோறும் பல கூட்டங்களை நடத்தினர். அவற்றில் கலந்துகொண்டார் நீலகண்டன்.

விபின் சந்திரபால்
'பால பாரத சங்கம்' என்ற அமைப்பு, தமிழகத்தில் விபின் சந்திரபாலின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்தது. பாரதியார் அந்நிகழ்வின் வரவேற்பாளர். விபின் சந்திரபாலின் முதல் கூட்டம் மே 1, 1907 அன்று சென்னை கடற்கரையில் நடந்தது. ஆயிரக்கணக்கானோர் சொற்பொழிவில் கலந்துகொண்டனர். குறிப்பாக இளைஞர்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் அதற்குத் திரளாகக் வந்தனர். நீலகண்டனும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றார். முதல் நாள் சொற்பொழிவைக் கேட்ட அவரது உள்ளத்தில் இந்த நாட்டின் விடுதலைக்கு உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும் என்று தோன்றியது. விபின் சந்திரபாலைத் தனிமையில் சந்தித்துப் பேச ஆவல் கொண்டார். அதற்காக முயன்றார். மறுநாளே அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. விபின் சந்திரபாலின் செயலாளர் குஞ்சு பானர்ஜி சுதந்திர தாகமுள்ள, தேர்ந்தெடுத்த இளைஞர்கள் சிலருக்குப் பாலுடன் தனிமையில் பேச அனுமதித்தார். அவர்களில் நீலகண்டனும் ஒருவர்.

விபின் சந்திரபால், நீலகண்டன் உள்ளிட்ட இளைஞர்களிடம் நாட்டின் விடுதலையின் முக்கியத்துவம் பற்றியும், அதனைப் பெறுவதற்குத் தீவிரமான வழிகளில் செய்யவேண்டிய முயற்சிகள் பற்றியும், அதற்காக ரகசியங்கள் காக்கும் குழுவாக இயங்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் சுருக்கமாக எடுத்துரைத்தார். அது நீலகண்டனின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தது.

விபின் சந்திரபாலின் கூட்டம் மூன்று நாள் மட்டுமே நடந்தது. காரணம், அப்போதைய கவர்னர் சர் ஆர்தர் லாலிக்கு இந்தத் திரளான கூட்டம் உவப்பானதாக இருக்கவில்லை. மக்கள் புரட்சி வந்துவிடுமோ என்று பயந்துபோன அவர், விபின் சந்திரபால் பேசப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். ஆனால், 'இப்படித்தான் பேச வேண்டும்; அப்படிப் பேசக்கூடாது' என்றெல்லாம் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விபின் சந்திரபால் ஏற்கவில்லை. சுதந்திர உணர்வைப் பேசத் தடையாக இருக்கும் அந்தக் கட்டுப்பாடுகளைப் புறக்கணித்து, அவர் தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டுக் கல்கத்தா திரும்பினார். பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறையால்தான் இது நிகழ்ந்தது என அறிந்து இளைஞர்கள் பலரும் கோபப்பட்டனர். நீலகண்டனுக்கோ சொல்லமுடியாத கோபம்.

நீலகண்டன் தினமும் மாலையில் தனது வேலை முடிந்ததும் 'இந்தியா' அலுவலகத்துக்குப் போவார். அங்கு பாரதி, வ.,உ.சி. போன்றோரும், இளைஞர்கள் பலரும் பேசிக் கொண்டிருப்பர். நீலகண்டனும் அதில் கலந்து கொள்வார். ஓய்வு நேரத்தில் அடிக்கடி 'இந்தியா' அலுவலகம் செல்வதும், அங்கு பாரதிக்கு உதவியாகச் சிறு சிறு பணிகளைச் செய்வதும் நீலகண்டனின் வழக்கமானது. நாளடைவில் பாரதியின் உற்ற தோழர்களுள் ஒருவரானார். பாரதி மூலம் பல சுதந்திர வீரர்களின் அறிமுகமும் நீலகண்டனுக்குக் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்
வ.உ. சிதம்பரம் பிள்ளை, பிரிட்டிஷாரை எதிர்த்து, தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கியிருந்தார். அதனை விரிவுபடுத்தி, அதன் பலனும், லாபமும் பலருக்கும் கிடைக்கும்படி அதனை ஒரு பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக மாற்றும் முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அதற்காக தனது "சுதேசி கப்பல் சங்கம்" (சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி) என்ற அமைப்பின் மூலம் பங்குகளை விற்பது, நிதி திரட்டுவது என்று பல்வேறு பணிகளைச் செய்து வந்தார். அதன் பங்குகளை விற்றுத்தர சரியான ஆள் நீலகண்டன்தான் என பாரதியார், சிதம்பரம் பிள்ளைக்குப் பரிந்துரைத்தார். சிதம்பரம் பிள்ளை சூரத் மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியதும் இதைப்பற்றிப் பேசலாம் என்று நீலகண்டனுக்கு உறுதி கொடுத்தார்.

தன் வேலையில் பல்வேறு வகையில் மனச்சலிப்புற்றிருந்த நீலகண்டன், வ.உ.சி.யின் வாக்கை ஏற்றுக் கொண்டார். தனது பணியை ராஜினாமா செய்தார். புதிய வேலையை ஏற்கத் தயாரானார்.

திருப்புமுனையான சந்திப்பு
இந்நிலையில் ஒருநாள் பாரதியாரைச் சந்திக்க 'இந்தியா' அலுவலகம் சென்றார் நீலகண்டன். அங்கே அவருடன் அமர்ந்து இளைஞர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். பாரதியார் அவரை நீலகண்டனுக்கு அறிமுகம் செய்துவைத்தார். சந்திரகாந்த் சக்ரபர்த்தி என்னும் அவர் விபின் சந்திரபாலின் குழுவைச் சேர்ந்தவர். ஜெர்மனியில் செண்பகராமன் பிள்ளையுடன் இணைந்து பாரத தேசத்தின் விடுதலைக்காக உழைத்துக் கொண்டிருந்தார். செண்பகராமன் பிள்ளை, ஜெர்மனியில் ஏற்படுத்திய 'இந்திய தேசிய கட்சி'யில், சக்ரபர்த்தியும் ஓர் உறுப்பினர். ((பிற்காலத்தில், முதலாம் உலகப் போரின் போது சென்னைக்கு 'எம்டன்' என்ற கப்பலில் வந்து குண்டு வீசினார் செண்பகராமன் பிள்ளை. அந்த நிகழ்வுக்கான ஆலோசகர்களில் சந்திரகாந்த் சக்ரபர்த்தியும் ஒருவராக இருந்தார்)

சென்னையில், டாக்டர் நஞ்சுண்டராவின் இல்லத்தில் சந்திரகாந்த் தங்கியிருந்தார். சுதந்திர தாகம் கொண்ட இளைஞர்களை ஒருங்கிணைப்பதற்காகவே தாம் கல்கத்தாவில் இருந்து வந்திருப்பதாக நீலகண்டனிடம், சந்திரகாந்த் தெரிவித்தார். இருவரும் தனிமையில் பலமணி நேரம் உரையாடினர்.

இந்தியா பத்திரிகை மற்றும் பாரதியை ஆசிரியராகக் கொண்ட பால பாரதா



புரட்சிக்கான விதை
சந்திரகாந்த் நீலகண்டனிடம் தங்கள் திட்டங்கள்பற்றி விரிவாக எடுத்துரைத்தார். 1857ல் நிகழ்ந்த சிப்பாய்க் கலகம் போன்று, இந்தியா முழுவதும் ஒரே சமயத்தில் ஏற்படும் வகையில் ஒரு புரட்சிக்கு வித்திட்டிருப்பதாகவும், அதற்கான ரகசிய ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இம்முயற்சியில் பரோடா மன்னர் ஸாயாஜிராவ், அரவிந்த கோஷ் உள்ளிட்ட பலர் பல்லாண்டுகளாகவே ரகசியமாக ஈடுபட்டு வருவதாகவும், ஜெர்மன் நாட்டின் அதிபர் கெய்ஸர் வில், இதற்கு உதவுவதாக வாக்களித்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்த முயற்சி ஒவ்வொரு மாகாணத்திலும் ரகசியமாக நடைபெற்று வருவதாகவும், தமிழ்நாட்டிலும் அப்படி ஒரு ரகசிய சங்கம் அமைக்க வேண்டியே தான் வந்திருப்பதாகவும், அதற்கு நீலகண்டன் உதவியாக இருப்பார் என்று நம்புவதாகவும் சொன்னார் சந்திரகாந்த் சக்ரபர்த்தி.

மேலும் அவர், "பரோடா மன்னர் தம்மைப் போலவே தேசபக்தி கொண்ட இதர சுதேச மன்னர்களுடனும், இந்திய அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சில அரசியல் தலைவர்களுடனும் இது குறித்து விவாதித்து வருகிறார். தென்னிந்தியாவில் உள்ள பாளையக்காரர்கள் போன்ற தேசபக்தி மிக்க வீரர்களையும் இத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்பது அவர்களில் பலரது எண்ணம். அந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகவே நான் வந்திருக்கிறேன்." என்றார். கேட்கக் கேட்க வியப்பும், சுதந்திரக்கனலும் சுடர்விட்டது நீலகண்டனின் உள்ளத்தில்.

"ஆயுதங்கள் நமக்கு ஜெர்மனிமூலம் வந்து சேரும். நமது வேலை தேசப்பற்றும், தியாக உணர்ச்சியுமுள்ள வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரகசியப் பயிற்சி அளித்து ஒரு பெரும்படையை உருவாக்குவதுதான். இதை வெகு ரகசியமாகச் செய்யவேண்டும். ஒட்டுமொத்தமாக இந்தியா முழுமையும் பிரிட்டிஷாரை எதிர்க்கும் இந்தப் போரில் பலவிதங்களில் நமக்கு ஜெர்மனி உதவிகரமாக இருக்கும். அந்த வெற்றிக்குப் பிறகு அமையும் புதிய இந்திய அரசிற்கு, ஜெர்மன் முழுமையாகத் தனது ஆதரவை வழங்கவும் உறுதி அளித்துள்ளது" என்றார்.

19 வயது நீலகண்டனுக்கு சக்ரபர்த்தியின் வார்த்தைகள் மிகுந்த உத்வேகத்தைத் தந்தன. அவருள் சுதந்திர இந்தியாவைப் பற்றிய கனவுகள் விரிந்தன. சிதம்பரம் பிள்ளைக்கு, சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் பங்குகளை விற்றுத் தருவதாகச் சொன்ன வாக்கு மறந்தது; தனது முதிய பெற்றோரை மறந்தார். திருமணத்திற்குக் காத்திருக்கும் தங்கைகளை மறந்தார். சுதந்திர பாரதம் ஒன்றே அவருக்கு முக்கியமானது. உடனே சந்திரகாந்த் சக்ரபர்த்தியிடம், தான் அனைத்திற்கும் தயாராக இருப்பதாகவும், இயக்கத்திற்காக, நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக உழைக்கத் தன்னையே அர்ப்பணிக்கத் தயாராக இருப்பதாகவும் கண்கள் பனிக்க, உணர்ச்சி பொங்கச் சொன்னார்.

சந்திரகாந்த் சக்ரபர்த்தியும் அதனை ஏற்றுக்கொண்டார்.

ரகசிய சங்கம்
இருவரும் தினந்தோறும் தனிமையில் சந்தித்து உரையாடினர். ரகசிய சங்கத்திற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

"நீலகண்டன் தென்னாடெங்கும் ஊர் ஊராகப் பயணம் செய்ய வேண்டும். ஊர்தோறும் பொதுக்கூட்டம் கூட்டிப் பேசவேண்டும். சாதாரண தேசபக்தர்போல அவர்களிடம் உரையாட வேண்டும். அங்கு அவருக்கு அறிமுகமாகும் ஆர்வமும் துணிவும் கொண்ட நண்பர்களில், தீவிரமானவர்களும் துணிவுள்ளவர்களும் தியாகத்துக்குத் தயாராக இருப்பவர்களும் யார் என்பதைக் கண்டறிய வேண்டும். அவர்களைப் பலவிதத்திலும் பரிசோதித்து, நெருங்கிய நட்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களிலிருந்தே புரட்சிக்குத் தயாராக, தங்கள் உயிர்பற்றிய அக்கறை இல்லாதவர்களாக, தேச விடுதலைக்காக எந்தத் துன்பத்தையும் தாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கும் நண்பர்களைக் கண்டறிந்து அவர்களை ரகசிய சங்கத்தின் உறுப்பினராக்க வேண்டும்.

ரகசிய சங்கத்தில் யார் யார் இருக்கிறார்கள் என்பதும், எந்தெந்த ஊரில் யார், யார் சேர்க்கப்படுகின்றனர் என்பதும் நீலகண்டனைத் தவிர மற்ற யாருக்கும் - உட்குழு அங்கத்தினர்களுக்கும் கூட - தெரியக்கூடாது. இவர்களுக்கும் தலைவருக்குமிடையே நடக்கும் பேச்சுகளும் செயல்பாடுகளும் மிகவும் ரகசியமாக வைத்திருக்கப்பட வேண்டும்.

இவ்வாறு உருவாக்கப்படும் நபர்களுடன் தலைவர் (நீலகண்டன்) நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கவேண்டும். அவர்களுடன் கூடுமானவரை ஆள்மூலமாகவே தொடர்பு கொள்ளவேண்டும். தபாலை உபயோகிக்க நேர்ந்தால், வேறு வேறு மாற்றுப் பெயர்களையும், பரிபாஷைகளையும் உபயோகிக்க வேண்டும். சான்றாக, 'கைத்துப்பாக்கி' என்பதற்குப் பதிலாக 'லட்டு' என்று குறிக்கலாம். 'ஆயுதம்' என்பதற்குப் பதிலாக, வேறு யாராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியாத ரகசிய வார்த்தைகளைப் பயன்படுத்தலாம். எப்படியும் ரகசியம் காக்கப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் கல்கத்தாவிலுள்ள குறிப்பிட்ட சில புரட்சித் தலைவர்களுடன் இடையறாத தொடர்பு கொண்டிருக்கவேண்டும். அவர்களைத் தொடர்பு கொண்டு, அவர்கள் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும்"

மேற்கூறியவைதாம் ரகசிய சங்கத்தின் விதிகள் என்று எடுத்துரைத்தார் சந்திரகாந்த். ஒப்புக்கொண்டார் நீலகண்டன். வந்த காரியம் முடிந்த திருப்தியுடன் புறப்பட்டுச் சென்றார் சந்திரகாந்த் சக்ரபர்த்தி.

புரட்சி வீரர்
சந்திரசகாந்த் சக்ரவர்த்தியைச் சந்தித்த நாளிலிருந்து முழுமையாக மாறிப்போனார் நீலகண்டன். அதுநாள்வரை அவர் வைத்துக் கொண்டிருந்த குடுமி கழிந்தது. 'க்ராப்' வைத்துக் கொண்டார். அந்தக் காலத்தில், அதுவும் பிராமண சமூகத்தில் பிறந்த நீலகண்டன் சிகையைத் துறந்து க்ராப் வைத்துக்கொண்டது ஒரு புரட்சியாகவே பார்க்கப்பட்டது. ஆனால், அதுவே நீலகண்டனுக்கு பிரச்சனையுமானது. அவர் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மதம் மாறிவிட்டாரா என்று கேட்டுக் கிண்டல் செய்தனர். ஒதுக்கினர். பிற சமூகத்தினரோ, 'தங்களையும் இவன் மாற்றி விடுவானோ' என்றஞ்சி, அவருடன் பழகுவதைத் தவிர்த்தனர். ஹோட்டல்களில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், இந்த எதிர்ப்புகளைப் பற்றிக் கவலை கொள்ளாமல் புரட்சி நடவடிக்கையைத் தொடர்ந்தார் நீலகண்டன்.

முதன்முதலாகத் தனது புரட்சி நடவடிக்கைகளை விரிவாக்கும் பொருட்டு தூத்துக்குடிக்கு அவர் கிளம்பினார்.

(தொடரும்)

பா.சு.ரமணன்

© TamilOnline.com