ஸ்ரீ தாத்திரீஸ்வரர் திருக்கோயில்
தமிழ்நாட்டில், சென்னை புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சித்துக்காடு வழியாக பட்டாபிராம்வரை பேருந்துகள் செல்கின்றன. மின்சார ரயில் மூலம் சென்றால் பட்டாபிராமில் இறங்கி ஆட்டோ அல்லது பேருந்து மூலம் 4 கி.மீ. சென்று, சிறிது நடந்து கோவிலை அடையலாம்.

இறைவன் நாமம் ஸ்ரீ தாத்திரீஸ்வரர். அம்பாளின் நாமம் பிரசூன குந்தளாம்பிகை என்கிற பூங்குழலி. இங்குள்ள பூந்தோட்டத்தில் அம்மன் சிலை கிடைக்கப்பெற்றது. தாத்திரீஸ்வரர் என்கிற நெல்லியப்பர் என்பது சிவனின் திருநாமம். சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் மதுரையை ஆண்ட சுந்தரபாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்டது இவ்வாலயம் என்பது கல்வெட்டுச் செய்தி.

கோயில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி உள்ளது. சுவாமி கிழக்கு முகமாகவும், அம்பிகை தெற்கு முகமாகவும் அமர்ந்ள்ளனர். கோவிலின் தெற்கே அழகிய திருக்குளம் அமைந்துள்ளது. இக்கோயில் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபாட்டுத் தலமாக போற்றப்படுகிறது.



சுவாதி என்னும் சொல்லில் சிவ, விஷ்ணு ஐக்கிய ஸ்வரூப சக்திகள் நிறைந்துள்ளன. அந்த நாளில் சிவ, விஷ்ணு மூர்த்திகள் அருளும் சித்துக்காடு தளத்தில் வழிபடுதல் மிக விசேஷமாகக் கருதப்படுகிறது. இந்நாளில் பூவுலகில் யோக சக்திகள் மிகுந்திருப்பதால், அன்று முழு நெல்லிக்கனிச் சாற்றினால் சுவாமிக்கு அபிஷேகமும், அம்பிகைக்குப் பாலபிஷேகமும் செய்வது சிறப்பு. இதனால் திருமணப் பிராப்தம் ஆண், பெண் இருபாலருக்கும் கை கூடுகிறது. நெல்லிச் சாற்றை அபிஷேகம் செய்வதால் தீராத நரம்பு சம்பந்தமான நோய்கள், இதய பாதிப்பு, கடன் தொல்லை தீரும் என்பது ஐதீகம்.

இத்தலத்தில் செல்வத்தைத் தரும் குபேரன் வந்து வழிபட்டுள்ளார். குபேரன், தனது வலதுகாலின் கட்டை விரலை மட்டுமே ஊன்றி நின்று பல்லாயிரம் ஆண்டுகள் சுபசரண கரண யோக தவமிருந்து, நாகலிங்கப் பூவினால் பூஜித்து நெல்லிக்கனிச் சாற்றை அபிஷேகம் செய்து சிவனின் அருளைப் பெற்றார்.



கோயிலின் இரண்டு விதானங்கள் சிறப்பானவை. ராஜகோபுரத்தின் நுழைவாயில் வழியாக வந்தால் மேல் விதானத்தில் கோயிலுள் இருக்கும் சிவனின் திருக்கோலங்கள் மிக அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. அம்பிகை, சுவாமி சன்னதி விதானங்களில் அஷ்டதிக் பாலகர்கள், மகாவிஷ்ணு, விநாயகர், பிரம்மன், முருகன், பைரவர், தேவேந்திரன், தங்கள் வாகனங்களுடன் இருப்பது சிறப்பாக உள்ளது.

கோயிலில் வீரபத்திரர், உள்பிரகாரத்தில் லக்ஷ்மி, சரஸ்வதி, ஆதிசங்கரர், காரைக்கால் அம்மையார் சிலைகள் உள்ளன. விழாக்காலங்களில் ராஜகோபுரத்தின் நேரெதிரே உள்ள விநாயகர் சன்னதியில் முதல் தீபாராதனை நடைபெறுகிறது. அங்கப் பிரதிட்சண யோகசக்தி நிறைந்தது இத்தலம். பிரதோஷ கால பூஜை, நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை, சிவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம், அம்பாள், சுவாமி திருக்கல்யாணம் வீதி உலா போன்ற வைபவங்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. காரைக்கால் அம்மையார் ஜெயந்தி பூஜை சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறுகிறது. சைவ, வைணவ ஒற்றுமைக்கேற்ப தசாவதார சிற்பங்கள் கோயிலினுள் செதுக்கப்பட்டுள்ளன. ஜடாமுடிச் சித்தர் உருவைத் தூணில் நின்றகோலத்திலும், ஸ்ரீ பிராணதீபிகா சித்தர் உருவை அமர்ந்தநிலையிலும் காணலாம். இங்குள்ள சித்த புருஷர்கள், தினந்தோறும் சிவபெருமானைத் தொழுது ஆராதிப்பதைப் பல பக்தர்கள் கண்கூடாகப் பார்த்துப் பரவசம் அடைந்துள்ளனர்.

சீதாதுரைராஜ்,
சான்ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com