ஒட்டாமல் ஓர் ஒட்டுதல்
அன்புள்ள சிநேகிதியே,
எனக்கு சமீபத்தில் ஏற்பட்ட மனவருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த ஆறு மாதத்தில் எங்களுக்கு அப்படி ஒரு சோதனை. எங்கள் இருவருக்கும் வேலை போய்விட்டது. இந்தியாவில் குடும்பத்தினருக்கும் உதவமுடியாத நிலை. ஏதோ இருப்பதை வைத்துக்கொண்டு கௌரவமாக வாழ்கிறோம். இதற்கிடையில் என் பெண்ணுக்குக் குழந்தை பிறந்தது. மருத்துவச்செலவு இல்லை என்றாலும், அவர்கள் இருவரும் எங்களுடன் மூன்று, நான்கு மாதம் தங்கிய பிறகு ஓர் அப்பார்ட்மெண்ட் பார்த்துக்கொண்டார்கள். ஏன் இப்படிப் பேரன் பிறந்ததற்குக்கூட ஆர்வம் காட்டாமல் எழுதுகிறேன் என்றால், எங்களுக்கு விருப்பமில்லாமல் திடீரென்று போன வருடம் திருமணம் செய்துகொண்டாள். ஒரு நல்ல வேலையும் இல்லை. அந்தப் பையன் எங்களைவிட மிகச் சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்தவன். இந்தியன் இல்லை. அப்பா போலந்துக்காரர். அம்மா மெக்சிகன். இருவரும் பிரிந்துவிட்டார்கள். கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு வேலை பார்க்க ஆரம்பித்தான். இவர்கள் இருவரும் நன்றாகப் படித்தவர்கள். நானும் என் கணவரும், 'என்ன அவசரம் 2-3 வருடங்கள் தள்ளிப் போடுங்கள்' என்று சொன்னோம். கேட்கவில்லை. பத்தாவது மாதம் குழந்தை! எங்களுக்கு இருக்கும் கஷ்டத்தில் இவர்களை வேறு பார்த்துக்கொள்ள வேண்டும். எங்களுக்கு இன்னொரு பெண் - இவளைவிட இரண்டு வயது சிறியவள் - இந்த கோவிட் சூழலில் என் தங்கை குடும்பத்தினருடன் தங்கிக் கொண்டிருக்கிறாள். அவளால் இங்கே வர முடியவில்லை. அவளைப்பற்றிக் கவலை இல்லை. பொறுப்பானவள். இதையெல்லாம் எதற்கு எழுதுகிறேன் என்றால், குழந்தை பிறந்து இப்போது இரண்டு மாதங்களாக என் பெண் வேலைக்குப் போக ஆரம்பித்திருக்கிறாள். குழந்தையை நாங்கள்தான் பார்த்துக் கொள்கிறோம். அதனால் எனக்குப் பார்ட் டைம் வேலைகூடப் பார்த்துக்கொள்ள முடியவில்லை. பேரனுடன் கொஞ்சுவது நன்றாக இருக்கிறது. ஆனால் பார்த்துக்கொள்வது சிரமமாக இருக்கிறது. போன வெள்ளிக்கிழமை சமைக்க நேரம் இல்லாமல் 'பிட்ஸா' ஆர்டர் செய்தேன். என் பெண் வேலை முடிந்து வரும்வழியில் பிக்கப் பண்ணச் சொல்லியிருந்தேன். அந்த இடத்திலிருந்து கூப்பிடுகிறாள், என் கிரெடிட் கார்டு நம்பரை கேட்டு! என்னிடம் கிரெடிட் கார்டு இல்லை. கேன்சல் செய்துவிட்டேன். என் கணவர் வீட்டில் இல்லை. ஆகவே, அவளை பணம் கொடுக்கச் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் பணம் கொடுத்தேன். எனக்குப் பெரிய அதிர்ச்சி. மாதம் இவளுக்கு $2000 சேமித்துக் கொடுக்கிறேன். ஒரு நாளைக்கு எட்டுமணி நேரம், ஒரு மணி நேரத்துக்கு $15, கணக்குப் போட்டுப் பாருங்கள். $20 எங்களுக்காகச் செலவு செய்ய முடியவில்லை. அவர்கள் இருவரும் வேலை செய்கிறார்கள். பணப் பிரச்சினை இருந்தும் குழந்தை பெற்றுக் கொண்டார்கள். நாங்கள் எதையும் நம் குழந்தைகளிடம் எதிர்பார்ப்பதில்லை. இந்த ஊர் கலாச்சாரம் அப்படி. இருந்தாலும் இப்படி நடந்து கொள்வார்களா என்று வேதனையாக இருக்கிறது. குழந்தையை பார்த்துக் கொள்ளப் பணம் கேட்கவேண்டும் போலத் தோன்றுகிறது. நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்?

இப்படிக்கு,
...........


அன்புள்ள சிநேகிதியே :
இது சிறிய சம்பவம். ஆனால் பெரிய உண்மையை வெளிப்படுத்துகிறது. குழந்தைகளுக்கு நாம் செய்யத்தான் கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களிடமிருந்து எந்த எதிர்பார்ப்பும் இருக்கக்கூடாது என்பது போலத்தான் இந்த கலாச்சாரம் இருக்கிறது. எல்லாமே கணக்குத்தான் என்று அவர்கள் அப்படி இருந்தாலும், நம்மால் அதேபோல இருக்க முடிவதில்லை. பெற்றோர்களைக் காப்பாற்றும் பொறுப்பும், குழந்தைகளை வளர்த்துப் படிக்கவைக்கும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது. உங்கள் பொருளாதார வசதி எந்த அளவிற்குக் குறைவாக உள்ளது என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை. $20க்கு உங்கள் பெண் கணக்குப் பார்க்கிறாள் என்ற வருத்தத்தில், கசப்பில், நீங்கள் பணம் கேட்க நினைத்தால், அது 'ஏட்டிக்குப் போட்டி' என்பதாகிவிடும். அப்போது உறவில் ஒரு விரிசல் வரும். கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் பாருங்கள். எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை 'Detached Attachment'. வயதானபிறகு, ஒரு காலகட்டத்தில், உடலாலும், மனதாலும் பணத்தாலும் நம் குழந்தைகளிடம் விலகியிருப்பதே நல்லது. பாசம் தொடரட்டும். உங்கள் மகள். உங்கள் உதிரம். இன்றைக்கு வருத்தப்பட்டாலும் நாளைக்கு அவளுக்கு ஏதேனும் ஆபத்து என்றால் நீங்கள்தான் துடிதுடித்து உதவிக்கு ஓடுவீர்கள். இது சிறிய சம்பவம்தான். ஆனால், மனதைப் பக்குவப்படுத்தும் பெரிய உண்மை.

Enjoy your grandchild.

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்
Personal Queries: drcv.listens2u@gmail.com

© TamilOnline.com