முரட்டு முட்டாளின் நட்பு
ஒரு சமயம் வேடன் ஒருவன் ஒரு கரடிக்குட்டியைப் பிடித்தான். அதை மிகுந்த அன்போடும் கவனத்தோடும் செல்லப் பிராணியாக வளர்த்தான். கரடிக்குட்டி அவனிடம் அன்பாக இருந்ததோடு பல வருடங்கள் ஒரு நல்ல நண்பனாகவே நடந்துகொண்டது. ஒருநாள் வேடன் தனது செல்லக் கரடியோடு காட்டு வழியே போய்க்கொண்டிருந்தான். இப்போது கரடி வளர்ந்து வலுவான பெரிய மிருகமாகிவிட்டது. வேடனுக்கு உறக்கம் வந்தது. "என்னை எதுவும் தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்" என்று கரடியிடம் சொல்லிவிட்டு, அவன் புல்தரையில் படுத்து உறங்கினான்.

கரடி மிக விழிப்போடு அவனைப் பார்த்துக்கொண்டது. ஈ ஒன்று தனது எஜமானரின் முகத்தைச் சுற்றிச்சுற்றி வந்து இறுதியில் அவன் மூக்கின்மேல் அமர்வதை அது பார்த்தது. கரடி பெரிய, கனத்த கையால் விரட்டியதும் ஈ பறந்துபோனது. இப்படிக் கரடி பலமுறை கையை வீசி வீசி விரட்டியபோதும், எஜமானரின் மூக்கின்மீது உட்காரக்கூடாது என்பதை ஈக்குப் புரியவைக்க முடியவில்லை. ஈயின் மரியாதையில்லாத் தனத்தைக் கரடியால் தாங்கமுடியாத நிலை வந்துவிட்டது. கரடி தன் கனமான கையை ஓங்கி நிலைகுலைய வைக்கும் அடி ஒன்றைப் படாரென்று போட்டது. அப்போதே வேடன் இறந்து போனான்.

முரட்டுத்தனமான முட்டாள்களுடன் சேர்ந்தால் விளைவு இதுதான். அவர்கள் எத்தனை அன்பாக இருந்தாலும், அவர்களது அறியாமை உங்களைப் பெருந்தீமையில் கொண்டு சேர்க்கும்.

பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா

நன்றி: சனாதன சாரதி,
அக்டோபர், 2019

© TamilOnline.com