தவிப்பாய், தவிதவிப்பாய்
என் முன்னே வந்து நின்றார் டாக்டர் பெண்மணி.

போனமுறை வந்தபோது ஏதோ பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டார். இப்போது நினைவில்லை. கூட இருந்த சற்று வயதுமுதிர்ந்த ஆண் டாக்டரையும் பார்த்த ஞாபகமில்லை.

"எப்பிடி இருக்கீங்க?" என்றார் அந்தப் பெண்.

"நல்லா இருக்கேன் டாக்டர். நீங்க?"

என்னைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, அருகிலிருந்த ஆண் டாக்டரைப் பார்த்து, " சீஃப் ...." என்று இழுக்க...

அவர், "உங்களுக்கு கரோனரி ஆர்ட்டரி பாதிப்பு வந்திருக்கு" என்றார்.

"ஓ.....அப்படியா?" என்றேன் வேறு எதுவும் சொல்லத் தோன்றாமல்.

"நீங்கள் கவலைப்படக் கூடாது" என்றார்.

"எதனால இப்படி...?"

"உங்க ஆர்ட்டரில ரொம்ப அதிகமா கொலஸ்ட்ரால் சேர்ந்திருக்கு. ஒரு ஆர்ட்டரி கிட்டத்தட்ட 70 சதவீதம் அடைபட்டிருக்கு" என்றார்.

"70 சதவீதமா!"

"ஆம்."

"அதாவது இப்போ நாலுல ஒரு பங்குதான் அடைப்பில்லாம இருக்கு, இல்லையா?" என்றேன் ஏதோ ரொம்பத் தெரிந்தமாதிரி.

"அது அந்தக் குறிப்பிட்ட ஆர்ட்டரில மட்டும்... இன்னும் நிறைய டெஸ்ட் எடுக்க வேண்டியிருக்கு. இதுபத்தி ரொம்பத் தேவையில்லாம கவலைப்படாதீங்க. இதை 'விடோ மேக்கர் பிளாக்கேஜ்' (widow maker blockage) என்போம்" என்றார் சீஃப், நான் எதுவும் விவரம் கேட்காமலேயே.

"விடோ மேக்கர் பிளாக்கேஜ்"

"ஆமாம், இந்த கண்டிஷன் பேரு அதுதான். மெடிக்கலா அப்படிச் சொல்வோம்" என்றவர் தொடர்ந்து, "ரத்தக்குழாய் அடைப்பு 100 சதவீதத்தை நெருங்கும்போது அது இருதயத்தோட செயல்பாட்டை அப்படியே சடார்னு நிறுத்திடும். ஹார்ட் அட்டாக் வந்துடும். எனவேதான் இதை 'விடோ மேக்கர் பிளாக்கேஜ்'னு சொல்றோம்" என்றார்.

நான் சிறு பதற்றத்துடன் சிரித்தேன். "ஏன் டாக்டர் இது பெண்களுக்கு வராதா?" என்று கேட்டேன்.

அருகிலிருந்த பெண் டாக்டர் புன்னகைத்தார்.

"அப்படி ஒருவேளை வந்தா, அப்போ அதுக்கு என்ன பேர் வைப்பீங்க... விடோயர் மேக்கர்?" என்றேன் சீரியஸாக.

மறுபடியும் புன்னகை.

ஆனால், சீஃப் பதில் சொல்ல முந்திக்கொண்டார், "இருக்கலாம். பெரும்பாலும் ஆண்களுக்கு மட்டுமே நிறைய வந்து பார்த்திருக்கிறோம். ஹை கொலஸ்ட்ரால், சிகரெட், மது.... ஸ்டஃப் லைக் தட்" என்றார்.

"இப்போ நான் என்ன பண்றது?"

"ஒண்ணும் பண்ணவேண்டாம். ரிலாக்ஸ்" என்று புன்னகைத்தார் அந்தப் பெண் டாக்டர்.

பாழாய்ப்போன புன்னகை. எனக்கு அந்த இளவயதுப் பெண் டாக்டரை ஏனோ மிகவும் பிடித்திருந்தது. அழகாக இருந்தார். கழுத்தில் பளபளவென்று திருமாங்கல்யம் சமீபத்தில் அவருக்குத் திருமணம் ஆகியிருக்க வேண்டும் என்று காட்டியது.

"ஆஞ்சியோக்ராம் எடுக்க இப்போ ஆள் வருவாங்க. ப்ளீஸ் கோஆப்பரேட்" என்றார் சீஃப். "ஸ்டென்ட்ஸ் (stents) வைக்கலாமா, கூடாதா? உங்க பாடி கண்டிஷனுக்கு ஒத்துவருமா? இதெல்லாம் டிஸைட் பண்ணிட்டு மேலே என்ன செய்யலாம்னு யோசிப்போம்" என்றார் தொடர்ந்து.

"பொழுது போகலைன்னா இருக்கட்டும்னு கைல செல்ஃபோன் வச்சிருக்கீங்கதானே?" என்றார் அந்தப் பெண் டாக்டர் புன்னகைத்து.

"அ... ஆமாம்..." என்றேன், வேறென்ன சொல்வது என்று தெரியாமல்.

"கூகிள் பண்ணிப் பாக்காதிங்க. அது பைத்தியக்காரத்தனம்" என்ற சீஃப், பெண் டாக்டரைப் பார்த்து, "ஓகே, ஐயம் கோயிங். மீட் மீ லேட்டர்" என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.

அந்தப் பெண் மறுபடியும் என்னைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, "நானும் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன்" என்று சொல்லிச் சென்றார்.

நான் இருக்கும் ஸ்பெஷல் வார்டிலிருந்து கதவைத் திறந்து வெளியேறும்போது, கதவு உடனே மூடிக்கொள்ளாததால் வெளியே தாழ்வாரத்தில் குரல் கேட்டது, "என்ன டாக்டர் உங்க அப்பாவுக்கு ஆஞ்சியோ எடுத்துடலாமா?"

அப்பா?!

"எடுத்துடுங்க கதிர், அவருக்கு வந்திருக்கிற ஹார்ட் கண்டிஷனைவிட, அவருக்கு இருக்கிற அல்ஷைமர்தான் (Alzheimer) எனக்குக் கவலையா இருக்கு. கூடவே சீஃப் இருந்ததால வேற ஒண்ணும் பேசமுடியல. நான் அவரோட பொண்ணுங்கிறதே அவருக்குத் தெரியல. போனமாசம்தான் எனக்கும் முகுந்துக்கும் அவர் முன்னாடிதான் கல்யாணம் ஆச்சுங்கிறதுகூட அவருக்கிருக்கிற மோசமான டெமென்ஷியானால நினைவில்ல...." அந்தக் கவலை தோய்ந்த குரல் வெளியே பேசியதைக் கேட்டபோது, அந்த அழகான முகம் ஏன் எனக்கு அவ்வளவு பரிச்சயமாயிருக்குன்னு புரிஞ்சது.

அது என்னோட ஒரே பொண்ணு ஷில்பாதான்......

தன்னிச்சையாக என் கண்களில் வழிந்த நீர் தலையணையை நனைத்தது.

ராம் ஸ்ரீதர்,
சென்னை

© TamilOnline.com