இனிப்பு நீரின் மர்மம்
குடிநீர் ஃபவுன்டனை மூடியது அருணுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவனால் தன் கண்களை நம்பவே முடியவில்லை. இது தலைமை ஆசிரியை எடுத்த முடிவானாலும் அவரை யாரோ கட்டாயப்படுத்திச் செய்ததுபோலத் தெரிந்தது.

பள்ளிக்கூட காலை அசெம்பிளியின் போது அன்று திருமதி மேப்பிள் அவ்வளவு கலகலப்பாகக் காணப்படவில்லை. அவர் குழாய் சரியில்லை என்று சொன்னாரே தவிர, மற்ற விஷயம் ஏதும் குறிப்பிடவில்லை. சொல்ல நினைத்திருந்தாலும் சொல்ல முடியவில்லை. குழாயை மூடியதே நல்லது என்றுகூட அவர் நினைத்திருந்திருக்கலாம்.

"பூமிவாசிகளே! இன்று நமது பள்ளிக்கூடத்தைப் பார்க்க ஒருவர் வந்திருக்கிறார்" என்று தலைமையாசிரியை ஒருவரை அறிமுகப்படுத்தினார்.

உயரமாக, பேஸ்பால் தொப்பி அணிந்து அவர் தலைமையாசிரியை அருகே நின்று கொண்டிருந்தார். அவர் அருணுக்கு மிகவும் பரிச்சயமாகப் பட்டார். எங்கோ இவரைப் பார்த்திருக்கிறோமே என்று தோன்றியது.

"மாணவர்களே! இதோ இவர்தான் நமது புதிய சூப்பிரண்டெண்ட் திரு டிம் ராப்ளே (Tim Robles). இவருக்கு ஒரு பெரிய ஹலோ சொல்லுங்கள்," என்றார் தலைமைஆசிரியை.

'பெரிய ஹலோ' என்றதும் டிம் சிரித்துவிட்டார். ஏனென்றால் அவர் கடோத்கஜன் மாதிரி பிரம்மாண்டமாக இருந்தார். மாணவர்களும் அவரோடு சேர்ந்து சிரித்தார்கள். டிம் ராப்ளே மாணவர்களைப் பார்த்துக் கையசைத்தார்.

"மாணவர்களே! திரு டிம் நமது பள்ளி விளையாட்டணியின் மிகப்பெரிய விசிறி..." என்று ஏதோ சொன்னார்.

அருணுக்கு ராப்ளே என்ற பெயரைக் கேட்டதும் சாட்டையால் அடித்ததுபோல இருந்தது. வரிசையில் சாரா எங்கிருக்கிறாள் என்று திரும்பிப் பார்த்தான். அவள் கடைசியில் நின்று கொண்டிருந்தாள். அப்புறமாகப் பேசிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்.

டிம் பேச ஆரம்பித்தார். "பூமிவாசிகளே! இந்தப் பெரிய மனிதனிடமிருந்து ஒரு பெரிய ஹலோ" என்று கையாட்டியது, அங்கிருந்த அனைவரையும் - தலைமைஆசிரியை, அருண், சாரா தவிர - சிரிக்க வைத்தது. "நான் இந்த வருஷம் உங்களோட அறிவியல் விழாவுக்குத் தலைமை தாங்கப் போறேன். எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு..." அவர் இன்னும் ஏதேதோ பேசினார். அருணுக்கு எதுவும் பதியவில்லை. அவனுக்கு ராப்ளே என்ற பெயர்மட்டும் காதில் ரீங்காரம் செய்துகொண்டே இருந்தது.

"திருமதி மேப்பிள், உங்கள் பள்ளியில் என்னை வரவேற்றதற்கு மிகவும் நன்றி. நானும், என் அண்ணன் டேவிட் ராப்ளே போலவே நம்ம ஊருக்கு நல்லது பண்ணனும்னு நினைக்கிறவன். என் அண்ணன்தான் எனக்கு ஒரு கலங்கரை விளக்கம் மாதிரி. அவரால்தான் எனக்கும் பொதுப்பணிகள் எல்லாம் செய்கிற எண்ணம்."

டேவிட் ராப்ளே! பெயரைக் கேட்டதுதான் தாமதம், அருணுக்கு எல்லாம் புரிந்துவிட்டது. தலைமை ஆசிரியை ஃபோனில் சண்டைபோட்டது, தீடீரென்று மாவட்ட சூப்பிரண்டெண்ட் வருகை, அதுவும் ராப்ளே என்ற பெயர் மட்டுமால்லாமல், டேவிட் ராப்ளேயின் தம்பி வேறு! அருணுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

காலை பிரார்த்தனைக் கூட்டம் முடிந்து மாணவர்கள் வகுப்புகளுக்குப் போகும்போது, அருண் தன் வரிசையிலிருந்து விலகி டிம் ராப்ளே அருகே சென்றான். அதை அவனது வகுப்பு ஆசிரியை மிஸ் டிம்பர் கவனித்துவிட்டார். "அருண், லைன்ல ஒழுங்கா க்ளாசுக்கு போ" என்று கண்டித்தார்.

அருண் கேட்கவில்லை. "திருமதி மேப்பிள், திரு டிம் ராப்ளேகிட்ட நம்ம பள்ளிக்கூடத் தண்ணில என்ன கோளாறுன்னு பார்க்கச் சொல்லுங்க. அதுல நிறைய கிருமிங்க இருக்கலாம்." என்றான்.

தலைமை ஆசிரியை, "அருண், என்ன அதிகப்பிரசங்கித்தனம்! க்ளாசுக்குப் போ" என்றார். அதற்குள் மிஸ் டிம்பர் வந்து, "திரு டிம் ராப்ளே, என் வகுப்பு மாணவனின் நடத்தையை மன்னித்துவிடுங்கள்" என்று கூறிவிட்டு, அருணைப் பார்த்து, சற்றுக் கடினமான குரலில், "அருண், நீ இப்ப க்ளாசுக்குள்ள போறியா இல்ல உன்னை விலக்கி வைக்கச் சொல்லட்டுமா?" என்றார்.

அருண் கேட்கவில்லை. "மிஸ்டர் டிம் ராப்ளே, எங்க பள்ளிக்கூடத் தண்ணில ஏதோ கோளாறு. நிறைய கிருமிங்க இருக்கலாம். நீங்க வந்து பாருங்களேன். கொஞ்சம் ருசி பாருங்களேன்" என்றான்.

"அருண், வகுப்புக்கு நேரமாச்சு. போ அவங்களோட" என்று கண்டிப்பாகச் சொல்லிப் பார்த்தார் திருமதி மேப்பிள்.

அருண் திண்ணக்கமாக நின்றான். உடனே டிம், "திருமதி மேப்பிள், மிஸ் டிம்பர், நீங்கள் வகுப்புப் போங்கள். அருண் பிற்பாடு வருவான்" என்று சொல்லி அனுப்பினார்.

யாரும் கவனிக்காத போது, மிஸ் டிம்பர் எதிர்பாராத வகையில் அருணைப் பார்த்து கட்டைவிரலை உயர்த்தித் தம்ஸ் அப் காண்பித்துவிட்டுச் சென்றார். அருணுக்கு அது ஒரு உற்சாகம் கலந்த வியப்பாக இருந்தது.

"ராப்ளே ஐயா, நீங்கள் வந்து தண்ணீரை ருசித்துதான் பாருங்களேன்" என்று அவரை வலுக்கட்டாயமாக கையைப் பிடித்து அழைத்தான். அவர் ஒரு புன்சிரிப்போடு தலை ஆட்டிக்கொண்டே, "தம்பி, உன்னை மாதிரி இளைஞர்கள்தான் நம்ம ஊரின் உயிர்நாடிகள். என்ன உறுதி! என்ன ஆற்றல்! என்ன தீர்க்கம்! அசத்திட்டப்பா என்னை" என்றார்.

அவர் முன்னே செல்ல, அருண் பின்னால் வந்து கொண்டிருந்த திருமதி மேப்பிளை பயத்தோடு பார்த்தான். அவரும் அருண் வியக்கும்படி, தம்ஸ் அப் காண்பித்தார். அவ்வளவுதான், அருணின் தன்னம்பிக்கை எகிறிவிட்டது.

திரு ராப்ளே குடிநீர்க் குழாயில் ஒட்டியிருந்த டேப்பை அகற்றினார். பொத்தானை அழுத்தித் தண்ணீரைக் குடிக்கக் குனிந்தார். என்ன ஆச்சரியம், ஒரு சொட்டுத் தண்ணீர்கூட வரவில்லை. அருணுக்கு பெரிய அதிர்ச்சியாகிவிட்டது. அவனும் பொத்தானை அமுக்கிப் பார்த்தான். தண்ணீர் வரவில்லை.

"திருமதி மேப்பிள், நீங்க சரியானதும் என்னக் கூப்பிடுங்க. நான் வந்து என்னன்னு பார்க்கிறேன்" என்று சொல்லிவிட்டு, டிம் கிளம்பிப் போனார். அருண் ஏமாற்றத்தோடு வகுப்பிற்குத் திரும்பினான்.

பள்ளிக்கூட வளாகத்தைவிட்டு வெளியே வந்த டிம், தனது செல்ஃபோனை எடுத்துப் பேசினார், "அண்ணனா? நான்தான் அண்ணே டிம். நீங்க எச்சரிச்ச மாதிரியே அந்தப் பய படு கெட்டிக்காரன்தான். என்ன தண்ணி குடிக்க வைக்காம நகர மாட்டேன்னுட்டானே நல்லவேளையா, நான் காலைலயே மெயின் குழாயை மூடச்சொல்லிட்டேன். கவலைப்படாதீங்க. நான் பாத்துக்கறேன்."

(தொடரும்)

ராஜேஷ்

© TamilOnline.com