வழக்குரைஞராக வாழ்க்கையைத் துவங்கி, உச்சநீதிமன்ற நீதிபதியாக ஓய்வுபெற்ற ஏ.ஆர். லட்சுமணன் (78) காலமானார். அவரது மனைவி மீனாட்சி ஆச்சி மறைந்த இரண்டே நாளில் இவரும் காலமானது பெரும் சோகம். காரைக்குடியை அடுத்துள்ள தேவகோட்டையில், மார்ச் 22, 1942ல் பிறந்தவர் லட்சுமணன். சட்டம் பயின்று வழக்குரைஞரானார். சட்ட நுணுக்கங்கள் அறிந்து திறம்பட வாதாடுவதில் வல்லவராக இருந்த இவர், பதவி உயர்வுபெற்று சென்னை மற்றும் கேரள உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பணிபுரிந்தார். பின்னர் ராஜஸ்தான் மற்றும் ஆந்திர மாநிலங்களில் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் பணிபுரிந்தார். 2002 முதல் 2007 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பு வகித்தார். பொது இடத்தில் புகைபிடிக்கத் தடை விதித்து உத்தரவிட்டவர் இவர்தான். பணி ஓய்வுக்குப் பின் முல்லைப் பெரியாறு அணைத் தீர்வுக்காக முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழுவில் தமிழகத்தின் பிரதிநிதியாக இடம்பெற்றார். இக்குழுவினர் அளித்த அறிக்கையே முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு நீரைத் தேக்கி வைக்கலாம் என்ற உத்தரவுக்கு அடிப்படையாக அமைந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகத் தமிழை அறிவிக்கப் பரிந்துரைத்தவரும் இவரே.
நல்ல எழுத்தாளர். 'வரலாற்றின் சுவடுகள்', 'பன்மலர்ச் சோலை', 'நீதியின் குரல்' போன்ற நூல்களின் ஆசிரியர். எந்த உடல்நலப் பிரச்சனையுல்லாமல் இருந்தவர், மனைவியின் இறப்பால் ஏற்பட்ட மன அழுத்தத்தினால் மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார். |