மேனாள் குடியரசுத் தலைவவரும். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான பிரணாப் முகர்ஜி (85) காலமானார். இவர் டிசம்பர் 11, 1935ல் மேற்குவங்காளத்தில் உள்ள மிராட்டியில் பிறந்தார். பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பம். தந்தை கமதா கின்கர் முகர்ஜி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைசென்றவர். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் அரசியல், வரலாறு ஆகியவற்றில் முதுகலைப் படிப்பை முடித்த பின் சட்டம் பயின்று தேர்ந்தார். சில காலம் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றிய பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இவரது மேதைமையைக் கட்சி நன்கு பயன்படுத்திக் கொண்டது. தொடர்ந்து ஐந்து முறை காங்கிரஸின் மாநிலங்களவை உறுப்பினராக இவரை அனுப்பி வைத்தது.
தனது செயல்திறனால் இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குரியவர் ஆனார். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தொழில்துறை இணையமைச்சர், நிதியமைச்சர், வர்த்தகத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் எனப் பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட வகித்தவர், மக்களவை சபாநாயகர் ஆகவும் செயல்பட்டிருக்கிறார். எழுத்தாளரும்கூட. ஆறு புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
உலகின் தலைசிறந்த நிதியமைச்சர் (1984), ஆசியாவின் சிறந்த நிதியமைச்சர், இந்தியாவின் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் எனப் பல்வேறு கௌரவங்களைப் பெற்ற இவருக்கு இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான 'பத்ம விபூஷண்' 2008ல் வழங்கப்பட்டது. பல இந்தியப் பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளன. 2012ம் ஆண்டில் இந்தியாவின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017ல் பதவிக்காலம் முடிந்ததும் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கினார். 2019 ஆண்டு இவருக்கு 'பாரத ரத்னா' வழங்கப்பட்டது. முதுமை காரணமாக உடல்நலம் குன்றியிருந்த இவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.
பாரதத்தின் பெருமகனுக்குத் தென்றலின் அஞ்சலிகள்!! |