சைவ சற்குரு சச்சிதானந்த சுவாமிகள்
மகான்களும், சித்தர்களும், ஞானிகளும் அவதரித்த மகத்தான பூமி நம் பாரத பூமி. உலக இயக்கத்தை, இறையாற்றலை, உயிர்த் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்கள் இம் மகாயோகிகள். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்கள். நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். சித்தத்தை அடக்கிச் சிவமாய் உயர்ந்த இவர்களுள் வீரசைவராய், சிவனைத்தவிர வேறெவரையும் தொழாப் புண்ணியசீலராய் விளங்கியவர் சற்குரு சச்சிதானந்த சுவாமிகள். 'அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபை'யை நிறுவிச் சைவத்தின் பெருமையையும், சிவத்தின் அருமையையும் உணர்த்திய அற்புத ஆசான். மகா வீரசைவராகத் திகழ்ந்து, குருவின் மகத்துவத்தை அடியவர்களுக்கு உணர்த்திய மகாயோகி.

எங்கிருந்தோ வந்தார்...
சுவாமிகள் எப்பொழுது எங்கு தோன்றினார் என்பதை அறிய இயலவில்லை. அவர் திண்டுக்கல் மாநகரத்தில் தோன்றியவர் என்ற கருத்து நிலவுகிறது. 1870ம் ஆண்டின் பிற்பகுதியில் திண்டுக்கல்லுக்கு வந்தவர் என்றும் சொல்லப்படுகிறது. ரிஷிமூலம், நதிமூலம் பார்க்கக்கூடாது என்பதற்கேற்ப அவரது இளமைப்பருவம் பற்றி முழுமையான தகவல் கிடைக்கவில்லை. ஆனாலும் சுவாமிகள், தமிழ்நாட்டின் தென்பகுதித் தலங்களான கன்னியாகுமரி, கேரளம் போன்ற பகுதிகளில் வாழ்ந்து, மக்களுக்கு வாழ்வியல் உண்மைகளை, சைவத்தின் பெருமையைப் போதித்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

வட இந்திய யாத்திரை
தனது தென்பகுதிச் சுற்றுப் பயணத்தை முடித்தபின், வடக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்கிய சுவாமிகள், முதலில் கோகர்ணம் சென்றார். அங்கு தன்னை நாடி வந்த அன்பர்களுக்கு ஞானமடையும் மார்க்கத்தை உபதேசித்தார். பின் நாசிக், பஞ்சவடி போன்ற இடங்களுக்குச் சென்று வழிபட்டு இறுதியில் பம்பாயை அடைந்தார். அங்கு தன்னை வந்து தரிசிக்க வந்த அடியவர்களிடம், "குருவருள் இன்றித் திருவருள் இல்லை. குருவின் கடைக்கண் பார்வை படாமல் ஒருவன் ஞானநிலையை எய்தமுடியாது. ஆகவே குரு வணக்கம் மிக மிக அவசியம்" என்று வலியுறுத்தினார். பின் ஹைதராபாத், அயோத்தி, காசி போன்ற தலங்களுக்குச் சென்றார்.

இடையில் சுற்றிய அரைகுறை ஆடையைத் தவிர வேறின்றிக் காடு, மலை, வெயில், மழை என்றும் பாராமல் சுவாமிகள் தலயாத்திரை மேற்கொண்டதால், அவரது உடல் வெகுவாகக் கறுத்திருந்தது. வெறுங்காலிலேயே எங்கும் நடந்ததால் கல், முள் குத்தி கால்கள் புண்ணாகி அவ்வப்போது ரத்தம் பெருகிக் கொண்டிருந்தது. ஆனால் சுவாமிகள் அதுபற்றி அக்கறை கொள்ளவில்லை. உடல்மீதான அக்கறை அவருக்கு இருந்ததில்லை. அனைத்தையும் துறந்தவராகவே வாழ்ந்தார். ஆனால் அன்பர்கள் சுவாமிகளின் நிலைகண்டு வருந்தி, அவரை வலியுறுத்தி மேலாடை அணியச்செய்தனர். குடை, சொம்பு, போர்த்திக்கொள்ளக் கம்பளம், காலுக்குப் பாதக்குறடு ஆகியவற்றைத் தந்து ஏற்க வேண்டினர். ஆனால், சுவாமிகள் மறுத்துவிட்டார். "இது 'சரீர அபிமானம்' உள்ளவர்கள் பயன்படுத்துவது. எனக்குத் தேவையில்லை" என்று கூறிவிட்டார். ஆனாலும், அடியவர்கள் தன்மீது கொண்ட அன்பைக் கண்டு மனம் நெகிழ்ந்து, "அவற்றைத் தேவையுடையவர்களுக்குக் கொடுப்பீர்களாக" என்று கட்டளையிட்டுவிட்டு, அனைவருக்கும் ஆசி கூறி அங்கிருந்து புறப்பட்டார். பின் குருஷேத்திரம், ரிஷிகேசம், கேதாரநாத், இமயமலை, கைலாயம் எனப் பல இடங்களுக்கும் சென்று தரிசனம் செய்தபின் தமிழ்நாட்டுக்குத் திரும்பினார்.திருடருக்கு அருளிய திருவருள்...
வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, சிதம்பரம் எனப் பல தலங்களையும் தரிசித்துவிட்டுத் தென்பகுதிக்குச் சென்றார். ஆங்காங்கே வழியில் தம்மை நாடிவரும் அன்பர்களுக்குச் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பவைபற்றி விளக்கி அருளுரை நல்கினார். ராமேஸ்வரம் சென்றார். வழியில் திருடர்கள் சிலர் சுவாமிகளைத் தாக்க முற்பட்டனர். ஆனால், தாக்க வந்த திருடர்களுக்கு கை, கால்கள் விழுந்துவிட்டன. கண் தெரியாமல் போய்விட்டது. திருடர்கள் கண்ணீர் விட்டுக் கதறினர். சச்சிதானந்த சுவாமிகளிடம் தம்மை மன்னிக்கும்படி வேண்டினர். சுவாமிகளும் அவர்களிடம், "நீங்கள் இனிமேல் திருட்டுத்தொழிலை ஒருக்காலும் செய்யக்கூடாது" என்று கட்டளையிட்டுவிட்டு மன்னித்தருளினார்.

இலங்கைச் செலவு
தனுஷ்கோடி சென்று அங்கிருந்து சுவாமிகள் கப்பலில் இலங்கைக்குச் சென்றார். யாழ்ப்பாணம், கதிர்காமம் எனப் பல இடங்களுக்கும் சென்று, நாடி வந்த அன்பர்களுக்கு இறைத் தத்துவத்தை உபதேசித்தார். பல அற்புதங்களைச் செய்து அவர்களின் மனதில் இடம்பிடித்தார். பின் தமிழகம் திரும்பினார். பல தலங்களுக்கும் சென்றபின், பழனி அருகேயுள்ள கணக்கன்பதி என்ற ஊரை அடைந்தார். அங்கு சில ஆண்டுகள் வசித்தார். அன்பர்களுக்கு வாழ்வியல் உண்மைகளை உபதேசித்தார்.

சற்குரு சச்சிதானந்த சபை
அன்பர்கள் சிலரது வேண்டுகோளுக்கிணங்க திண்டுக்கல்லுக்குச் சென்று வசித்தார். சுவாமிகளின் உபதேசத்தினால் மனம் கவரப்பட்ட கணக்கன்பதி அன்பர்கள் சிலர் சேர்ந்து, அங்கு 'சற்குரு சச்சிதானந்த சபை' என்ற சபையை நிறுவினர். அதில் சுவாமிகளின் படத்தை நிறுவி பூஜை, ஆராதனை போன்றவற்றைச் செய்தனர். அடிக்கடி திண்டுக்கல்லுக்குச் சென்று சுவாமிகளைச் சந்தித்து அருளாசி பெற்று வந்தனர். நாளடைவில் சுவாமிகளின் அனுமதியுடன் சபை, ஆன்மிக அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டு 'அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபை' எனப் பெயர் மாற்றப்பட்டது.

சிலகால திண்டுக்கல் வாசத்திற்குப் பின் சுவாமிகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று உபதேசங்களைச் செய்தருளினார். அவற்றுள், "அறிவே சற்குரு; சற்குருவே கடவுள்" என்ற உண்மை முக்கியமானதாக விளங்கியது. பின் திண்டுக்கல்லில் உள்ள கள்ளக்கோனார் பட்டி, பன்றிமலை, தஞ்சாவூரில் உள்ள மாத்தூர்தொட்டி எனப் பல இடங்களுக்கும் சென்று உபதேசித்தார். ஆடம்பரமான ஆலய வழிபாடுகளைச் சாடி, "ஜீவனைச் சிவனாக்குவதே ஜீவகாருண்யம்" என்ற உண்மையைப் போதித்தார். பல இடங்களில் 'அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபை' நிறுவப்பட்டது.

சுவாமிகள் உபதேசங்களில் சில...
★ மனதிற்கு கஷ்டம் வரும்பொழுது மட்டும் கடவுளை நினைக்காமல், எப்போதும் கடவுளை நினைக்க வேண்டும்.
★ ஒருவன் இறைவனை உணர முதலில் மாயையை வென்றாக வேண்டும். அம்மாயையை வெல்ல, அது எவ்வழியில் உற்பத்தி ஆகிறது, அதன் தன்மை என்ன என்பது ஆராயப்பட வேண்டும். சற்குருவைச் சரணடைந்தால் மாயையை உணர்ந்து வெல்வது மிகவும் எளிது.
★ சிவனைத் தவிர சிறந்த வேறு தெய்வமில்லை. சிவனாகிய அந்த இறைவன், சச்சிதானந்த சொரூபத்தில் அடக்கம்.
★ ஒருவன் தன்னைத் தானே உணராமல் ஆலயங்களைத் தொழுவதாலோ, மலைகளைச் சுற்றுவதாலோ எந்தப் பயனுமில்லை.
★ உணவு ருசி இருப்பவனிடத்தில் அருள் தங்குவதில்லை.
★ ஆணவம் குறைய வேண்டுமென்றால் ஆகாரம் குறைய வேண்டும்.
★ எந்தவித ஆசையும் பற்றுமில்லாமல் அனைத்தையும் ஒழித்து, நிராசையோடு வாழ்பவருக்குக் கடவுளின் அருள் கைகூடும்.
★ குருவாக்கைத் திருவாக்காய் மதிக்க வேண்டும். அதற்கு மறுபேச்சு பேசக்கூடாது. அதற்கு மாறாக நடக்கவும் கூடாது.
★ குருவே சிவன். சிவனே குரு. கடவுள் வேறு. குரு வேறு அல்ல.
★ இல்லறத்தில் இருந்தாலும், பற்றற்று கடமைகளைச் செய்து, அனுதினமும் குருவை வணங்கி வர மாயை விலகும்.பரிசுத்த பிரம்மம் ஆக...
ஒருவர், பரிசுத்த பிரம்மம் ஆக, தன் பிறவி பற்றிய உண்மையை அறிய, சுவாமிகள் குறிப்பிட்டுள்ள நெறி மிக முக்கியமானதாகும்.
இந்திரியம் அடங்க ---- கரணம் அடங்கும்
கரணம் அடங்க ---- பிராணன் அடங்கும்
பிராணன் அடங்க ---- மூலம் அடங்கும்
மூலம் அடங்க ---- குண்டலினி அடங்கும்
குண்டலினி அடங்க ---- பிந்து அடங்கும்
பிந்து அடங்க ---- பரை அடங்கும்
பரை அடங்க ---- பரிசுத்த பிரம்மம் ஆவார்
என்று குறிப்பிட்டுள்ளார் சுவாமிகள்.

சுவாமிகள் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் 'நாயகத்துதி உபதேசம்', 'கெவனமணி மாலிகை' போன்றவை குறிப்பிடத் தகுந்தவை.

மகாசமாதி
பக்தர்கள் வற்புறுத்தியதால் சென்னைக்கு வந்து சிலகாலம் வசித்தார் சச்சிதானந்த சுவாமிகள். சென்னையில் தனகோபால் என்ற அன்பரின் இல்லத்தில் தங்கியிருந்தார். நவம்பர் 19, 1946 அன்று மாலை ஐந்தரை மணிக்கு 'விதேக முக்தி' அடைந்தார். சுவாமிகளின் உடல் சென்னை தாம்பரம் அருகே உள்ள ராஜகீழ்ப்பாக்கத்தில் நவம்பர் 21, 1946 நாளன்று மகாசமாதி செய்விக்கப்பட்டது. மறுநாளுக்கு மறுநாள் நவம்பர் 23 அன்று, மாலை அனைத்து அன்பர்களும் ஒன்றுகூடி, சற்குரு நாமத்தை ஓதிக் கொண்டிருக்கையில், சமாதியின் வடகிழக்குப் பகுதியில் இருந்து மிகப்பெரிய ஜோதி ஒன்று தோன்றி, சற்குருவின் சமாதியில் ஐக்கியமானது. அது முதல் அவ்விடம் 'குருஷேத்திரம்' என்று அழைக்கப்படுகிறது.

சமாதி அமைவிடம்
கிழக்குத் தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தில் சுவாமிகளின் சமாதி பீடமான 'ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபை - குருஷேத்திரம்' அமைந்துள்ளது. சபையின் உள்ளே நுழைந்தால் முதலில் நம்மைப் பிரதான வெளிமண்டபம் வரவேற்கிறது. உள்ளே சென்றால் தூண்களோடு கூடிய மிகப்பெரிய மண்டபம். நடுநாயகமாக உள்ள சிறு மண்டபத்தில் ஸ்ரீ சுவாமிகளின் உடல் சமாதி செய்விக்கப்பட்டுள்ளது. அதன்மேல் சுவாமிகளின் திருவுருவப் படம் வைக்கப்பட்டு, தினந்தோறும் ஆராதனை, வழிபாடு, பஜனை நடக்கிறது.

தினமும் மாலையில் நாமசங்கீர்த்தன பஜனை உண்டு. அன்பர்கள் வந்து தியானம் செய்கின்றனர். ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் குருவாரத்தன்று மாத குருபூஜையும், கார்த்திகை மாதம் முதல் குருவாரத்தன்று மகாகுருபூஜை விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன. வெளியூர் அன்பர்களும் திரளாக வந்து கலந்துகொள்கின்றனர்.

தம்மை நாடி வரும் பக்தர்களை, அளவற்ற ஆன்மிக அதிர்வலைகள் உடைய இவ்வருட்கூடத்திலிருந்து, ஒளிவடிவில் வழிநடத்திக் கொண்டிருக்கிறார் சற்குரு சச்சிதானந்த சுவாமிகள் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

பா.சு.ரமணன்

© TamilOnline.com