திருவண்ணாமலை பாலகணேசன்
புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர்களான மதுரை எம்.பி.என் .சேதுராமன், எம்.பி.என். பொன்னுசாமி சகோதரர்களிடம் நாதஸ்வரம் பயின்றவர் பாலகணேசன். திருவண்ணாமலை அரசு இசைப்பள்ளியில் மூன்று ஆண்டுகள் பயின்று மாவட்டத்திலேயே முதல் மாணவராகத் தேறினார். ரமணாச்ரமத்தின் ஆஸ்தான வித்வான். பல ஆலயங்களின் ஆஸ்தான வித்வானாக இருக்கிறார். மலேசியா, ஜெர்மனி எனத் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கெல்லாம் சென்று இசை பரப்பி வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பல கொடுத்திருக்கிறார். லட்சக்கணக்கான ஹிட்கள் பெறும் இவரது யூட்யூப் சேனல் மிகப்பிரபலம் வாருங்கள் நாதஸ்வரக்காரரின் பின்னே பேசிக்கொண்டே நடப்போம்....

முதல் ஸ்வரங்கள்...
பாரம்பரிய இசைக்குடும்பம் எங்களுடையது. என்னுடைய தாத்தா ராமச்சந்திரன், அவருடைய தந்தை கோவிந்தன் இருவருமே நாதஸ்வரக் கலைஞர்கள். அப்பா டி.ஆர். பிச்சாண்டி, பதினைந்தாம் வயதில் திருவண்ணாமலையின் சிறந்த வித்வானான முருகையா பிள்ளை அவர்களிடம் சிஷ்யனாகச் சேர்ந்தார். அவருடன் இருந்து கற்றுக்கொண்டு, நிறையக் கச்சேரிகள் செய்து பெயர்பெற்றார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார். தற்போது திருவண்ணாமலை நாதஸ்வரம், தவில் இசைச் சங்கத் தலைவராக இருக்கிறார். என்னுடைய சித்தப்பா சம்பத் அரசுப் பணிக்குச் சென்ற போதிலும் 35 தாளங்களுக்கும் அழகாக விளக்கம் சொல்வார். தாளம் போட்டுக் காண்பிப்பார். பணி ஓய்வு பெற்றுவிட்ட போதிலும் என்னுடன் கச்சேரிக்கு வர ஆர்வம் காட்டுவார். தாளம் போடுவதற்காவது வருகிறேன் என்பார். வயதானாலும் குன்றாத அவரது இசை நாட்டம் எனக்கு உத்வேகம் தரும் ஒன்று.



ஏழு வயதில் நாதஸ்வரம் கற்க ஆரம்பித்தேன். முதல் குருநாதர்கள் என்னுடைய சகோதரி சாந்தி மற்றும் என் தந்தை. அதன்பின் திருவண்ணாமலை முருகையா பிள்ளை அவர்களிடம் கற்றேன். 'தில்லானா மோகனாம்பாள்' படப்புகழ் மதுரை எம்.பி.என். சேதுராமன், எம்.பி.என். பொன்னுசாமி அவர்களிடம் பயின்றேன். அடுத்து அரசு இசைப்பள்ளியில் ஆனைகிராமம் பக்கிரிசாமி அவர்களிடம் கற்றேன். இன்னமும் நான் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். எந்த ஒரு கீர்த்தனையை, பாடலை, ராகத்தை வாசிக்கும்போதும் அவர்களை என் குருநாதர்களாக நினைத்துத்தான் சாதகம் பண்ணுகிறேன்.

இன்னிசை இணையர்
எனது அரங்கேற்றம் திருவண்ணமலையில் குகை நமசிவாயர் ஆலயத்தில் நிகழ்ந்தது. நல்ல வரவேற்பு. தொடர்ந்து பல கச்சேரிகள் செய்தேன். முதலில் அப்பாவும் நானும் சேர்ந்து வாசிப்போம். பின்னர் அக்காவும் நானும் சேர்ந்து வாசித்தோம். எனது அண்ணனும் நல்ல நாதஸ்வரக் கலைஞர்தான். அவருடன் இணைந்து வாசித்தேன். எனக்குத் திருமணமானது. மனைவியும் நாதஸ்வரக் கலைஞராகவே அமைந்தது இறைவன் கொடுத்த வரம். இப்போது இருவரும் சேர்ந்து வாசிக்கிறோம்.



சேதுராமன் ஐயாவின் பாராட்டு...
மதுரை எம்.பி.என் சேதுராமன், எம்.பி.என். பொன்னுசாமி அவர்களில் சின்னவர் பொன்னுசாமிப் பிள்ளையிடம் நான் கற்றுக்கொண்டேன். தினந்தோறும் ராகங்கள்பற்றிச் சொல்லிக் கொடுப்பார். கீர்த்தனைகளை இரண்டு நாளைக்கு ஒன்று, மூன்று நாளைக்கு ஒன்றாகச் சொல்லிக் கொடுப்பார். ராகங்களை விஸ்தாரமாகச் சொல்லிக் கொடுப்பார். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில்தான் சாதகம் செய்வேன். அங்கே இவர்களுக்கென்று தனியாக ஓர் அறை இருக்கிறது. அங்குதான் சாதகம் செய்யச் சொல்வார் குருநாதர். அதன்படி விடியற்காலையில் ஐந்து மணிக்கு ஆலயத்தின் அறையில் சாதகம் செய்வேன்.

ஒருநாள் சாதகம் செய்துகொண்டிருந்தபோது பெரியவர் சேதுராமன் பிள்ளை வந்தார். நான் அப்போது அறையைச் சாத்தி வைத்துக்கொண்டு சாதகம் செய்து கொண்டிருந்தேன். வந்தது யார் என்று தெரியாது. யாரோ விடாமல் கதவைத் தட்டுகிறார்களே என்று வாசிப்பை நிறுத்திவிட்டுக் கதவைத் திறந்தேன். பார்த்தால் இவர்! "ரொம்ப அருமையா வாசிக்கறே தம்பி. ரொம்ப சந்தோஷம்" என்று சொல்லிவிட்டு, "இந்தச் சாதகம் என் தம்பி உனக்குச் சொல்லிக் கொடுத்தாரா?" என்று கேட்டார். "ஆமாங்க ஐயா. அவர்தான் சொல்லிக் கொடுத்தார்" என்றேன். "இந்தச் சரளி சாதகம் பண்றது ரொம்பப் பெரிய விஷயம். சித்துச் சரளின்னும் பேரு. என் தம்பி சொல்லிக் கொடுத்ததுலே ரொம்ப சந்தோஷம். இதை நீ இவ்வளவு சரியாப் பண்றேன்னும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நல்லா வருவடா.. நல்லா வருவடா..." என்று சொல்லி ஆசிர்வதித்தார். விடியற்காலையில், மீனாட்சியம்மன் ஆலயத்தில் கிடைத்த குருவின் ஆசி எனக்குப் பெருநிறைவு.

இசைக்குடும்பம்



திருவண்ணாமலை இசைப்பள்ளியில்
குருநாதர்களிடம் பயின்று முடித்து, திருவண்ணாமலை அரசு இசைப்பள்ளியில் சேர்ந்து பயின்றேன். அங்கு எனக்கு ஆசிரியராக இருந்தவர் ஆனைகிராமம் பக்கிரிசாமி. மதுரையில் குருநாதர்களிடம் கற்றுக்கொண்டதை இவரிடம் வாசிக்கும்போது இவருக்கு மிகவும் சந்தோஷம். "பையன் நல்லா வாசிக்கிறான். நல்லா சாதகம் செய்கிறான்" என்று அவருக்குப் பெருமை. எனக்கு நடைமுறையில் கச்சேரி வாசிக்கத் தெரியும் என்றாலும், அதன் அடிப்படைகளை எனக்கு விரிவாகச் சொல்லிக் கொடுத்தவர் பக்கிரிசாமி ஐயாதான்.

அவர் தினமும் 20, 22 மாணவர்களை வைத்து நாதஸ்வரம் வாசிக்கச் சொல்வார். ஒவ்வொருவருக்கு ஒரு ராகம் கொடுத்து வாசிக்கச் சொல்வார். நான் கடைசியாகத்தான் உட்காருவேன். காரணம் என்னவென்றால், முதலில் உட்கார்ந்து வாசித்து விட்டால், வாசிக்கும் அந்த ராகத்தின் நுணுக்கங்கள் நமக்குத் தெரியாமல் போய்விடும் என்பதுதான். பலமுறை கேட்டு, உள்வாங்கிக் கொண்டால்தான் ராக நுணுக்கங்கள் பிடிபடும். என் குருநாதர்களும் இதனை, "10 முறை 20 முறை கேளு. நல்லா நான் சொல்ற விளக்கத்தை உள்வாங்கிக்கிட்டு அப்புறம் வாசி" என்பார்கள். அதனால்தான் நான் கடைசியாக உட்காருவேன். ஆசிரியர் பக்கிரிசாமி ஐயா அதைப் பார்த்து, "முதலில் வந்து உட்கார். முதலில் நீ வாசி" என்பார். ஆனாலும், "நான் கடைசியாக வாசிக்கிறேன் ஐயா; சீவாளி சரியில்லை" என்றெல்லாம் ஏதாவது சாக்குச் சொல்லிவிட்டு, கடைசியாகத்தான் வாசிப்பேன்.

ராமானுஜர் விருது



அவர் ஒவ்வொரு ராகமாகச் சொல்லிக் கொடுப்பார். அதை வாசிக்கும்போது சிலர் தவறுவார்கள். அவர், எங்கே தவறினார்கள், அதன் விளக்கம் என்ன, நுணுக்கம் என்ன என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுப்பார். இது பின்னால் வாசிப்பதற்கு எனக்கு மிக உதவியாக இருக்கும். அவர் சொன்னதையெல்லாம் உள்வாங்கிக்கொண்டு பின்னால் நான் வாசிக்கும்போது அவர் கை தட்டுவார். "ரொம்ப அருமையா வாசிச்சே" என்று பாராட்டுவார். பின் ஒருநாள், "கடைசியாக உட்கார்ந்து கேட்க உனக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்?" என்று கேட்டார். நான், "குருநாதர்களான மதுரையார்தான் சொல்லிக் கொடுத்தார்கள். 'ஒன்றைத் தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்கள் கடைசியாகத்தான் உட்காருவார்கள். அப்போதுதான் அதனுடைய முழு விளக்கத்தையும் நன்றாக அவர்களால் உள்வாங்கிக் கொள்ள முடியும். பொறுமைதான் முக்கியம். பொறுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம்' என்று எனக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்" என்றேன். அவர் அதைக் கேட்டு ரொம்ப சந்தோஷப்பட்டார்.

இன்னிசை இணையர்
பாலகணேசன், யுவஸ்ரீ கலாபாரதி, வாத்ய கலைமணி, கலைஞர் மணி, கலைவளர்மணி, ஆன்மிக ரத்னா, நாதஸ்வர நாதமணி, நாதஸ்வர அரசன் எனப் பல பட்டங்கள் பெற்றிருக்கிறார். அவரது மனைவி பாகேஸ்வரியும் சளைத்தவரல்ல. நாதஸ்வரக் கலைச்சுடர், நாதஸ்வர இசைவாணி, நாதஸ்வரச் சுடர்மணி, நாதஸ்வர அரசி, நாதஸ்வர காஷ்யப், டி.கே. சண்முகம் விருது, பாரதி விருது, காயிதே மில்லத் விருது, டி.என். ராஜரத்தினம் பிள்ளை விருது உள்பட பலவற்றைப் பெற்றிருக்கும் பாகேஸ்வரி பிறந்து, வளர்ந்தது சென்னையில். தாத்தா, அப்பா எல்லாருமே நாதஸ்வரக் கலைஞர்கள். ஏழு வயதில் நாதஸ்வரப் பயிற்சி ஆரம்பமானது. தந்தை தேவராஜன்தான் முதல் குரு. அரங்கேற்றம் 1995ல் பெரம்பூர் சிவா-விஷ்ணு கோவிலில் நடந்தது. தொடர்ந்து கச்சேரி வாய்ப்புகள் வந்தன. சென்னைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இசையில் இளங்கலை பட்டம் பெற்றார். பாலகணேசனுடன் திருமணம் நிகழ்ந்தது. பிறந்தவீட்டைப் போலப் புகுந்தவீட்டாரும் திறமையை ஆதரித்தனர்.

இருவரும் இணைந்து இதுவரை சுமார் 3500 கச்சேரிகளுக்கு மேல் செய்துள்ளனர். மேடைக்கச்சேரி மட்டுமல்லாமல் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் வழங்கியுள்ளனர். சென்னை பொதிகை, மக்கள் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி எனப் பல நிகழ்ச்சிகளை இருவரும் சேர்ந்து வாசித்துள்ளனர்.

'சர்வம் தாள மயம்' படத்தில் நாதஸ்வரக் கலைஞராக நடித்திருக்கும் பாகேஸ்வரி, கணவருடன் மலேசியா, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கும் சென்று கச்சேரிகள் செய்துள்ளார். பெண்களுக்கு நாதஸ்வரம் சொல்லித் தருகிறார். வருங்காலத்தில் நாதஸ்வரத்திற்கு என்று பயிற்சிப் பள்ளி ஒன்றைத் துவங்குவது இவர்களது ஆசை.


இணைந்தும் விட்டுக்கொடுத்தும் இசைபோல வாழ்க்கை
என் மனைவியும் என்னுடைய துறையையே சேர்ந்தவர்களாக அமைந்தது என் பாக்யம்; கலைத்தாயின் ஆசிர்வாதம் என்றுதான் சொல்லவேண்டும். பெண்கள் நாதஸ்வரம் வாசிப்பது மிகவும் கடினம். என் மனைவி சிறு வயதிலிருந்தே இதில் நல்ல பயிற்சி பெற்றவர். பொதுவாகப் பெண்களை தெய்வத்திற்குச் சமமாகச் சொல்வார்கள். இம்மாதிரியான தொழில் செய்பவர்களை கலைத்தாயின் அம்சம் என்று சொல்லலாம். நான் அப்படித்தான் நினைக்கிறேன். மதிக்கிறேன்.

பிற கலைஞர்களுடன் இணைந்து வாசிக்கும்போது பல பிரச்சனைகள் வரும். நான் நன்றாக வாசித்தாலும், கூட வாசிப்பவர் சரியாக வாசிக்கவில்லை என்றால் அவரைச் சுட்டிக் காட்டவோ, கோபிக்கவோ முடியாது. தெரிந்தும் வாசிக்கவில்லை என்றால் கடிந்து கொள்ளலாம். தெரியாதவர்களை? இதெல்லாம் நான் முன்பு நிறைய அனுபவப்பட்டிருக்கிறேன். அதனால் பக்குவமும் பெற்றிருக்கிறேன்.

மலேசியக் கோவில் திருவிழாவில்



என் குருநாதர்களுக்குள் வீட்டில் பல விஷயங்களில் கருத்து வேறுபாடு இருக்கும். ஆனால், வாசிப்பு என்று வந்து விட்டால் இரண்டு பேரின் இசையும் ஒரேமாதிரி இருக்கும். ஒரே சப்தம் வரும். வேறுபாடு தெரியாது. இருவரும் ஒருவருக்கொருவர் இணைந்தும், விட்டுக் கொடுத்தும் வாசிப்பர். அதையே எனக்கும் நான் முன்மாதிரியாகக் கொண்டேன்.

மனைவியுடன் வாசிக்கும்போதும் இப்படித்தான். நாங்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டிருப்பதால் பிரச்சனை எதுவும் வராது. நான் எப்போதுமே விட்டுக் கொடுத்துப் போகிறவன் என்பதால், இசை உள்பட எந்த விஷயத்திலும், மணமாகி இந்தப் பத்து வருடங்களில் கருத்து வேறுபாடு வந்ததில்லை. ஒருவேளை எனக்குக் கோபம் வந்தால் அவர் அமைதியாகி விடுவார். அவருக்குக் கோபம் வந்தால் நான் அமைதியாகி விடுவேன். நாங்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்து, அறிந்து அனுசரித்து வாசிப்பதால் கச்சேரிகளிலும் பிரச்சனை வந்ததில்லை.

"அது சிஷ்யனுக்கு குரு கொடுக்கிற காணிக்கைடா..."
நான் மதுரையில் பயிற்சி பெற்றுவந்த காலம். கோவிலுக்கு ஆடி முளைக்கட்டு உற்சவத்தில் ஏ.கே.சி. நடராஜன் ஐயா, திருப்பாம்புறம் மீனாட்சி சுந்தரம் ஐயா என்று பெரிய பெரிய கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடக்கும். இவற்றைக் கேட்கும்போது, நாமும் இப்படி வாசிக்க மாட்டோமா என்று ஏக்கமாக இருக்கும். மதுரை மீனாட்சியும், சொக்கநாதரும் அதற்கு அருள்வார்களா என்று நினைத்துக் கண்ணீர் வரும். எனது குருநாதரிடம் ஒருநாள் என் ஆசையைச் சொன்னேன். அவரும் "பார்க்கலாம்" என்று சொன்னார்.

பின்னர் நான் அரசு இசைப்பள்ளியில் சேர்ந்து பயில திருவண்ணாமலைக்குச் சென்றுவிட்டேன். அவ்வப்போது குருநாதருடன் ஃபோனில் பேசுவேன். ஐந்து வருடங்கள் ஆயின. ஒருநாள் நான், என் அப்பா, அண்ணன் மூவரும் ஜெயா டிவியில் ஒரு இசை நிகழ்ச்சி செய்தோம். அதைப் பார்த்துவிட்டு என் குருநாதர், "கணேசா.. நீ இந்த அளவுக்கு வாசிக்கிறாயா, ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்று ஃபோனில் சொன்னார்.

மீனாட்சியம்மன் ஆலய கும்பாபிஷேகம் வந்தது. ஒருநாள் கூப்பிட்டு, "யாகசாலை பூஜைக்கு நீ வந்து வாசி" என்று சொன்னார் குருநாதர். நான் அண்ணனுடன் புறப்பட்டுச் சென்றேன். "என்னென்ன ராகம் வாசிக்கப் போகிறாய்?" என்று கேட்டார். சொன்னேன். "முடிந்தால் பைரவி வாசி" என்றார். சரி என்றேன். நான் பைரவி வாசித்துக் கொண்டிருக்கையில் குருநாதர் வந்தார். எனக்கருகில் அமர்ந்து கச்சேரி முழுக்கக் கேட்டார். நிகழ்ச்சி முடிந்ததும் கமிட்டித் தலைவர்கள் சிறப்புச் செய்தனர். அதில் மரியாதைகளோடு ஒரு உறை இருந்தது. அதில் 10000/- என்று எழுதி இருந்தது. நான் தட்டை வாங்கி, கவரை அப்படியே குருநாதரிடம் கொடுத்துவிட்டேன். அவரிடம் ஆசிபெற்றுப் பின் நான் ரூமுக்குப் புறப்பட்டேன். "நீ போய் பயண ஆயத்தம் செய்துவிட்டு வீட்டுக்கு வா" என்றார் குருநாதர். அன்றே புறப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு குருநாதர் இல்லம் சென்றேன்.

அவரும் என்னை ஆசிர்வதித்துவிட்டுக் கவரை என்னிடமே கொடுத்துவிட்டார். நான் மறுப்புச் சொல்லாமல் குருநாதரின் ஆசியாக அதை வாங்கிக் கொண்டேன். "அடுத்து ஆடி முளைக்கட்டும் உற்சவத்திற்கு அழைக்கிறேன். வந்து வாசி" என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

பேருந்தில் ஏறியதும், சக கலைஞர்களுக்குச் சன்மானம் அளிக்க வேண்டும் என்பதற்காகக் கவரை எடுத்தேன். கவர் பிரிக்கப்பட்டு இருந்தது. தவில்காரருக்குச் கொடுப்பதற்காக, தொகையை எண்ணிப் பார்த்தால் 12000 ரூபாய் இருந்தது. எனக்கு ஒரே ஆச்சரியம். அப்போது செல்ஃபோன் கிடையாது. குருநாதருக்கு எஸ்.டி.டி. ஃபோன் செய்து "கவரில் 10000 ரூபாய் என்று எழுதியிருக்கிறது. ஆனால், இதில் 12000 ரூபாய் இருக்கிறதே" என்று சற்றுப் பதட்டத்துடன் சொன்னேன். குருநாதர் சிரித்துக்கொண்டே, "டேய் அது சிஷ்யனுக்கு குரு கொடுக்கிற காணிக்கைடா. வச்சுக்கடா" என்று சொன்னார். எனக்குக் கண்கள் கலங்கிவிட்டன. என் வாழ்க்கையின் மறக்க முடியாத சம்பவங்களில் இதுவும் ஒன்று.
பாலகணேசன்


இசையின் பரிமாணங்கள்
கர்நாடக இசை, தமிழிசை, பக்தியிசை, திரையிசை என்றெல்லாம் சொன்னாலும் எல்லாமே இசையின் வெவ்வேறு பரிணாமங்கள்தான். ஒவ்வொன்றிற்கும் ஏற்றவாறு தனித்தனி இலக்கணம், பயில் முறைகள் உண்டு. இவற்றை நாதஸ்வரத்தில் வாசிக்கக் கடுமையான பயிற்சி தேவை. கூடவே அயராத முயற்சியும் வேண்டும். முயன்று, பயின்று பின்னர்தான் அது மேடைக்கு வரும். கடும் உழைப்பு வேண்டும். அப்போதுதான் அது பேர் சொல்லும்படி அமையும். பயிற்சி இல்லாவிட்டால் ஒன்றும் சாதிக்கமுடியாது.

இளையராஜாவுடன்



இவற்றை வாசிக்க நிறையச் சாதகம் செய்யவேண்டும். ஆனால், இத்தனை மணி நேரம் என்று கணக்கிட்டுச் சாதகம் செய்யமுடியாது. ராகத்தை, கீர்த்தனையைப் பொறுத்து சாதகம் செய்வோம். சில, ஒருமணி நேரத்திலேயே முடிந்துவிடும். இன்னொன்றிற்கு 4, 5 மணி நேரம் ஆகலாம். அதுபோல மனைவிக்கு வீட்டில் நிறைய வேலை இருக்கும். அதற்கேற்றவாறு நேரம் அமைத்துக்கொண்டு சாதகம் செய்வோம். எப்படியும் தினந்தோறும் சாதகம் செய்வோம். குறைந்தது ஒரு மணி நேரமாவது சாதகம் செய்யாமல் ஒருநாளும் இருந்ததில்லை.

பழையவையா? புதியவையா?
பழைய பாடல், புதிய பாடல் எல்லாமே வாசிப்பது கஷ்டம்தான். புதிய பாடல் என்றால் ரஹ்மான் சார் இசையில் வெளியான 'மின்சாரக் கனவு', 'ரிதம்' போன்றவற்றை வாசிப்பது கடினம். கார்த்திக்ராஜா இசையமைத்த 'டும் டும் டும்' பாடல்களை இசைப்பதும் கஷ்டம். மற்றபடி பழசு, புதுசு என்று வேறுபாடு ஏதும் இல்லை.

டி.ஆர். மகாலிங்கம், கே.பி. சுந்தராம்பாள், சீர்காழி கோவிந்தராஜன் போன்றோரின் சில பாடல்கள் ரொம்பக் கஷ்டமாக இருக்கும். அவர்களுடைய கமகங்களும் சங்கதிகளும் அவ்வளவு தன்மையாக, 'சபாஷ்' என்று சொல்லும்படி இருக்கும் அவற்றை வாசிப்பில் கொண்டு வருவது சவால்தான்.

டாக்டர் அப்துல்கலாமுடன்



அப்துல் கலாமின் ஆசி
டிசம்பர் 30, 2012 அன்று திருவண்ணாமலயில் மத நல்லிணக்க மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். அப்துல்கலாம் அவர்கள்தான் நிகழ்ச்சிக்குத் தலைமை விருந்தினர். அங்கே என்னை மங்கல இசை வாசிக்க அழைத்திருந்தார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் கலாம் ஐயா அவர்களுடன் ஒரு ஃபோட்டோ எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டேன். கலாமின் செயலாளர் அனுமதி அளிக்கவேண்டும். ஃபோட்டோ எடுக்க யாருக்கும் அனுமதி இல்லை என்று சொல்லப்பட்டது.

அவருடைய புத்தகம் ஒன்றில், தஞ்சாவூரில், அவர் மாணவர்களிடையே நடந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட போது, 'எந்தரோ மகானுபாவுலு' என்ற தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனையைச் சொல்லி, அதன் பெருமைகளைப் பேசி, மாணவர்கள் மனதில் இடம்பெற்றார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை நான் முன்பு வாசித்திருந்தேன். அவரது இசை நாட்டத்தை அறிந்திருந்தேன்.

நிகழ்ச்சி நாளன்று அப்துல்கலாம் ஐயா காரில் வந்து கொண்டிருந்தார். சுற்றி நிறைய பாதுகாப்புப் படையினர். மங்கல இசையை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வாசித்தேன். பின் 'எந்தரோ மகானுபாவுலு' கீர்த்தனையை வாசிக்க ஆரம்பித்தேன். அதைக் காரில் வந்தபடியே கலாம் ஐயா கேட்டிருக்கிறார். அவர் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்தார். அவருக்குப் பூங்கொத்து, சால்வை கொடுத்துக் கொண்டிருக்கும்போதே, அவர் எங்களை நோக்கி வந்துவிட்டார். "வாசிப்பை நிறுத்தக்கூடாது; கடைசி வரி ஓடிக் கொண்டிருக்கிறது. வாசி" என்று சொல்ல நானும் வாசித்தேன்.

வாசித்து முடித்ததும், என் தோள்மீது கை வைத்து, "நல்ல நாதஸ்வரம். நல்ல அமைப்பு. முயற்சி பண்ணிக்கிட்டே இரு. வாய்ப்பு உன்னைத் தேடிவரும்" என்று சொன்னார். எனக்குக் கை கொடுத்து, "நல்லா வருவே,.. நல்லா வருவே" என்று ஆசிர்வாதமாகச் சொன்னார். நான் குனிந்து அவரை வணங்கினேன். அவர் என்னை அணைத்து, "நீ ரொம்ப நல்லா வாசிக்கிற. நல்லா வருவே" என்று சொன்னார். அவர் மனமாரச் சொன்ன அந்த ஆசிர்வாதம் பலித்தது. குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும், பாராட்டு வாங்கினாலும் பெரிய இடத்தில் பாராட்டு வாங்கவேண்டும் என்று சொல்வதுபோல எனக்கு நடந்தது. அதைக் கடவுளின் ஆசியாகவே நான் பார்க்கிறேன்.

அவருக்கு நிறையக் கடிதங்கள் எழுதியிருக்கிறேன். எனக்கு அவர் பதில் அனுப்பியிருக்கிறார். அந்தச் சந்திப்பும், அவரது ஆசியும் என் வாழ்க்கையில் மறக்கமுடியாதவை.



தொடரும் பாரம்பரியம்
நான், என் மனைவி. எனக்கு இரு பெண் குழந்தைகள். ஹரிணி, கனிமொழி என்று பெயர். அவர்களும் இக்கலையை ஆர்வமாகக் கற்கிறார்கள். தினந்தோறும் சாதகம் செய்கிறார்கள். அரங்கேற்றம் செய்யும் அளவுக்கு வரவில்லை.

என்னுடைய குழந்தைகளுக்கும், அண்ணன் குழந்தைகளுக்கும் இன்னும் சில மாணவர்களுக்கும் இந்தக் கலையைச் சொல்லிக் கொடுக்கிறேன். அடுத்த தலைமுறைக்கும் இசைப் பாரம்பரியம் தொடர்வது இறைவனின் கருணை.

இசைஞானி இளையராஜா
ஆஸ்தான வித்வான் என்பதால் நான் ரமணாச்ரம நிகழ்வுகளில் வாசிப்பேன். ஒரு சமயம் ஆச்ரமத்தின் சமையல் கலைஞராக இருந்தவர், தனது மகள் திருமணத்திற்கு வாசிக்க அழைத்திருந்தார். காலையில் முகூர்த்தம் வாசித்து முடித்ததும், 'பிபரே ராம ரஸம்' வாசிக்கச் சொல்லி ஒருவர் கேட்டார். அது சக்கரவாகத்தை ஒட்டிய ஆஹிர் பைரவி ராகம். சில லட்சணங்களை மாற்றும்போது ஹிந்துஸ்தானியில் அதனை 'ஆஹிர் பைரவ்' என்று சொல்வார்கள். நான் வாசித்துக் கொண்டிருந்தபோது இளையராஜா அவர்கள் உள்ளே நுழைந்தார்கள். அவர் எங்களைப் பார்த்துக்கொண்டே வந்தார். நாங்களும் அவரை, மேடையிலிருந்தே வணங்கிவிட்டு வாசிப்பைத் தொடர்ந்தோம்.

அவர் மணமேடைக்குச் சென்று அன்பளிப்புக் கொடுத்து ஆசிர்வாதம் செய்துவிட்டு வந்தார். நான் அப்போதுதான் வாசித்து முடித்துக் கீழே இறங்கினேன். அவர் உடனே, "அந்த ராகத்தை இன்னும் வாசி. நான் கேட்கணும்" என்றார். பின் சிரித்தபடியே "அருமையா இருக்கு. ரொம்ப அருமையா வாசிச்சே" என்றார். "உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. முயற்சி செய்துகொண்டு இரு. நான் உனக்கு வாய்ப்புக் கொடுக்கிறேன்" என்றும் சொன்னார். அவர் அப்படிச் சொன்னதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.

நானும் என் மனைவியும் அவருடன் படம் எடுத்துக் கொண்டோம். கூட இருந்த அவரது செயலாளர், "இதுவரை இவர் சிரித்துக்கொண்டு யாருக்கும் ஃபோட்டோவுக்குப் போஸ் கொடுத்தது கிடையாது. உங்களைப் பார்த்துத்தான் இப்படி போஸ் கொடுத்திருக்காரு" என்றார்.

பொதுவாக அவர் திருமணங்களுக்குச் செல்வதில்லை. அவரைத் தேடிச் சென்றுதான் பலரும் ஆசி வாங்குவார்கள். இதற்கு வந்திருக்கிறார் என்றால் அதற்கு ஆச்ரமத்தின் மீது கொண்ட மதிப்பும் அந்தச் சமையல் கலைஞர்மீது இருந்த அன்பும்தான் காரணம். ஒரு கலைஞனாக இது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.
பாலகணேசன்


அடைந்து கிடந்த நாட்கள்
லாக்டவுன் எனக்கு மட்டுமல்ல; கலைஞர்களுக்கு, மக்களுக்கு எல்லாருக்குமே ரொம்பக் கஷ்டமானதுதான். ஆறு மாதமாகவே எந்த நிகழ்ச்சியும் இல்லை. சுப நிகழ்ச்சிகளுக்கும் போகமுடியாது. பசங்களுக்குச் சொல்லிக் கொடுப்பதைத்தான் செய்கிறேன். பொருளாதார ரீதியாக எப்படியோ சமாளிக்கிறோம் என்றாலும், என்கூட இருந்தவர்களுக்கு, பக்கம் வாசிப்பவர்களுக்கு, கார் ஓட்டுநருக்கு உதவ முடியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது. இந்த நிலைமை விரைவில் மாற எல்லாம்வல்ல ஸ்ரீ அருணாசலப் பெருமான் அருள் புரியவேண்டும்.

உரையாடல்: அரவிந்த்

© TamilOnline.com