கர்ணன்
"சின்ன விஷயம்தான் எவ்வளவு துன்பங்களுக்கு வித்தாகி விடுகிறது தெரிகிறதா?" என்று கேட்கும் பாணியில் கதை எழுதும் வித்தை கர்ணனுக்கு கைகூடி வந்திருக்கிறது. இம்மாதிரி சிறு வித்துக்களை வைத்து ஒரு பெரிய செடியை வளர்த்துக்காட்டும் எழுத்துத் திறமையைப் பாராட்டாமலிருக்க முடியாது" - இவ்வாறு பாராட்டி மகிழ்பவர் பி.எஸ். ராமையா. பாராட்டப்பெறும் கர்ணன், மணிக்கொடி கால எழுத்தாளர். சி.சு. செல்லப்பாவின் நண்பர். ந. பிச்சமூர்த்தி தொடங்கி, நா. பார்த்தசாரதி, ஜெயகாந்தன், தி.க.சி., சிட்டி, ஜி. நாகராஜன் எனப் பல எழுத்தாளர்களின் நட்பைப் பெற்றவர்.

கர்ணன், 1938ல், மதுரை மாவட்டம் செல்லூரில், பரஞ்சோதி-செல்லம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவர் மூத்தமகன். உடன் பிறந்தோர் 9 பேர். வறுமைச் சூழல். ஐந்தாம் வகுப்போடு கல்வி நின்றுபோனது. அடிப்படையில் இவர் ஒரு மாற்றுத்திறனாளி என்பதால் பல்வேறு பணிகளை மேற்கொண்டு, இறுதியில் தையற் கலைஞராகப் பணி வாழ்க்கையைத் தொடங்கினார். சிறுவயது முதலே கல்கியின் எழுத்துக்களை விரும்பி வாசித்தவர். புதுமைப்பித்தனின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார். எழுத்தார்வம் தலை தூக்கியது. முதல் சிறுகதை 'நீறுபூத்த நெருப்பு' 1958ல் 'காவேரி' இதழில் வெளியானது.

தொடர்ந்து பிரபல இதழ்களில் சிறுகதைகள் எழுதினார். 'எழுத்து' இதழைத் தவமாகத் தயாரித்து வெளியிட்டு வந்த சி.சு. செல்லப்பா கர்ணனுக்குள் இருந்த இலக்கியவாதியை அடையாளம் கண்டுகொண்டார். 'சுமை' என்னும் இவரது கதையை வெளியிட்டார். முதல் சிறுகதைத் தொகுப்பை, தனது 'எழுத்து பிரசுரம்' மூலம் வெளியிட்டதும் செல்லப்பாதான். 'கனவுப்பறவை' என்னும் அத்தொகுப்பு, 1964ல் வெளியானது. அதற்கு முன்னுரை எழுதியிருந்தவர் ந. பிச்சமூர்த்தி. நூலை புதுமைப்பித்தனுக்குக் காணிக்கையாக்கியிருந்தார் கர்ணன். அந்தத் தொகுப்பு கர்ணனுக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்தித் தந்தது. தொடர்ந்து சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். கலைமகள், தீபம், தினமணி கதிர், அமுதசுரபி, கணையாழி, கண்ணதாசன், தாமரை, உதயம், குறிஞ்சி, இளந்தமிழன், செம்மலர் எனப் பல இதழ்களில் சிறுகதைகள் வெளியாகின. கதை, கவிதை, நாவல், குறுநாவல், கட்டுரை, வாழ்க்கை வரலாறு ஆன்மீகம் என இலக்கியத்தின் பல்வேறு களங்களிலும் முத்திரை பதித்தார். நூற்றுக்கணக்கான சிறுகதைகளை இவர் எழுதியிருக்கிறார்.

கர்ணனின் எழுத்தை யதார்த்த உலகைச் சுட்டிக்காட்டும் பாசாங்கற்ற எழுத்தாக மதிப்பிடலாம். எளிமையான மொழியில் எழுதியவர். மனித உணர்வுகளைத் திறம்படக் காட்டுவதில் வல்லவர். தேசபக்தியைத் தூண்டும் கட்டுரைகளையும் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். குழந்தைகள்மீது மிகுந்த அன்பு கொண்டவர். கி.வா.ஜ. தொடங்கி, வண்ணதாசன் வரையிலான இருபது தமிழ்ப் படைப்பாளிகளுடனான தனது அனுபவங்களைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார். 'அகம் பொதிந்தவர்கள்' என்ற நூல் குறிப்பிடத்தகுந்தது. இவரது நூல்களை நர்மதா, மணிவாசகர், கவிதா போன்ற பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. 'அவர்கள் எங்கே போனார்கள்?' நூலுக்கு, 2004ம் ஆண்டின் சிறந்த நூலுக்கான தமிழக அரசின் பரிசு கிடைத்தது. இவரது நூல்கள் கல்லூரிகளில் பாடநூலாக இடம்பெற்றுள்ளன. சில நூல்கள் மாணவர்களால் ஆய்வு செய்யப்பட்டுமுள்ளன.

அன்றைய, இன்றைய எழுத்துலகம் பற்றி ஒரு நேர்காணலில், "மணிக்கொடி கால எழுத்தாளர்கள் தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும், தர்மத்தைக் காக்கவும் எழுதினார்கள். அவர்கள் சாதி, மத, பேதம் பார்க்காமல் இளம் எழுத்தாளர்களை ஆதரித்து ஊக்குவித்தனர். ஆனால், இன்று அப்படியல்ல. பணத்துக்காகவே பலரும் எழுதுகிறார்கள். எழுத்தாளர்கள்கூட புதிய எழுத்தாளரை சாதி, மதம் பார்த்தே ஆதரிக்கும் அவலநிலை உள்ளதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்" என்கிறார்.

எழுத்தாளர் நா. பார்த்தசாரதி தொடங்கிய மதுரை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவராகப் பொறுப்பு வகித்த சிறப்பு கர்ணனுக்கு உண்டு. விக்கிபீடியா பரப்புரைக் கருத்தரங்குகள் உள்பட பல்வேறு இலக்கிய விழாக்களில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருக்கிறார். கவிதை உறவு அமைப்பின் 43ம் ஆண்டு விழாவில் 'வாழ்நாள் சாதனையாளர் விருது' பெற்றிருக்கிறார். கலை இலக்கியப் பெருமன்ற விருது உள்பட பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருக்கிறார். இவரது வாழ்க்கைக் குறிப்பு, 'ஊனமுற்றோரின் உயரிய சாதனைகள்' என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.

கர்ணன் எழுதியவை
இருபதிற்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து நாவல்கள், ஐந்து குறுநாவல் தொகுப்புகள் என்று பல நூல்களை எழுதியிருக்கிறார் கர்ணன்.
சிறுகதைத் தொகுப்புகளில் சில: 'கனவுப் பறவை', 'கல்மனம்', 'ஆத்ம நிவேதனம்', 'முகமற்ற ம‌னிதர்கள்', 'மறுபடியும் விடியும்', 'இந்த மண்ணின் உருவம்', 'இசைக்க மறந்த பாடல்', 'நெருப்பில் விளைந்த நிலவுப்பூ', 'பொழுது புலர்ந்தது '
நாவல்கள்: 'உள்ளங்கள்', 'காந்தத் துாண்டிலில் சிக்கிய கனவு மீன்', 'ஊமை இரவு', 'நகரும் பொழுதுகள்', 'பாலைவனத்தைக் கடக்கும் பசுக்கள்',
வாழ்க்கை வரலாறு/கட்டுரை நூல்கள்: 'விடிவை நோக்கி', 'ரத்தம் தோய்ந்த அந்த நாட்கள்', 'இன்று இவர்கள்', 'சரித்திரம் உருவாக்கிய சந்திப்பு', 'வாழ்விக்கும் மனிதர்கள்', 'வெளிச்சத்தின் பிம்பங்கள்'
கவிதைத் தொகுப்பு: 'வாழ்ந்ததின் மிச்சம்'
'மயங்காத மனசுகள்', 'திவ்யதாரிணி' போன்ற குறுநாவல்களையும் எழுதியிருக்கிறார்.


இத்தனை நூல்களை எழுதிக் குவித்திருந்தாலும், எழுத்தாளர்கள் உள்படப் பல பிரபலங்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றிருந்தாலும் கர்ணன் இறுதிவரையில் வறுமையிலேயே வாழ்ந்தார். தமிழக அரசு வழங்கும், முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்காகக் கொடுக்கப்படும் உதவித் தொகையைக் கொண்டே தனது வாழ்க்கையை நடத்தினார். மனைவியின் மரணம், உறவுகளின் உதாசீனம் போன்றவற்றால் துயருற்றாலும், எழுத்தை ஒரு வேள்வியாகவே கருதி இறுதிவரை செயல்பட்டு வந்தவர், வயது மூப்பினால் ஜூலை 20 அன்று மதுரையில் காலமானார்.

வாசிப்பை வாழ்நாள் முழுவதும் நேசித்த கர்ணனுக்கு இக்கட்டுரையே அஞ்சலியுமாகிறது.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com