ஆகஸ்டு 2020: வாசகர்கடிதம்
நாட்டைப் பாதுகாக்கும் ராணுவ வீரரின் அப்பாவைக் காப்பாற்றி, அந்தத் தகவலை அவருக்கு அனுப்பும் டாக்டரின் சேவை, 'முக்கியமான பேஷண்ட்' (ஜே .ரகுநாதன்), அன்பே சிவமாக நின்ற 'ஏடெல்வைஸ் என்றொரு பூ' (அ. சந்திரசேகரன்) சிறுகதைகள் அருமை.

நிறைகுடமான எழுத்தாளர் கு.ப. சேது அம்மாள் ஆற்றிய தொண்டுகளைப் படிக்கப் படிக்க, பெண்ணினத்தின் மதிப்பை அவர் எந்த அளவிற்கு உயர்த்தியுள்ளார் என்று மிகப் பெருமையாக உள்ளது. தெளிந்த நீரோட்டமாக நெளிந்து சென்ற அவரின் 'குலவதி' அழகான சிறுகதை. சிறப்பாக இருந்தது. இந்தக் காலத்திற்கும் பொருத்தமான எழுத்தாளரின் சிந்தனை அதில் அழகாக வெளிப்படுகின்றது.

மறக்க முடியாத இனிய திரைப்படப் பாடல்களைத் தந்த முன்னோடி கு.மா. பாலசுப்பிரமணியம் அவர்களைப் பற்றியும் ,நேர்காணல் பகுதியில் ஹரி கிருஷ்ணன் அவர்களால் வீரு என்று பிரியமாக அழைக்கப்படும் கவிமாமணி பா .வீரராகவன் அவர்களைப் பற்றியும் படித்து மகிழ்ந்தோம்.

சவாலான இந்தக் காலகட்டத்திலும் எங்களுக்கு அற்புதமான இனிய தென்றலைத் தந்துகொண்டிருக்கும் தென்றல் குழுவின் அன்பு உள்ளங்களுக்கு எங்கள் நன்றிகள்.

சசிரேகா சம்பத்குமார்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

★★★★★


ஜூலை மாதத் தென்றல் இதழில் கவிமாமணி வீரராகவன் நேர்காணல் வாசித்தேன். அவர் சந்தித்த மனிதர்கள்மீது அவர் எப்போதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார். அதற்குக் காரணம் அவருடைய மனித நேயம்தான். இந்த நேயம்தான் வாழ்வின் அல்லல்களால் அயர்ந்துபோய்விடாமல் தெம்புடன் நடக்கின்ற உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. இந்த நேயம்தான் அவருக்கு இயல்பான நகைச்சுவை உணர்வை ஊட்டியிருக்கிறது. இதே நேயம்தான் அவருடைய எந்தக் கவிதையிலும் ஒரு மின்னல் வார்த்தையைப் பதித்துத் தந்திருக்கிறது.

அவர் பல்லாண்டு காலம் எல்லா நலங்களும் பெற்றுப் பெருவாழ்வு வாழவும், அவருடைய சொல்லார்ந்த தமிழால் சுவையான கவிதைகளை வழங்கிக்கொண்டே இருக்கவும், நான் எல்லாம் வல்ல பராசக்தியிடம் வேண்டுகின்றேன்.

இசைக்கவி ரமணன்,
சென்னை

★★★★★


தென்றல் ஜூலை இதழில் திரு வீரராகவன் நேர்காணல் மிக அருமை. நல்லூர் இலக்கிய வட்டத்தின் ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளுக்குச் சென்று இருக்கிறேன். நானும் நங்கநல்லூர்வாசி (1968 முதல்) என்பதில் பெருமை கொள்கிறேன். திரு வேணு கோபால் (நடத்துநர்) பற்றி. மிகவும் நல்ல பெயர் அவருக்கு. அக்காலத்தில் வழியில் நங்கநல்லூர்ப் பயணிகளை அண்ணா சாலை போன்ற இடங்களில் பார்த்தால்கூட நிறுத்தி ஏற்றிக்கொண்டு வருவார். அதில் என் மனைவியும் ஒருவர். வேணுவுக்கு 'சிஸ்டர் கண்டக்டர்' என்றும் ஒரு பெயர் உண்டு. அவர் எங்கிருந்தாலும் வாழ்க.

G. ஸ்ரீநிவாசன்,
சென்னை

© TamilOnline.com