ஒரு திருடன் தற்செயலாக கிருஷ்ணனின் வசீகரமான பாலலீலைகளைச் செவிமடுத்தான். ஒரு நிமிடம்தான், போய்விடலாம் என நினைத்தான். ஆனால் அவனால் அங்கிருந்து நகரமுடியவில்லை. பாலகிருஷ்ணர் அணிந்திருந்த நகைகளைப் பற்றி விவரிக்கக் கேட்டான்; அவற்றைத் திருடிவிட மிகுந்த ஆசை ஏற்பட்டது. "கிருஷ்ணர் தனியாக மாடு மேய்த்துக்கொண்டு இருப்பாரா, அவருடன் பலராமர் இருப்பாரா, இல்லை பிற கோபாலர்கள் இருப்பார்களா?" என்று திருடன் பண்டிதரைக் கேட்டான். "பிருந்தாவனத்தில், யமுனைக் கரையில்" என்று நறுக்கென்று பதில் சொன்னார் பண்டிதர். தனியாக இருக்கும்போது கிருஷ்ணனைப் பிடித்து நகைகளைக் கவர்ந்துவிட எண்ணி, திருடன் பிருந்தாவனத்துக்கு விரைந்தான்.
மறுநாள் காலையில் ஒரு மந்தையை மேய்த்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவனைத் திருடன் கண்டுகொண்டான்... அப்பேர்ப்பட்ட அழகு! அவனிடம் இருந்து எப்படி நகையைக் கழற்றுவது? ஒரே ஒரு நகையை எடுத்தால்கூட அவனது ஒளி குறைந்துவிடுமோ என்று தோன்றவே, அப்படிச் செய்யத் திருடனின் மனம் ஒப்பவில்லை. அந்த அழகின் பேரானந்தத்தில் ஆழ்ந்து பலமணி நேரம் நின்றுகொண்டிருந்தான் திருடன்.
"உனக்கு என்ன வேண்டும்?" என்று கிருஷ்ணனே கேட்டான், ஆனால் இவனுக்கோ கேட்க மிகவும் வெட்கமாகிவிட்டது. கிருஷ்ணனுக்குத் தெரியாதா என்ன, தான் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் கழற்றிக் கொடுத்துவிட்டான். வெட்கமும் மகிழ்ச்சியும் பெருகின திருடனுக்கு. அவன் அப்படியே சிறுவனின் பாதத்தில் விழுந்தான். எழுந்து பார்த்தால் கிருஷ்ணனைக் காணவில்லை.
தன் கிராமத்துக்குத் திரும்பிப் போய் பண்டிதரிடம் நகையைக் காண்பித்து, "அன்றைக்கு நீர் மிகவும் விசேஷமாகக் கூறிய கிருஷ்ணனின் நகைகள் இவைதாமா? நான் பிருந்தாவனத்துக்குப் போனேன், அவனே எனக்கு இவற்றைக் கொடுத்தான்" என்றான். பண்டிதர் திருடனின் காலில் தடாலென்று விழுந்தார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? நம்பிக்கை அற்புதங்களைச் செய்யும். அது உன்முன் கடவுளையே தோன்ற வைத்து, நீ எதை அவர் கொடுப்பார் என்று நம்புகிறாயோ அதைக் கொடுக்கச் செய்யும்.
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா |